RSS

காவடிச்சிந்து (அண்ணாமலை ரெட்டியார்)

(தலைப்பை கிளிக் செய்து முழுக் கட்டுரையைப் படிக்கவும்)


காவடிச்சிந்து (அண்ணாமலை ரெட்டியார்)
(19-ஆம் நூற்றாண்டு)

      காவடிச்சிந்தின் தந்தை என்று அழைக்கப்படுவதற்குத் தகுதியானவர் அண்ணாமலை ரெட்டியார் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சென்னிகுளம் என்ற ஊரில் 1865-ஆம் ஆண்டு பிறந்தார். இவருடைய தந்தை சென்னவ ரெட்டியார்; தாய் ஓவு அம்மாள்.
      இளமையிலேயே இவர் தமிழில் ஆர்வம் கொண்டு இராமசாமி என்ற புலவரிடமிருந்து தமிழ் இலக்கியங்களைப் பயின்று வந்தார். மீனாட்சிசுந்தர கவிராயரும் உதவிப்புரிந்தார். சிலகாலம் உ.வே சாமிநாத ஐயரிடம் நன்னூல் கற்றார். மனப்பாடம் செய்யும் ஆற்றலும் இவரிடம் சிறந்து விளங்கியது.
      ஊற்றுமலை ஜமீன்ந்தார் இருதாலய மருதப்ப தேவர் இவரை ஆதரித்தார். ஜமீந்தார், கழுகுமலைக்குக் காவடி எடுத்த போது, அவருக்காக அண்ணாமலை ரெட்டியாரால் பாடப்பட்டவைகளே காவடிச்சிந்து ஆகும்.
      விநாயகர் துதியுடன் இந்தப் பாடல்கள ஆரம்பிக்கின்றன. இதற்குப் பின் முருகன்மீது சில பாடல்கள் உள்ளன. கழுகுமலை நகர், மலை, கோயில், குளம் ஆகியவையெல்லாம் மற்றப் பாடல்களில் விவரிக்கப்பட்டுள்ளன. முருகன் மிகவும் உன்னதமான நாயகனாகயும், மனித ஆன்மா அவருடன் ஒன்றிப்பதற்கு விழைவதாகவும்  சித்தரிக்கப்பட்டுள்ளது. பாடல்கள் அழகிய மெட்டுக்களைக் கொண்டுள்ளன. செய்யுள் நயம் சிறப்பாக உள்ளது. ஹரிகாம்போஜி, கரகரப்பிரியா, நடனபைரவி, சக்கரவாகம், முகாரி, ஆனந்த பைரவி, செஞ்சுருட்டி முதலிய இராகங்கள் கையாளப்பட்டுள்ளன. “புள்ளிக் கலாபமயில்” (கீழ்லுள்ள காணொலியில் இப்பாடலைக் காணலாம்) போன்ற சிந்துக்களின் இசை மிகவும் பழகிப்போய், “காவடிச்சிந்து மெட்டு” என்றே வழங்கப்படுகின்றது., ஆதிதாளம் மட்டுமின்றி, மிச்ரசாபு, கண்டலகு, திச்ரலகு, ஏகம், ரூபகம் முதலிய தாள வகைகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன. மற்றும் “முடுகு” என்ற விரைவாக பாடப்படும் பகுதியும் காவடிச்சிந்தின் ஒரு விசேஷ அம்சமாகும். “செந்தின் மாநகர்” என்று தொடங்கும் பாடலில் அதீத எடுப்பு காணப்படுகிறது. “கண்ணாயிரம்” என்று தொடங்கும் பாடலின் காலப்பிரமாணம் (சதுஸ்ர ஏகம்) வியப்பதற்குரியது; காவடி எடுத்து ஆடுவோர் கால் பெயர்த்து வைப்பதைக் காண்பது போன்ற உணர்ச்சி கேட்போர் உள்ளத்தில் எழும்.
      அண்ணாமலை ரெட்டியாரின் காவடிச்சிந்தில் மிகவும் பற்று கொண்டிருந்த மாகவி சுப்பிரமணிய பாரதியார் தானும் சில காவடிச்சிந்துக்களை இயற்றியுள்ளார். அண்ணாமலை ரெட்டியார் “வீரை தலபுராணம்”, “வீரை நவநீத கிருஷ்ணசாமி பதிகம்”, “கோமதி அந்தாதி” போன்ற நூற்களையும் படைத்துள்ளார். தன்னை ஆதரித்த ஊற்றுமலை ஜமீந்தார் மீது 300-க்கு மேற்பட்ட பாடல் வரிகளைப்பாடியுள்ளார்.
      அண்ணாமலை ரெட்டியார் உரையாடலில் திறமை உள்ளவர். பிறரைக் கவரும் தோற்றம் பெற்றவர். ஆனால் தன் வாழ்க்கையைத் தக்க வழியில் நடத்திச் செல்லாததால், தன் 26-ஆவது வயதில் காலமானார்.
      காவடிச்சிந்துக்களைப் பாடுவதில் ஆர்வம் கொண்டிருந்தவர்கள் காரைக்குடி வீணைச்சகோதரர்கள், மழவராயநேந்தல் சுப்பராம பாகவதர், ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதர் முதலானோர். காவடிச்சிந்து முதல் தடவையாக கல்குளம் குப்புசுவாமி முதலியார் அவர்களால் 1904-ஆம் ஆண்டு வெளிப்படுத்தப்பட்டது. டாக்டர் எஸ். இராமநாதன் அவர்கள் காவடிச்சிந்துகளின் உண்மையான மெட்டுகளைக் கண்டுபிடித்து அவற்றைச் சுரத்தாளக் குறிப்புகளுடன் 1966-ஆம் ஆண்டு வெளியிட்டார்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS