RSS
படித்ததில் பிடித்தது லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
படித்ததில் பிடித்தது லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

கரகம், மகுடாட்டம், ஒயிலாட்டம்


 -> கரகம், சக்தி கரகம், ஆட்டக்கரகம் என இரு வகைப்படும். உடுக்கை, குடம், தாளம், கட்டை, பம்பை, உறுமி, தக்கை, துந்துபி, ஆகிய எட்டும் 
வில்லுப்பாட்டின் பக்க வாத்தியக் கருவிகளாகும்.




-> மகுடம் என்ற தோல் கருவியை அடித்து ஆடப்படுவது மகுடாட்டம். கோல்களை அடித்து ஆடுவது கோலாட்டம்.



-> ஆண்கள் மட்டுமே நிகழ்த்தும் நாட்டுப்புற ஆட்டக்கலை ஒயிலாட்டம்

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

இசை IQ




இசை எல்லோருக்குமே புரிகின்ற ஒரு மொழி என்றே கூறலாம். வார்த்தைகளால் நமது உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதை விட இசையால் வெளிப்படுத்துவது மிகவும் இலகுவாக இருக்கும். அடிப்படையில் இசை என்பது வேறு ஒன்றும் இல்லை: பல ஒலி அதிர்வெண்கள் (audio frequency) கலந்து விதம் விதமான வடிவங்களில் காற்றில் மிதந்து நமது செவிகளை அடைவது தான் இசை என்று கூறுகின்றோம். நமது கண்கள் ஒளியை எவ்வாறு செயலாக்கம் செய்கின்றனவோ, அதே போன்று தான் நமது காதுகளும் ஒலியை செயலாக்கம் செய்கின்றன. உண்மை சொல்லப்போனால் நாம் பிறப்பதற்கு முன்பே இசையைக் கேட்க ஆரம்பித்து விடுகின்றோம். என்ன புரியவில்லையா…? நாம் நமது தாயின் கருப்பையில் இருந்த போது, நமது கண்களால் ஒன்றுமே பார்க்கமுடியாமல் இருந்தோம். ஆனால், நாம் நமது காதுகளால் எப்போதுமே இசையைக் ரசித்துக்கொண்டு இருந்தோம். அது வேறு ஒன்றுமே இல்லை, நமது தாயின் இதயத்துடிப்பு தான். எப்போதுமே நமக்கு தாலாட்டுப் போல் அந்த இதயத் துடிப்பின் இசையில் நாம் உறங்கிக்கொண்டு இருந்திருக்கிறோம்.

இசையில் இன்னும் ஓர் மிக முக்கியமான விசேஷம் இருக்கிறது! சிறுவர்களின் வளர்ச்சி நேரம் இசை அவர்களின் மூளை விருத்தியை தூண்டுகிறது என்பதை ஆராய்ச்சியாளர்கள் அறிந்துள்ளார்கள். அதுவும் அவர்களின் நுண்ணறிவு எண் எனப்படும் Intelligence Quotient (IQ) அதிகரிப்பதற்கு இசை கேட்டாலே போதும் என்று கூறுகின்றார்கள். எனவே, பெற்றோர்களே உங்கள் பிள்ளைகளை சிறு வயதினிலேயே சங்கீதம், பியானோ, புல்லாங்குழல், மிருதங்கம் போன்ற ஏதாவது ஒன்றை கற்றுகொள்ள விடுங்கள்! அவர்கள் மேலும் புத்திசாலிகள் ஆவதற்கு வாய்ப்புகள் உள்ளன!

நன்றி[ Arivu Dose.com - அறிவு டோஸ்]



  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

சிவ பூஜையில் கரடி(கை)...



l

(தலைப்பை கிளிக் செய்து முழுமையாக படியுங்கள்)

சிவ பூஜையில் கரடி(கை)...

கரடிகை என்பது நம் இலக்கியங்களில் இடம்பெரும் ஒருவகைத் தோற்கருவி. கரடி கத்தினாற்போல் ஓசை உடையதாம். இந்த ஓசை காரணம்பற்றியே இந்தக் கருவி கரடிகை என்னும் பெயர் பெற்றது என்று கூறுகிறார் அடியார்க்கு நல்லார். 

கரடிகை அளவு கருவியாகிய மரக்கால் போன்று அமைப்புக் கொண்டது. இசை நூலில் இந்தக் கருவி சமக்கருவி என்ற வகையின் பாற்படுகிறது. வேறு வகையான பிரிவில் தலைக்கருவியாகிறது. அக முழவு வகையைச் சார்ந்தது. பிரம்மன், ருத்திரன், விஷ்ணு என்ற கடவுளர் மூவர்க்கும் இயற்றப்படுவனவாகக் கூறப்படும் கருவிகளுள் கரடிகை என்ற இந்தத் தோற்கருவியும் ஒன்று.

கரடிகை பலாமரத்தால் செய்யப்படும். கனகரடிகை எனக் கூறி, கீழ்க்காணும் அளவுகள் கூறப்படுகின்றன.

சிவ பூஜையில் கரடி என்று சொல்வது கரடி(மிருகத்தை) குறிப்பதல்ல... கரடிகை என்ற வாத்தியம் தான் சரி... 



  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

தமிழ் இசையின் தொன்மை

(தலைப்பை கிளிக் செய்து முழுக் கட்டுரையைப் படிக்கவும்)

இக்கட்டுரையை எழுதியவர் அவுஸ்திரேலியாவில் வதியும் பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா


தமிழ் இசைக்கு இலக்கணம் வகுத்த முதல்நூல் அகத்தியம் என்று அறிஞர்கள் சொல்லுகின்றார்கள். ஏனெனில் முத்தமிழுக்கும் இலக்கணம் வகுத்த முதல்நூல் அகத்தியமே என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றார்கள். ஆனால் அந்த அரிய நூல் இப்போது இல்லை. அகத்தியம் ஏழாயிரம் வருடங்களுக்கும் முன்னர் அகத்தியரால் எழுதப்பட்டது என்பது தமிழாய்வாளர்களின் கருத்தாகும்.

இசைக்கு இலக்கணம் வகுத்த நூல் அகத்தியம் என்பதால் அகத்தியத்திற்கு முன்னரும் பல இசை நூல்கள் இருந்திருக்கவேண்டும். ஏனெனில் இலக்கியத்திற்குப் பின்னர்தான் இலக்கணம் தோன்றியிருக்கமுடியும். அகத்தியத்திற்குப் பின்னர் தோன்றிய இசை நூல்களான பெருநாரை, பெருங்குருகு, முதுநாரை, முதுகுருகு, பஞ்சபாரதீயம், பதினாறுபடலம், வாய்ப்பியம், குலோத்துங்கன் இசைநூல் போன்ற அற்புதமான நூல்களும் அழிந்துபோய்விட்டன.

தமிழிசை பற்றிக் கூறுகின்ற நூல்களில், இன்று கிடைக்கப்பெறுகின்ற மிகத் தொன்மையான நூல் தொல்காப்பியம் ஆகும். அந்நூல் ஐயாயிரம் வருடங்களுக்கு முன்னால் தொல்காப்பியரால் எழுதப்பட்டது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றார்கள்.
இசையைத் தொழிலாக கொண்ட மக்கள் உபயோகப்படுத்தும்

இசைக்கருவிக்குப் பறை என்றும், இன்பமாக பொழுது போக்கும் மக்கள் பயன்படுத்தும் இசைக்கருவி யாழ் என்றும் தொல்காப்பியத்தில் இருவகை இசைக்கருவிகளைப்பற்றிக் குறிப்பிடும் தொல்காப்பியர், முல்லை, குறிஞ்சி, மருதம்,நெய்தல்,பாலை ஆகிய ஐவகை நிலங்களுக்கும் உரிய தொழில் இசையையும,; இன்ப இசையையும் தெளிவாக வகுத்து வைத்துள்ளார்.

‘அசையும் சீரும் இசையொடு சேர்த்தி
வகுத்தனர் உணர்த்தலும் வல்லோர் ஆறே’ என்கிறது தொல்காப்பியம். (நூற்பா எண் – 1268)
‘இசைப்பு இசையாகும் என்கிறது’ 793 ஆவது நூற்பா. இசைப்பு என்பது யாழ் போன்ற இசைக்கருவிகளை இசைத்தல் ஆகும் என்பது இதன் பொருள்.

அளபு இறந்து இசைத்தலும் ஒற்று இசை நீடலும்
உள என மொழிப இசையொடு சிவணிய
நரம்பின் மறைய என்மனார் புலவர்

என்று 33 ஆவது நூற்பா சொல்கிறது.

இசையொடு பொருந்திய யாழ் நூலில் இசையிலே எழுத்து ஒலிகள் அளவுகடந்து ஒலித்தலும், ஒற்றுக்கள் நீண்டு ஒலித்தலும் உண்டு என்று அறிஞர் கூறுவர் என்பது இதன் கருத்து.
சங்க இலக்கியங்களிலே இடம்பெறுகின்ற எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான பரிபாடலே இப்போது கிடைக்கப்பெறுகின்ற இசை நூல்களிலேயே மிகத்தொன்மையானதாகக் கருதப்படுகின்றது. பரிபாடல்கள் அனைத்துமே இசைப்பாடல்களே என்று தெரிவிக்கின்றார் பரிமேலழகர்.

திருமாற்கு இருநான்கு செவ்வேள் முப்பத்தொருபாட்டு காடுகாட்கு ஒன்று – மருவினிய
வையை இருபத்தாறு மாமதுரை நான்கென்ப
செய்யபரி பாடல் திறம்

என்கின்ற வெண்பாவின் மூலம், திருமாலைப்பற்றி எட்டுப்பாடல்களும், முருகனைப்பற்றி முப்பத்தியொரு பாடல்களும், காளியைப்பற்றி ஒரு பாடலும், வைகை நதியைப்பற்றி இருபத்தியாறு பாடல்களும், மதுரையைப்பற்றி நான்கு பாடல்களுமாக மொத்தம் எழுபது பாடல்கள் பரிபாடலில் இடம்பெற்றிருந்தன என்பதை அறிய முடிகிறது. எழுபது பாடல்களின் தொகுப்பான பரிபாடலில் இப்போது கிடைக்கப்பெறுபவை இருபத்தியிரண்டு பாடல்கள் மட்டுமேயாகும். ஏனையவை அழிந்துபோய்விட்டன.

பாடல்களை ஆக்கிய புலவர்களின் பெயர்களும், எந்தப் பண்ணில் பாடவேண்டும் என்ற விபரங்களும், பண்ணமைத்த இசையறிஞர்களின் பெயர்களும் அந்தப் பாடல்களோடு கிடைக்கப்பெறுகின்றன. பெட்டகனார், கண்ணனாகனார், மருத்துவன் நல்லச்சுதனார், பித்தாமத்தர் என்போர் பரிபாடலில் காணப்படும் பாடல்களுக்கு பண்ணமைத்துள்ளனர்.
பரிபாடலில் உள்ள பாடல்கள், இசைப் பாடல்களாக அமைவதோடு மட்டுமன்றி, இசைபற்றியும், இசைக் கருவிகள் பற்றியும் தகவல்களைக் கொண்டனவாகவும் விளங்குகின்றன.

ஒத்தகுழலின் ஒலி எழ, முழவு இமிழ்
மத்தரி, தடாரி, தண்ணுமை, மகுளி
ஒத்து அளந்து, சீர்தூக்கி, ஒருவர் பிற்படார்
(பாடல்: 12, வரி 40-43)

என்ற பாடலில் சில இசைக் கருவிகளின் பெயர்களைக் காணலாம்.
மாறுகின்ற பல்வேறு ஒலிகளை உடையது பரங்குன்றம் எனப் பகர்கின்ற பின்வரும் பாடல்களில் இசைதோன்றுவது பற்றியும், குழல் யாழ், முழவு முதலிய இசைக்கருவிகளின் பெயர்களையும், பாணர், விறலியர் ஆகிய இசைக் கலைஞர்களுக்கான பொதுப் பெயர்களையும் குறிப்பிடுகின்றன.

ஒருதிறம், பாணர் யாழின் தீங்குரல் எழ
ஒருதிறம், யாணர் வண்டின் இமிரிசை எழ
ஒருதிறம், கண்ணார குழலின் கரைபு எழ
ஒருதிறம், பண்ணார் தும்பி பரந்திசை ஊத
ஒருதிறம், மண்ணார் குழவின் இசை எழ
ஒருதிறம், அண்ணல நெடுவரை அருவிநீர் ததும்ப
ஒருதிறம், பாடல்நல் விறலியர் ஒல்குபு நுடங்க
ஒருதிறம், வாடை உளவயின் பூங்கொடி நுடங்க
ஒருதிறம், பாடினி முரலும் பாலையங் குரலின்
நீடுகிளர் கிழமை நிறைகுறை தோன்ற
ஒருதிறம், ஆடுசீர் மஞ்சை அரிக்குரல் தோன்ற
மாறுமாறு உற்றனபோல் மாறெதிர் கோடல்
மாறு அட்டான் குன்றம் உடைத்து (பாடல்: 17, வரி 9-21)
விரல் செறி தூம்பின் விடு துளைக்கு ஏற்ப
முரல் குரற் தும்பி அவிழ் மலர் ஊத
யாணர் வண்டினம் யாழ் இசை பிறக்க
பாணிமுழவு இசை அருவி நீர் ததும்ப
ஒருங்கு பரந்தவை எல்லாம் ஒலிக்கும்
இரங்கு முரசினான் குன்று (பாடல்: , வரி 33-38)

எட்டுத் தொகை நூல்களில் மற்றொன்றான புறநானூற்றில் குறிஞ்சிப்பண், மருதப்பண்,காஞ்சிப்பண், செல்வழிப்பண், படுமலைப்பண்,விளரிப்பண் என்னும் பண்களைப்பற்றிக் கூறப்பட்டுள்ளது. சீரியாழ், பேரியாழ், வேய்ங்குழல், ஆம்பற்குழல், முழவு, தண்ணுமை, பெருவங்கியம் முதலிய இசைக்கருவிகளைப்பற்றி விளக்கப்பட்டுள்ளது.

பெண்ணொருத்தி யாழிலே குறிஞ்சிப்பண்ணை இசைத்து, தினைப்புனத்தில் தீனிக்காக வந்த யானையைத் தூங்கச் செய்தாள் என்ற தகவல் அகநானூற்றில் அறியத்தரப்பட்டுள்ளது. மற்றொரு எட்டுத்தொகை நூலான பதிற்றுப்பத்தின் ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் துறை, வண்ணம், தூக்கு(இசை), பெயர் என்பன குறித்து வைக்கப்பட்டுள்ளன. பத்துப்பாட்டில் இடம்பெறும் சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை என்பவற்றில் சீறியாழ், பேரியாழ் என்னும் இசைக்கருவிகளைப்பற்றிச் சொல்லப்படுகிறது. இசைக் கலைஞர்களைப்பற்றிச் சொல்லப்படுகிறது.

இளங்கோவடிகள் இயற்றிய, சிலப்பதிகாரம் தமிழ் இசையின் வளர்ச்சிக்குச் சான்றாக அமைந்துள்ள அற்புதமான நூலாகும். நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரமும், அதன் உரையாசிரியரான அடியார்க்கு நல்லார் உரையும் தமிழிசையின் மேன்மையைக் கூறி நிற்கின்றன.
சிலப்பதிகாரத்தின் கானல்வரிப் பகுதியில், வார்த்தல், வடித்தல், உந்தல், உறத்தல், உருட்டல், தெருட்டல், அள்ளல், பட்டடை என்று யாழை மீட்டுனின்ற எட்டுவகைத் திறன்பற்றி எடுத்தியம்பப்படுகிறது. ஏழிசைபற்றியும், நான்குவகைப் பாலைகள் பற்றியும், முப்பது வகையான தோற்கருவிகளைப் பற்றியும் சிலப்பதிகாரம் கூறுகின்றது.
சிலப்பதிகாரத்திற்கு உரையெழுதிய அடியார்க்கு நல்லார் காலத்திலே கிடைக்கப்பெற்று, அதன்பின்னர் அழிவுற்ற இசை நூல்கள் பல. முறுவல், குணநூல், சயந்தம், செயிற்றியம், சிகண்டி முனிவர் எழுதிய இசை நுணுக்கம், யாமளேந்திரர் எழுதிய இந்திர காவியம், ஆதிவாயிலார் எழுதிய பரதசேனாபதீயம், மதிவாணன் எழுதிய நாடகத் தமிழ்நூல் ஆகியவை அவற்றிற் சில என அறியக்கிடக்கின்றது.

அடியார்க்கு நல்லார் காலத்தில் வாழ்ந்தவரான அறிவனார் இயற்றிய பஞ்சமரபு இப்போது கிடைக்கப்பெறும் பழந்தமிழ் இசைநூல்களில் ஓன்றாகும்.
இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்தவரான, தெய்வப்புலவர் திருவள்ளுவரின் திருக்குறளிலும் பண், குழல், யாழ் என்றெல்லாம் இசைபற்றிய செய்திகள் காணப்படுகின்றன.
தென்னாட்டு மக்கள் பாடுவதிலும், பல்வேறு இசைக் கருவிகளை வாசிப்பதிலும், கூத்துக் கலையிலும் மிகவும் திறமையுள்ளவர்கள் என்று நாட்டிய சாஸ்திரம் என்ற தனது நூலிலே பரத முனிவர் குறிப்பிட்டுள்ளார். அவர் அவ்வாறு குறிப்பிட்டுள்ளது தமிழ் இசையைப்பற்றியே என்பது ஆராய்ச்சியாளர்களின் முடிவாகும்.

மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்ந்து வளர்ந்து வந்தது தமிழ் இசை என்பதும், தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகம், கேரளம் ஆகிய தென்னிந்திய மாநிலங்களிலும், இலங்கை, சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளிலும் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் கர்நாடக இசை என்ற பெயரில் வழங்கிவருவது தமிழ் இசையே என்பதும் இசை ஆய்வாளர்களது கருத்தாகும்.
பண்டைத் தமிழ் இசை அறிஞர்கள் ஏழுவகை இசைக்குறியீடுகளைக் கொண்டு, நூற்றுக் கணக்கான பண்களைக் கண்டுபிடித்தனர். பலநூற்றாண்டுகளாக அவற்றைப் பயன்படுத்திப் பாதுகாத்துவந்தனர். பன்னாட்டு மக்களும், இசை ஆர்வலர்களும் அவற்றை அறிந்து வியந்தார்கள். கற்று மகிழ்ந்தார்கள்.
அகத்தியர் காலத்தில் 108 பண்கள் இருந்தன என்று அறிஞர்கள் கூறுகின்றார்கள். பண்டைத் தமிழகத்தில் 11,999 பண்கள் இருந்தமையை அடியார்க்கு நல்லார் உரை பதிவுசெய்திருக்கின்றது. முன்னூற்றுக்கும் குறைவான பண்களே இப்போது இசைக் கலைஞர்களின் அறிவுக்கு எட்டுவனவாக உள்ளன.

பிற்காலத்தில் தோன்றிய எண்ணற்ற இசைநூல்கள் தமிழிசையின் பெருமைக்குச் சான்றாக அமைகின்றன.
சிலப்பதிகாரத்தின் இசை நுணுக்கங்களை ஆராய்ந்த முத்தமிழ் வித்தகர் விபுலானந்த அடிகளாரின் யாழ்நூல் இருபதாம் நூற்றாண்டில் இசைத்தமிழுக்குச் சூட்டப்பட்ட இணையற்ற மகுடமெனத் திகழ்கிறது.
தௌளுதமிழ் தேன்பாகை அள்ளியிறைக்கும் பன்னிரு திருமுறைகளில் உள்ள 18,350 பாடல்களும், கல்லும் கசிந்துருகும் கனிவான பக்தி இசைப்பாடல்களாகும்.
தேவார திருவாசகங்கள் பல்வேறு பண்களுடனும், தாளங்களுடனும் அமைந்து, தமிழிசையின் மேன்மையைப் பறைசாற்றிக்கொண்டருக்கின்றன. இவை தோன்றிய பக்தி இலக்கிய காலத்தில் இந்தியத் துணைக்கண்டம் முழுவதுமே இலங்கிநின்றது தமிழ் இசை மட்டுமேயாகும்.
பன்னீராழ்வார்கள் பாடியருளிய அழகான பிரபந்தங்கள், அருணகிரியாரின் திருப்புகழ், சித்தர் பாடல்கள், கும்மி, சிந்து, குறவஞ்சி, பள்ளு, தெம்மாங்கு, நாட்டுப்பாடல்கள், கீர்த்தனைகள், நல்ல தழிழில் வல்ல புலவர்களால் கொள்ளை கொள்ளையாக எழுதிக் குவிக்கப்பட்டுள்ள தனிப்பாடல்கள், முறையான பண்ணோடு அழகாகப் புனையப்பட்டுள்ள தொகையான பண்ணிசைப் பாடல்கள், நித்தமும் தோன்றிக்கொண்டிருக்கும் புத்தம் புதிய இசைப் பாடல்கள், ஆகிய எல்லாமே இசைத்தமிழுக்கு இனிமை சேர்த்துக்கொண்டிருக்கின்றன.

இவ்வாறு பல்லாயிரம் பல்லாயிரமாக இசைப்பாடல்கள் தமிழ்மொழியில் குவிந்து கிடக்க, அவை மறந்து, நிலை குலைந்து தமிழ் இசை மேதைகளும், நாட்டியக் கலை மேதை களும் கருத்துத் தெரியாத வேற்று மொழிகளிலே பாடுகிறார்கள், பாட்டுக்கு ஆடுகிறார்கள், தமிழ் மொழியைச் சாடுகின்றார்கள், தமிழ் இசைக்குத் திரையை மூடுகின்றார்கள்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

தமிழ் சொற்களின் சிறப்பு

(தலைப்பை கிளிக் செய்து முழுக் கட்டுரையைப் படிக்கவும்)



பெண்:::::
பேதை - பெண் 5 வயதுக்கும் கீழ்
பெதுமை - பெண் 10 வயதுக்கும் கீழ்
மங்கை - பெண் 16 வயதுக்கும் கீழ்
மடந்தை - பெண் 25 வயதுக்கும் கீழ்
... அரிவை - பெண் 30 வயதுக்கும் கீழ்
தெரிவை - பெண் 35 வயதுக்கும் கீழ்
பேரிளம் பெண் - பெண் 45 வயதுக்கும் கீழ்

பிற மொழிச் சொற்கள் உருவத்தை மட்டுமே காட்டுவன. தமிழ் சொற்கள் உருவத்தையும் பருவத்தையும் சேர்த்துக் காட்டக் கூடியன....

ஆண்:::::
பாலன் - ஆண் 7 வயதுக்கும் கீழ்
மீளி - ஆண் 10 வயதுக்கும் கீழ்
மறவோன் - ஆண் 14 வயதுக்கும் கீழ்
திறலோன் - ஆண் 15 வயதுக்கும் கீழ்
காளை - ஆண் 16 வயதுக்கும் கீழ்
விடலை - ஆண் 30 வயதுக்கும் கீழ்
முதுமகன் - ஆண் 30 வயதுக்கும் மேல்

மேலும் ஆண்களின் பருவத்தைப் பின்வருமாறும கூறலாம்

பிள்ளை ஆண் - குழந்தைப்பருவம்
சிறுவன் ஆண் - பாலப் பருவம்
பையன் ஆண் - பள்ளிப் பருவம்
காளை ஆண் - காதற் பருவம்
தலைவன் ஆண் - குடும்பப் பருவம்
முதியோன் ஆண் - தளர்ச்சிப் பருவம்
கிழவன் ஆண் - மூப்புப் பருவம்

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

பண்டைய இசைப்பாடல்கள்


(தலைப்பை கிளிக் செய்து முழுக் கட்டுரையைப் படிக்கவும்)

பழந்தமிழ் இசையும் இசைப்பாடல்களும் யாழ்களுடன் தொடர்புடையன. சங்ககால இசைப்பாட்டு உருக்களுக்கு எடுத்துக்காட்டாக இன்று நமக்குக் கிடைப்பன பரிபாடல்களே. இவற்றில், பாட்டுக்களை இயற்றிய ஆசிரியர்களே இசையமைத்த பாடல்களும் உண்டு; பாடிய கவிஞர் ஒருவராகவும் இசையமைத்த கலைஞர் வேறொருவராகவும் அமைந்த பாடல்களும் உண்டு. இவைகள் பண்சுமந்த பாடல்களே. இப்பரிபாடல்களில் பல நீண்ட நெடும் பாடல்கள்; 100 வரிகளுக்கும் மேல் அமைந்த பாடல்களும் உண்டு. இப்பாடல்களை அக்காலப் பாணர்கள் காந்தாரம், நோதிரம், செம்பாலையாகிய பண்களில் பாடியுள்ளனர். பரிபாடலின் யாப்பினைக் குறித்துத் தொல்காப்பியர் பரிபாடல் வெண்பா யாப்பினதே என்றார்.(செய்118). பரிபாடல் வெண்பா உறுப்பாக வரினும் இன்னபா என்பது உணரப்படாமல் பொதுப்பட நிற்றற்கு உரித்து என்று கூறுகிறது, தொல்காப்பியம்.. (செய்120).
தொல்காப்பியம் செய்யுளியல் உரையாசிரியர்கள் தேவபாணி என்னும் கடவுளரைப் பாடும் பாட்டு வகைக்கு எடுத்துக் காட்டாக வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பாவில் அமைந்த பாடல்களைக் காட்டியுள்ளனர். இவையும் நெடும்பாட்டுக்களே. பரிபாடல் இசைப்பாடல்; தேவபாணி இசைப்பாடலா அன்றி இயற்பாடலா என்பது தெரியவில்லை. வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பாவிற்கு இசையமைத்ததாகக் குறிப்பேதும் கிடைக்கவில்லை. பரிபாடல், வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பா ஆகிய இருவகைப் பாடல்களுக்கும் தரவு, கொச்சகம், அராகம், சுரிதகம் போன்ற ஒத்த உறுப்புக்கள் உண்டு. (செய்121). இவை யிரண்டும் கடவுள் வாழ்த்தினும் மலைவிளையாட்டினும் புனல் விளையாட்டினும் பிறவெல்லாவற்றிலும் காமப்பொருளாகியே வரும். (செய்.121 பேரா. உரை)
தமிழுலகில் முதன்முதலில் இசையை இறைவழிபாடாக , ‘இசைமுழுவதும் மெய்யறிவே இடங்கொளும் நிலைபெருகச்’ செய்த பெருமை திருஞானசம்பந்தருக்கே உரியது.
யாழிசை
சங்ககால இசையமைப்பைப் பற்றி அறிந்துகொள்ள யாழின் பயன்பாட்டை முதலில் நன்கு தெரிந்து கொள்ள வேண்டும்.
பண்வகைகளை ‘யாழின் பகுதி’ எனவும் இசைநூலை ‘நரம்பின் மறை’ எனவும் ஆசிரியர் தொல்காப்பியனார் குறித்துள்ளார்.இதனால், பண்டைநாளில், நரப்புக் கருவியாகிய யாழினை நிலைக்களனாகக் கொண்டே பண்களும் அவற்றின் திறங்களும் ஆராய்ந்து வகைப்படுத்தப்பட்டன என அறியலாம்.
பியானோ, ஹார்மோனியம் போல அக்காலத்தில் வழக்கில் இருந்த எல்லாவகை யாழ்களும் விட்டிசைக்கும் கருவிகளே. (Digital Instrument). ஒரு நரம்பு ஒரு சுருதியை மட்டுமே ஒலிக்கும். யாழில் கூட்டப்பட்ட பாலை யாதோ அதை மட்டுமே வாசிக்க முடியும்.ஒருசுரத்தை மீட்டினால் அதுவே தொடர்ந்து ஒலிக்குமன்றி அடுத்த சுரத்தினொடு இயைபுபடாது. (பாலை என்பது ஆரோகணம் அவரோகணமாக அமைந்த சுரங்களின் வட்டம், “ஏரேழ் தொடுத்த செம்முறைக் கேள்வியின் , ஓரேழ் பாலை நிறுத்தல் வேண்டி” சிலம்பு 3:70-1 பாலை -scale)
யாழிசையும் மிடற்றிசையும்
சங்ககாலத்தில் யாழிசைக்கும் மிடற்றிசைக்கும் நெருங்கிய தொடர்பிருந்தது. யாழிசையின் அடிப்படையில்தான் மிடற்றிசை வழங்கியது. அதாவது மிடற்றுப்பாடல் யாழிசையோடு சேர்த்துத்தான் பாடப்பட்டது. மிடறும் நரம்பும் இடைதெரிவின்றி இசைக்கப் பெறுதல் வேண்டும் என்பது பண்டைய இசை நியதி. மிடற்றிசை யாழிசையோடு பருந்தின் நிழல்போல ஒன்றியிருக்க வேண்டும் என்பது விதி..
அக்காலத்தில் ஆதார சுருதி இசைப்பதற்கான ‘சுருதிப் பெட்டி’, தம்புரா போன்ற கருவிகள் இல்லை. எனவே, முதலில் மிடற்றிசைக் கேற்ற சுருதி குழலில் சேர்க்கப்படும். பின்னர், குழல் வழி யாழும் யாழ் இசையின் வழி முழவு முதலிய கருவிகளின் ஓசையும் அமையும். குழல்வழி யாழும் யாழின் வழி மிடற்றிசையும் அமைந்தன.(சிலம்பு 3:139 -153. ‘மிடற்று மட்டமும் யாழ் வழித்து’. அரும்பதவுரை)
இந்த நிலை குறித்து. இயலும் இசையும் துறை போகிய அறிஞர். பி.டி.ஆர். கமலைத்தியாகராசன், அவர் எழுதிய “இசைத்தமிழின் உண்மை வரலாறு” என்னும் ஆய்வு நூலில் கூறுவதாவது: “முதல்நிலைக் கருவியான மிடறும் கடைநிலைக் கருவியான யாழும் பருந்தும் நிழலும் போல இயங்கவேண்டுமானால், மிடறு தன்னிலையில் இறங்கிக், கடைநிலைக் கருவியான யாழின் குறைகளுக்கு உட்படு இயங்க வேண்டும். யாழோடு பாடினால் கமகங்கள் இல்லாமல் பாட வேண்டும் என்பது உறுதி. “
இதற்குச் சீவக சிந்தாமணி என்னும் நூலில் இடம்பெறும் நிகழ்ச்சியொன்றைச் சான்றாகச் சுட்டிக் காட்டினார். இக்காப்பியத்தில் ஒரு இசைப்போட்டி நடைபெறுகின்றது. உதயணன் என்பானும் காந்தருவதத்தை என்னும் பெண்ணும் போட்டியிடுகின்றனர். எவ்வளவோ திறமையாகப் பாடிய காந்தருவதத்தையும் ‘கம்பிதத்துடன்’ பாடியதால் தோற்றதாக அறிவிக்கப்பட்டாள். அதாவது, சீவகன் வாசித்த யாழில் வராத கமகம் அவள் பாட்டில் வந்ததால் அவள் தோற்றாள் என அறிவிக்கப்பட்டது. யாழின் குறைகளுக்கு உட்பட்டுத்தான் பாட வேண்டும். எனவே, அந்தக் காலத்தில் கமகம் இல்லாமல்தான் பாடவேண்டும்; பாடிக்கொண்டு இருந்தனர் எனக்கொள்ளுதல் வேண்டும்.”
சங்கீத இரத்தினாகரம் எனும் இசை இலக்கண நூலுக்கு விளக்கம் எழுதிய அறிஞர், தென்னாட்டு இசைக்கு உயிர் போன்ற கமகங்கள் இல்லாமல் தேவாரம் ஒருகாலத்தில் பாடப்பட்டது என்பதை நினைப்பது சற்றுக் கடினமாகத்தான் இருக்கும் என்கிறார்.
இன்று தென்னக இசைக்குத் தனித்தன்மையும் சிறப்பும் கொடுப்பது தசவித கமகங்களே. கமகங்களோடு கூடிய இசைமரபுக்கு வித்திட்டவர் திருஞானசம்பந்தரே என்பது தென்னக இசைவரலாற்று அறிஞர்களின் உறுதியான கொள்கை.
நான் படித்த கட்டுரை.... உங்களுக்காக பகிர்ந்துகொல்கிறேன் அனைவரும் படித்து பயன்பெறுங்கள்

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS