RSS

கிராமிய இசை


இசை என்ற சொல்லுக்கு இசைய வைத்தல் என்பது பொருள். மனிதனையும் மற்ற உயிரினங்களையும், ஏன் இறைவனையுமே இசைய வைக்கின்ற, இணங்கச் செய்கின்ற ஓர் அரும் சாதனம் இசை. இசையைத் தான் சுவாசுக்கும் மூச்சில் கலந்து வாழ்ந்தவன் தமிழன். பண்டைக்காலத்தில் கிராமப்புறங்களில் வாழ்ந்த மக்கள் தம் பண்பாடு, தொழில் நாகரீகம், பழக்கவழக்கங்கள், உறவுமுறை, பொழுதுபோக்கு, விழாக்கள் போன்றவற்றில் சில நியதிகளைக் கடைப்பிடித்து வந்துள்ளனர். அவற்றைப் பாடல் மற்றும் கதைகள் வழியாகவும் தொன்றுதொட்டு எழுதா வரிகளாக மனதில் பதியச்செய்து கொண்டு வந்தனர்.
கிராமிய இசை, கிராமங்களில் வசிக்கும் சாதாரண மக்கள் தக்களுக்கென்று வகுத்துக்கொண்ட ஒருவகை இசையாகும். கிராமிய இசைக்கு, நாடோடி இசை, நாட்டுப்பாடல்கள் என்ற பெயர்களும் உள்ளன. கிராமிய இசையும் பாடல்களும் இனியவை, எளியவை, எழுதப்படாதவை, வாயில் பிறந்து, செவிகளில் நிறைந்து உள்ளத்தில் பதிவு பெற்றவைகளாகும். பயிற்சிப் பெறாத குரல்கள், பாடுவதற்கு ஏற்ற வகையில் அமைந்திருப்பதை நாம் காணலாம், எளிமையான இப்பாடல்களில் ஒரு மிகுந்த கவர்ச்சி இருப்பதையும் நாம் உணரமுடிகிறது.
கிராமிய பாடல்கள் வழியாக கிராம மக்களின் கற்பனைத் திறனையும் நகச்சுவை உணர்ச்சிகளையும் காணமுடிகிறது. கிராமிய பாடல்கள் பலவகை உள்ளன. மனிதனின் தொட்டில் காலத்திலிருந்து சுடுகாடு போகும்வரை பாடப்படும் இப்பாடல்கள்.

வகைகள் :
1) ஒழுக்கப்பாட்டு, வேதாந்தப்பாட்டு, பழமொழிப்பாட்டு, இறை வணக்கப்பாட்டு
2) கொண்டாட்டங்காலங்களில், சுகம், துக்கம் போன்ற நிகழ்வுகளில் சமூகத்தினர் பலரும் இணைந்து குழுவாகப் பாடப்படும் பாடல்கள் தாலாட்டுப்பாட்டு, நலங்குப்பாட்டு, சீமந்தப்பாட்டு, ஆரத்திப்பாட்டு, ஊஞ்சல்பாட்டு, மசக்கைப்பாட்டு, நோன்புப்பாட்டு, சடங்குப்பாட்டு, ஒப்பாரிப்பாட்டு ஆகியவைகளாகும்.
3) மகிழ்ச்சி, மனநிம்மதி மற்றும் மன உற்சாகத்திற்காகப் பாடப்படும் பாடல்களைப் புதிர்பாட்டு, கோமாளிப்பாட்டு, கும்மிப்பாட்டு, கோலாட்டப்பாட்டு என்பர்.
4) மனிதர்கள் கூடித் தொழில் செய்யும் போது அக்கூட்டுறவில் பிறப்பவை தொழில்பாட்டு. தொழில்பாடல்களில் அன்பு மலர்வதையும், பாசம் பொங்குவதையும், உழைப்பின் ஆர்வத்தையும் காட்டுகிறது. விருப்பு வெறுப்புகளையும், சுக துக்கங்களையும் வெளியிடுகின்றன தொழில்பாடல்கள். தொழில்பாடல்களில் ஏலேலங்கடி பாட்டு, தில்லாலங்கடிப் பாட்டு, வண்டிக்காரன் பாட்டு, உழவுப்பாட்டு, நடவுப்பாட்டு, தெம்மாங்குப்பாட்டு, சுண்ணாம்பு இடிப்பார் பாட்டு, ஏற்றப்பாட்டு அடங்கும்.
5) சில சந்தர்ப்பங்களுக்கென்றுப் பாடப்படும் மழைப்பாட்டு, சுகாதார கும்மிப் பாட்டு, குழந்தைப் பாட்டு, புராணப்பாட்டு, பூசாரிப்பாட்டு, விழாப்பாட்டு, சிகிச்சைப்பாட்டு முதலியவை.
6) ஒரே பாடலில் ஒன்றுக்கு மேற்பட்ட தன்மை இருப்பின் அப்பாடல் பன்மலர் பாடல் எனப்படும்.

கிராமிய இசையில் பல்வேறு மெட்டுக்களைக் காண்கிறோம். அவற்றில் முக்கியமானவை ஆனந்தக்களிப்பு, சிந்து, ஓடம் மற்றும் இலாவனி முதலியவை ஆகும். சிந்து பலவகைப்படும். அவை, காவடிச்சிந்து, வண்டிச்சிந்து, நொண்டிச்சிந்து, வழிநடைச்சிந்து ஆகும். காவடிச்சிந்தின் தந்தை என்று அழக்கப்படுபவர் அண்ணாமலை ரெட்டியார் ஆவார். அண்ணாமலை ரெட்டியாரின் காவடிச்சிந்தில் மிகவும் பற்று கொண்டிருந்த மாகாகவி சுப்பிரமணிய பாரதியார் தானும் சில காவடிச்சிந்துக்களை இயற்றியுள்ளார்.
கிராமியப்பாடல்கள் அதிகமாக ஆனந்த பைரவி, நாதநாமக் கிரியை, நீலாம்பரி, புன்னாகவராளி, குறிஞ்சி, நவரோஸ் போன்ற இராகங்களில் அமைந்திருக்கின்றன.  “தென்னக இசை” நூலிலிருந்து கிடைக்கப்பெற்ற சில கிராமிய பாடல்களின் எடுத்துக்காட்டுகள் :

1) தாலாட்டுப்பாடல்
தங்கத்தால் பேனாவாம் உங்கப்பாவுக்கு
சாஞ்சி எழுத பஞ்சு மெத்தை
ஆராரோ ஆரரிரோ ஆராரோ
மாமன் அடித்தானோ மல்லிகைப் பூச்செண்டாலே
சித்தி அடித்தாளோ சீராட்டும் கையாலே
பாட்டி அடித்தாரோ பால்வார்க்கும் கையாலே
அக்கா அடித்தாளோ அரளிப்பூச்செண்டாலே
ஆரடித்து நீ அழுதாய் அடித்தாரைச் சொல்லி அழு

2) வண்டிக்காரன் தெம்மாங்குப்பாடல்
பச்சை வண்டி பவள வண்டி பலபேரும் ஏறும் வண்டி
உப்பு புடிச்சவண்டி லேலேலங்கடிலேலோ
உடுமலைபேட்டை போற வண்டி லேலேலங்கடிலேலோ

3) சுண்ணாம்பு இடிக்கும் பெண்கள் பாடல்
ஆந்த அலரும் மரம் ஏலேலம்பா ஏலம்
ஆம்பளைங்க தூங்கும் மரம் ஏலேலம்பா ஏலம்
ஆம்பலங்க மூஞ்ச பாத்தா ஏலேலம்பா ஏலம்
ஹைகோர்ட்டு குரங்கு போல ஏலேலம்பா ஏலம்
பொண்ணு புளிய மரம் ஏலேலம்பா ஏலம்
பொம்பளைங்க தூங்கும் மரம் ஏலேலம்பா ஏலம்
பொம்பளைங்க மூஞ்ச பாத்தா ஏலேலம்பா ஏலம்
செஞ்சு வைச்ச செடியைப் போல ஏலேலம்பா ஏலம்

4) தெருக்கூத்துப்பாடல்
முப்பது பணம் கொடுத்து மூணு குளம் வெட்டினேன்
ரெண்டு குளம் பாழு ஒண்ணு தண்ணியே இல்லை
தண்ணியில்லா குளத்திலே மண்ணு வெட்ட மூணு பேரு
ரெண்டு போரு நொண்டி, ஒருத்தன் கையே இல்ல
கையில்லா குசவன் செய்த பானை மூணு பானை
ரெண்டு பானை ஓட்டை ஒண்ணு வேகவே இல்ல
வேகாத பானையிலே போட்டரிசி மூணு அரிசி
ரெண்டு அரிசி நறுக்கு ஒண்ணு வேகவே இல்ல
வேகாத சோத்துக்கு விருந்தாடி மூணு பேரு
ரெண்டு பேரு பட்னி ஒருத்தன் உண்ணவே இல்ல


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS