RSS

வயலின் மன்னர்.... குன்னக்குடி வைத்தியநாதன்

(தலைப்பை கிளிக் செய்து முழுக் கட்டுரையைப் படிக்கவும்)

குன்னக்குடி இந்தியாவின் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு வயலின் கலைஞர், மற்றும் இசையமைப்பாளர்.  1935ஆம் ஆண்டு மார்ச் 2ஆம் தேதி சிவகங்கை மாவட்டம் குன்னக்குடியில் இராமசாமி சாஸ்த்திரி - மீனாட்சி ஆகியோருக்கு வைத்தியநாதன் பிறந்தார். கர்நாடக இசைக் கலைஞரான தனது தந்தை இராமசாமி சாஸ்த்திரியிடம் இளம் வயதிலேயே கற்கத் தொடங்கிய வைத்தியநாதன், வாய்ப்பாட்டுடன் வயலின் இசைக்கவும் கற்றுத் தேர்ந்தார். இவர் இந்திய அரசின் பத்மஸ்ரீ விருது பெற்றவராவார். கருநாடக இசையை வயலினில் வாசித்தோரில் மிக முக்கியமானவராகக் கருதப்படுகிறார். நெற்றி முழுவதும் நீண்ட திருநீற்றுப் பட்டையும் பெரிய குங்குமப் பொட்டும் அணிந்து காட்சியளித்தவர். வயலில் உழுதோரையும் வயலின் கேட்கச் செய்தவர் என இவரைப் பற்றிக் குறிப்பிடப்படுகிறது.
12 வயதிலேயே இசைக் கச்சேரிகளில் பங்கேற்று சாதனை புரிந்த வைத்தியநாதன், கர்நாடக இசையில் சிறந்து விளங்கிய வித்தகர்களான அரியாக்குடி இராமானுஜ ஐயங்கர், செம்மங்குடி சீனிவாச ஐயர், மஹாராஜபுரம் சந்தானம், சித்தூர் சுப்ரமணிய பிள்ளை ஆகியோருடன் இணைந்து பல கச்சேரிகளில் பங்கேற்றார்.
கர்நாடக இசைக் கலைஞர்கள் மட்டுமின்றி, நாகஸ்வர மேதைகள் திருவாடுதுறை டி.என். இராஜரத்தினம் பிள்ளை, திருவென்காடு சுப்ரமணிய பிள்ளை ஆகியோருடன் இணைந்து ரசிகர்களை மகிழ்வித்தார். தனித்தும் இசைக் கச்சேரிகளை நடத்திய வைத்தியநாதன், கர்நாடக இசையை பாமர மக்களும் ரசிக்கும் வண்ணம், அவர்கள் மிகவும் ரசிக்கும் சிறந்த திரையிசைப் பாடல்களையும் இடையிடையே வாசித்து மகிழ்வித்தார். இசை வித்தகர்களில் இருந்து பாமர மக்கள் வரை தமிழ்நாட்டின் மூலை முடுக்குகளிலும் வைத்தியநாதன் என்றால் இசை மழை என்று பெருமை பேசும் அளவிற்கு இளம் வயதிலேயே புகழ் பெற்றார்.

திரையிசையமைப்பதிலும் பங்கேற்றுவந்த குன்னக்குடி வைத்தியநாதனை தனது வா ராஜா வா படத்தின் இசையமைப்பாளராக அறிமுகம் செய்தார் .பி.நாகராஜன். அந்த படமும், பாடல்களும் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றன. அதனைத் தொடர்ந்து திருமலை தென்குமரி, தேவர் பிலிம்ஸ் தயாரித்த தெய்வம் படங்களுக்கு இசையமைத்தார் வைத்தியநாதன்.
தெய்வம் படத்தில் கர்நாடக இசை மேதை மதுரை சோமு பாடிய மருதமலை மாமணியே முருகையா என்ற பாடல் மிகவும் பேசப்பட்டது. அப்பாடலை விழாக் காலங்களில் தமிழகம் முழுவதும் பயணித்து மதுரை சோமு பாடினார். அப்பாடலை தனது வயலினில் இசைத்து தனது வாழ்வின் இறுதிக் காலம் வரை மக்களை மகிழ்வித்து வந்தார் வைத்தியநாதன்.
22 தமிழ் திரைப்படங்களுக்கு இசையமைத்த குன்னக்குடி வைத்தியநாதனுக்கு, திருமலை தென்குமரி திரைப்படம் சிறந்த இசையமைப்பாளருக்கான விருதை பெற்றுத்தந்தது. தமிழக அரசின் கலைமாமணி விருதும் அளிக்கப்பட்டு பெருமைபடுத்தப்பட்டவர் வைத்தியநாதன்.
வயலின் வாசிப்பில் பல புதுமைகளைச் செய்த வைத்தியநாதன், தவில் கலைஞர் வலையப்பட்டி சுப்ரமணியத்துடன் இணைந்து 3,000 கச்சேரிகளை நடத்தியுள்ளார். தமிழ்நாட்டில் மட்டுமின்றி, அயல் நாடுகளுக்கும் சென்று வயலின் இசைக் கச்சேரிகளை நடத்தியுள்ள வைத்தியநாதனுக்கு மத்திய அரசு பத்ம ஸ்ரீ விருதளித்து பெருமைபடுத்தியது.
சங்கீத நாடக அகாடமி, சங்கீத மாமணி, கர்நாடக இசை ஞானி போன்ற பெருமைமிக்க விருதுகளையும் வைத்தியநாதன் பெற்றுள்ளார். தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் செயலராகவும், திருவையாறு தியாகராஜர் விழாக் குழுவின் தலைவராக 28 ஆண்டுகளும் பணியாற்றியுள்ளார். ராக ஆராய்ச்சி மையம் என்ற அமைப்பை நிறுவி இசையால் நோய்களை குணமாக்க முடியுமா என்ற ஆய்விலும் ஈடுபட்டிருந்தார்.

குன்னக்குடி வைத்தியநாதனுக்கு மனைவி பாகீரதி, சேகர், சீனிவாசன், ஸ்ரீதர், பாலசுப்ரமணியன் ஆகிய 4 மகன்களும், மகள் பானுமதி இராமகிருஷ்ணனும் உள்ளனர்.  இவர் 2008, செப்டம்பர் 8 ஆம் நாள் தனது 75 ஆவது வயதில் சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் இரவு 9மணியளவில் மாரடைப்பால் காலமானார்



  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

2 comments:

ப.கோபாலகிருஷ்ணன் (p.gopalakrishnan) சொன்னது…

குன்னக்குடியை பற்றி நான் சிறுவயதிலிருந்து அறிந்திருந்தாலும் அவரைப் பற்றி முழுமையாக உங்கள் மூலமாகத்தான் அறிந்து கொண்டேன் . நன்றி.

மழை சொன்னது…

மலேசிய பெண்ணுக்கு இவ்வளவு தமிழ் மற்றும் இசை ஆர்வமா?ஹ்ம் ஆச்சர்யம்தான்
சிங்கப்பூர்.மலேசிய பெண்கள் மீது வேறுபட்ட எண்ணம் எனக்கு இருந்தது.