RSS

சாரங்கி

சாரங்கி ஒரு வட இந்திய மக்களின் இசைக்கருவியாகும். உணர்ச்சிமயமான இசையைத் தர வல்லது இந்த சாரங்கி என்ற இசைக்கருவி .அதன் ஒலியை கேட்டாலே நம் மனதில் ஒரு வித உருக்கமான மனநிலை குடி கொண்டு விடும். சாரங்கி எனும் வார்த்தை இந்தியில் நூறு (சௌ) ,வண்ணங்கள் (ரங்) எனும் இரு வார்த்தைகளின் கலப்பு ஆகும். நூற்றுக்கணக்கான வண்ணங்களின் வனப்பும் இன்பங்களையும் தரவல்ல இசைக்கருவி இது என்று பொருள்படும்படி பெயர் வைத்திருக்கிறார்கள்.  பதினெட்டாம் மற்றும் பத்தொன்பதாம் நூறாண்டுகளில் அரண்மனைகளில் ஆடல் பாடல் கேளிக்கைகளில் உபயோகப்படுத்தப்பட்ட கருவிகளில் சாரங்கி முக்கிய பங்கு வகித்தது. வட இந்திய தந்திக்கருவிகளில் சாரங்கி ஒரு மிகப்பிரபலமான கருவியாகவே இருந்து வருகிறது. வட இந்திய பாணியில் அமைந்த இசைக்கச்சேரிகள் என்றாலே பக்கவாத்தியமாகவோ அல்லது தனி ஆவர்த்தனமாகவோ சாரங்கி கண்டிப்பாக இடம் பெற்றுவிடும். சாரங்கி டுன் (tun) எனப்படும் ஒரு வித மரத்தினால் ஒரு விதமான பெட்டி செய்யப்பட்டு அதன் மேல் கீழ்ப்பகுதியில் ஆட்டுத்தோல் போர்த்தப்படுகிறது. சுமார் 64-67 சென்டிமீட்டர்கள் நீளம் இருக்கும்.  இந்த பெட்டியின் உள்ளே ஒன்றும் இல்லாமல் வெறுமையாகத்தான் இருக்கும்.இதன் மேல் போர்த்தப்படும் தோலின் மேல் தான் சாரங்கியின் தந்திகள் ஓடும். சாரங்கிக்கு மொத்தம் 40 தந்திகள் உண்டு. ஆனால் இவற்றில் மூன்று தந்திகள் மட்டுமே ஒலியை நிர்ணயிக்க பயன்படும். மற்றவை எல்லாம் சும்மா ஒத்து ஊதுவதற்குத் தான். ஆங்கிலத்தில் இதற்கு "Sympathetic strings" என்று கூறுவர். இவை ஒலியின் மாற்றத்திற்கு உதவாவிட்டாலும் நன்றாகவே ஒலியைக் கூட்டி விடும். சாரங்கிக்கு உபயோகப்படுத்தப்படும் வில் பொதுவாக தேக்கு மரக்கட்டையால் செய்யப்படும். இது நம் வயலினின் வில்லை விட கனமாக இருக்கும்.அதனூடே குதிரை வாலினில் தோன்றும் முடியை கட்டி இந்த வில்லினை உபயோகிப்பார்கள். இந்த சாரங்கியை வாசிக்கும் விதம் வயலினை திருப்பிப்போட்டு வாசிப்பது போலத்தான். வயலினில் இடது கைகளால் தந்தியை கீழ்புறம் தொட்டுக்கொண்டு மேல்புறம் வில்லினை தேய்ப்போம் அல்லவா?? ஆனால் சாரங்கியில் இதற்கு நேர் எதிர். இதில் மேற்புறம் இடது கை நகங்களால் தந்தியில் அழுத்தம் கொடுத்துக்கொண்டு வலது கையினால் வில்லினை  கீழே தேய்ப்பார்கள். வயலினைப் போல் இல்லாமல் இந்த வாத்தியத்தில் விரல் நகங்கள் மூலமாக தந்தியின் மேல் அழுத்தம் தர வேண்டும்,விரல்களால் அல்ல. இதனால் இந்த வாத்தியத்தை வாசிப்பது மிகவும் கடினம். அதுவும் இல்லாமல் இந்த வாத்தியத்தை வாசிக்க கற்றுக்கொள்வதும் மிகவும் கஷ்டம். இதை வாசிக்க பழகுவதற்குள் விரல்களிலிருந்து வரும் வலியினை பொறுத்தாக வேண்டும். அதுவுமில்லாமல் தந்தியின் மேல் தேய்த்து தேய்த்து நகங்களின் மேல் ஒரு விதமான பள்ளம் கூட பதிந்து விடும். இதனை பெண் வாத்தியக்கலைஞர்கள் கற்றுக்கொள்ளவும் வாசிப்பதற்கும் கஷ்டமாக இருக்கிறது என்று தான் தில்ருபா,எஸ்ராஜ் போன்ற வாத்தியங்கள் சாரங்கியை ஒற்றி உருவாக்கப்பட்டனவாம். இவை அனைத்திலும் எழுப்பப்படும் ஒலி ஒரளவிற்கு ஒரே மாதிரி தான் இருக்கும். இந்தியா தவிர பாகிஸ்தான் மற்றும் நேபாளத்தில் கூட இந்த இசைக்கருவி உபயோகப்படுத்த படுகிறது. ஹிந்துஸ்தானி போன்ற பாரம்பரிய இசை வகைகளில் மட்டுமில்லாமல் நாட்டுப்புற இசை மெட்டுக்களிலும் சாரங்கி மிக பிரபலம். குறிப்பாக ராஜஸ்தானிய நாட்டுபுற பாட்டுக்கள் என்றால் சாரங்கியின் ஒலியை நிறைய கேட்கப் பெறலாம்.இந்தியாவில் இந்த இசைக்கருவி வித்தகர்கள் என்று பார்த்தால் பண்டித் ராம் நாராயண்,சுல்தான் கான் போன்றோரை சொல்லலாம். பாகிஸ்தானிய இசை கலைஞர்கள் என்றால் உஸ்தாத் அல்லா ரக்கா முசாபிரி,டாக்டர் தைமூர் கான் என்று தனி பட்டியல் உண்டு.நேபாளத்தில் ஜலக் மான் கந்தர்பா,கிம் பஹதுர் கந்தர்பா எனும் ஒரு தனி பட்டியலை விக்கி தருகிறது. "தீபாவளி" படத்தில் "காதல் வைத்து" என்ற ஒரு பாடலில்,நடுவில் வரும் இசையில் மிக அழகான சாரங்கி இசை கலந்திருக்கும். அது தவிர "தளபதி" படத்தில் வரும் "சின்ன தாயவள்" படத்திலும் இதை கேட்கப்பெறலாம். "காதல் கோட்டை' படத்தில் "சிகப்பு லோலாக்கு குலுங்குது குலுங்குது " எனும் பாட்டு ஒன்று வரும். ராஜஸ்தானிய இசை மெட்டில் அமைந்திருக்கும் பாடல் என்பதால் சாரங்கியின் இசைப்பயன் படுத்தப்பட்டிருக்கிறது.




http://www.youtube.com/watch?v=6YZM7jVx7iw&feature=related

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS