RSS

சிவ பூஜையில் கரடி(கை)...



l

(தலைப்பை கிளிக் செய்து முழுமையாக படியுங்கள்)

சிவ பூஜையில் கரடி(கை)...

கரடிகை என்பது நம் இலக்கியங்களில் இடம்பெரும் ஒருவகைத் தோற்கருவி. கரடி கத்தினாற்போல் ஓசை உடையதாம். இந்த ஓசை காரணம்பற்றியே இந்தக் கருவி கரடிகை என்னும் பெயர் பெற்றது என்று கூறுகிறார் அடியார்க்கு நல்லார். 

கரடிகை அளவு கருவியாகிய மரக்கால் போன்று அமைப்புக் கொண்டது. இசை நூலில் இந்தக் கருவி சமக்கருவி என்ற வகையின் பாற்படுகிறது. வேறு வகையான பிரிவில் தலைக்கருவியாகிறது. அக முழவு வகையைச் சார்ந்தது. பிரம்மன், ருத்திரன், விஷ்ணு என்ற கடவுளர் மூவர்க்கும் இயற்றப்படுவனவாகக் கூறப்படும் கருவிகளுள் கரடிகை என்ற இந்தத் தோற்கருவியும் ஒன்று.

கரடிகை பலாமரத்தால் செய்யப்படும். கனகரடிகை எனக் கூறி, கீழ்க்காணும் அளவுகள் கூறப்படுகின்றன.

சிவ பூஜையில் கரடி என்று சொல்வது கரடி(மிருகத்தை) குறிப்பதல்ல... கரடிகை என்ற வாத்தியம் தான் சரி... 



  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

குமரிக்கண்டத்து இசை


உலகத்திலேயே மிகவும் பழமையுடைய இசைத் தமிழர் இசையே. உலகில் சிறந்த இசை இந்திய இசையே. அதிற்சிறந்தது தமிழிசையே. தமிழிசையே இன்று உழையிசையடிப்படையில் தாய்பண்களையும், கிளைப்பண்களையும் வகுத்தும், பழந்தமிழ் குறியீடுகளையும் பண் பெயர்களை வடச்சொல்லாக மாற்றியும் ”கருநாடக சங்கீதம்” எனப் பெயரிட்டு வழங்கி வருகின்றனர். கேள்வியைச் சுருதி என்றும், நிலையை ஸ்தாய் என்றும் மொழி பெயர்க்கப்பட்டுப் பயன்படுத்தப் படுகிறது. 

குமரிக்கண்டத்துத் தமிழர் நுண்மாண் நுழை புலத்தராயும் , தலைசிறந்த நாகரிகமுடையராயும், எஃகுச் செவியராயும் இருந்தமையால், ஏழு பேரிசையும், ஐந்து சிற்றிசையும் ஆகிய பன்னீரிசையை (சுரத்தை) யும் கண்டு ஆயப்பாலை என்னும் முறையில் எழு பாலைப்பண்களைத் திரிந்ததும் அன்றி, அப்பன்னீரிசையும் வட்டப்பாலை என்னும் முறையில் 24 ஆகவும், திரிகோணப்பாலை என்னும் முறையில் 48 ஆகவும், சதுரப்பாலை என்னும் முறையில் 96 ஆகவும் நுட்பமாகப் பகுத்து எல்லையற்ற இசைப் பேரின்பத்தை நுகர்ந்திருந்தனர் என்று ஆராய்ச்சி அறிஞர்கள் கண்டுணர்த்துயுள்ளனர்.


பேரிசை ஏழு (ஸ்வரங்கள் 7): குரல் (ஸட்ஜம்; ஸ), துத்தம் (ரிஷபம்; ரி), கைக்கிள்ளை (காந்தாரம்; க), உழை (மத்தியமம்; ம) இளி (பஞ்சமம்; ப), விளரி (தைவதம்; த), தாரம் (நிஷாதம்; நி) என்பவையாகும். சிற்றிசையை (ரி,க,ம,த,நி) ஆகணம் என்று, குரலும் (ஸ) இளியும் (ப) அல்லாத பேரிசையை அந்தரம் என்றும் வழங்கினர்.

--இசையியல் (ச. மெய்யப்பன் எம்.ஏ அண்ணாமலைப் பல்கலைக்கழகம், மணிவாசகர் பதிப்பகம்)--

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

யாழ்

முத்தமிழ் என்றால் இயல், இசை, நாடகம் ஆகும். தமிழர்கள் இசையோடு ஒன்றியவர்கள் என்றால் அது மிகையாகாது. இசையில் தனி முத்திரைப்பதித்தவர்கள் தமிழர்கள். தன்னுடைய ஒவ்வொரு அசைவிலும் இசையைக் கண்டவர்கள் தமிழர்கள். பல இசைக்கருவிகளையும் தோற்றுவித்தனர். இன்று வழக்கில் இல்லாத பல வகையான இசைக்கருவிகள் இலக்கியத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றன். அவ்வகையில் தந்தி இசைக்கருவியான யாழ் முக்கியமான இடத்தை வகிக்கின்றது. மரத்தினால் செய்யப்பட்டு நரம்புகள் அல்லது கம்பிகள் பூட்டப்பட்டவை நரம்புக் கருவிகளாகும். அவை யாழ், வீணை, தம்புரா, கோட்டுவாத்தியம், பிடில் (வயலின்) முதலியனவாம். இதில் யாழ் மிகவும் பழமையான இசைக்கருவியாகும்.
இவ்விசைக்கருவியை "fairy tale" கார்டோன்களிலும் பழைய ஆங்கில படங்களிலும் அதிகம் காணலாம். வழக்கத்தில் இவ்விசைக்கருவியைக் கண்டிராததால் அது மேற்கத்திய இசைக்கருவி என்று பலர் கருதுகின்றனர். யாழ் தமிழன் கண்ட இசைக்கருவி என்ற உண்மை நம்மில் பலருக்குத் தெரியாமலே உள்ளது.
பண்டைய நாகரிகங்கள் எல்லாவற்றிலும் யாழ் என்ற இசைக்கருவி பயன்பாட்டில் இருந்துள்ளது. கிரேக்க பாரம்பரியத்தில் இதைக் காணலாம். ஆங்கிலத்தில் யாழ் இசைக்கருவியை ஹார்ப் (harp) என்று அழைப்பர். இன்னும் அவர்களிடையே நவீன யாழாக வாழ்ந்து கொண்டிருக்கின்றது. ஆனால் தமிழர்கள் மறந்துவிட்ட இசைக்கருவியாக யாழ் திகழ்கின்றது.  இன்று இக்கருவி முற்றிலுமாக மறைந்து அதன் பரிணாமமான வீணை முதன்மையிடம் வகிக்கிறது.
தமிழர் கண்டு வாசித்த முதல் நரம்பு இசைச்கருவி யாழ் ஆகும். நரம்புக்கருவிகளின் வளர்ச்சிக்கு யாழ் ஒர் அடிப்படைக் காரணமாகும். தமிழுக்கென்று சிறப்பான எழுத்து “ழ்”. “யாழ்” என்ற சொல்லில் ”ழ்” தாங்கி வருவதிலேயே தெரிகின்றது யாழ் தமிழுக்குரிய இசைக்கருவி என்று.  
யாழின் வகைகள் பல. அவை பேரியாழ் (21 நரம்புகளை உடையது)  மகரயாழ் (17 நரம்புகளை உடையது)  சகோடயாழ் (16 நரம்புகளை உடையது) செங்கோட்டியாழ் (7 நரம்புகளை உடையது) இவற்றைவிட நாரதயாழ், தும்புருயாழ், கீசகயாழ், சீரியாழ், மருத்துவயாழ், ஆதியாழ் எனப்பல வகைகள் இருந்ததாக பண்டைய நூல்கள் கூறுகின்றன. மேலும், யாழ் நூலில் கூறப்படும் யாழ்கள், வில் யாழ் , சீறி யாழ், செங்கோட்டியாழ், பேரி யாழ், சகோட யாழ், மகர வேல்கொடி யாழ் , மகர யாழ் / காமன் கொடி யாழ் மற்றும், மகர யாழ் / வர்ணர் ஊர்தி யாழ்
வேட்டைச் சமூகத்தில் பயன்பாட்டில் இருந்த கருவிகளின் ஒன்று வில். அந்த வில்லில் முறுக்கேற்றிக் கட்டப்பெற்ற நாணிலிருந்து அம்பு செல்லும்பொழுது தோன்றிய இசையோ யாழின் உருவாக்கத்திற்கு மூல காரணம்.
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தொல்காப்பியர் யாழ் சிந்து சமவெளி நாகரீகத்தில் பயன்படுத்தப்பட்டதாக கூறியுள்ளார். தொல்காப்பியம் கூறும் ‘யாழ்’ என்னும் சொல் பழந்தமிழர் வகுத்த பண்ணிசையைக் குறிக்கும். இது மிடற்றிசை அதாவது குரலிசை, நரம்புக் கருவியிசை (யாழ் என்னும் தந்திக் கருவி இசை) காற்றுக் கருவியிசை (குழல் கருவியிசை) ஆகியவற்றின் முறைகளும் மரபுகளும் பற்றியதாகும். இந்த பண்வகைகளை ‘யாழின் பகுதி’ எனவும் இசைநூலை ‘நரம்பின் மறை’ எனவும் தொல்காப்பியர் குறித்துள்ளார். பண்டைக்காலத்தில், தந்தி கருவியான யாழினை அடிப்படையாகக் கொண்டே பண்களும் அவற்றின் திறங்களும் ஆராய்ந்து வகைப்படுத்தப்பட்டன என அறியலாம்.
மேலும், அகநானூறு, புறநானூறு, நற்றிணை, பெரும்பாணாற்றுப்படை, பொருநராற்றுப்படை. சிறுபாணாற்றுப்படை, பரிபாடல், மலைபடுகடாம் முதலிய இலக்கியங்களில் யாழ் வாசிப்பு, பல்வகை யாழ்கள் மற்றும் யாழின் அமைப்புகள் தொடர்பான குறிப்புகள் பல இருக்கின்றன.
சிலப்பதிகரம் தமிழிசையைப் பற்றி தெளிவாக விளக்கும் தமிழிசை நூலாகத் திகழ்கிறது. சிலப்பதிகாரத்தில் அரங்கேற்று காதையில் யாழாசிரியனின் அமைதியும், கானல் வரி மற்றும் வேனிற் காதையில், யாழ் வகைகளும், யாழின் உறுப்புகள் பற்றியும், யாழ் நரம்புகளை பரிசோதித்து சுருதி கூட்டிப் பின்னர் யாழை எங்கனம் இசைப்பது என்பதற்கான இலக்கணங்களும் தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளது.
சீவக சிந்தாமணி எனும் ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான இலக்கிய நூலிலும் யாழ் பற்றி பேசப்பட்டிருக்கிறது. காந்தர்வதத்தை என்னும் இசையில் தேர்ந்த பெண்ணுக்கும் சீவகனுக்கும் இடையில் நடக்கும் யாழிசைப் போட்டி பற்றிய பாடல்களில், யாழுக்கு நேரக்கூடிய குற்றங்கள், யாழுடன் சேர்ந்து பாடுவதற்கான இலக்கணம் ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளன. பருந்து பறக்கும் பொழுது நிழல் அதனைத் தொடர்வது போன்று மிடற்றிசையும் , யாழிசையும் இணைந்து இருத்தல் வேண்டும் என்றும் இந்நூலில் கூறப்பட்டுள்ளது.
திருமுறையாசிரியர்களின் பதிகங்களில் யாழ் இறையாடலுக்குப் பயன்பட்ட இசைக்கருவியெனப் பல இடங்களில் குறிப்பிட்டுள்ளனர். திருஞான சம்பந்தர் இயற்றிய தேவாரப்பதிகங்களைத் திருநீலகண்ட யாழ்ப்பாணர் அழகாக யாழில் வாசித்திருக்கின்றார். இவர் கையில் இருந்தது 14 தந்திகளைக் கொண்ட சகோட யாழ். இதுப் போன்று பக்தி இலக்கியங்களிலும் யாழின் பயன்பாடு அதிகமாகவே காணப்படுகின்றன.
மகர யாழ் 17 அல்லது 19 தந்திகளைக் கொண்டது. இது மகர்மீனின் உருவம் உடையதாகையால் இப்பெயர் பெற்றதாம். அழகிய இந்த யாழ் யவனத் தச்சர்களால் செய்யப்பெற்றது என்று உதயன காவியம் உரைக்கின்றது.
பொருநராற்றுப் படையில் யாழ் பற்றிய வர்ணனை ஒன்று காணப்படுகிறது. அதி அற்புதமான வர்ணனையாகவும் கருதப்படுகின்றது. ஒப்பனைச் செய்யப்பட்ட மணமகளின் அழகிய தோற்றம் போலக் காட்சியளிக்கிறது யாழ் என்கிறார் பொருநராற்றுப் படை இயற்றிய புலவர். இத்தகைய யாழை மீட்டி பாணர்கள் இசையைப் பொழியும் போது, அதன் இசையில் மயங்காதவர்கள் எவரும் இல்லை என்கிறார். வழிப்பறிக் கொள்ளையர்கள் கூட இந்த இசையைக் கேட்டதும், தங்களது கொலை, கொள்ளை செய்யும் எண்ணத்தைக் கைவிட்டுவிடுவார்களாம். தங்களது கையில் மறைத்து வைத்துள்ள கொடிய கொலைக் கருவிகளைக்கூட இசையில் மயங்கிக் கீழே போட்டு விடுவார்கள் என்கிறார் புலவர்
கல்லாடம் என்னும் சைவ நூல் கல்லாடர் என்பவரால் இயற்றப்பட்டது. ஒன்பதாம் திருமுறைகளில் ஒன்றான இந்த நூல் கி.பி. 11-ஆம் நூற்றாண்டளவில் தோன்றிய கல்லாடம் அகப்பொருள் நூலாகும். கல்லாடத்தில் நாரதப்பேரியாழ், தும்புருயாழ், கீசகயாழ், தேவயாழ் என்று நான்கு வகை யாழ்கள் பற்றிய செய்திகள் உள. நாரதப் பேரியாழ் 1000 நரம்புகளைக் கொண்டது. தும்புருயாழ் 9 நரம்புகளையும், கீசக யாழ் 100 நரம்புகளையும் கொண்டுள்ளது என்கிறது.
மேலும், சோழர் காலக் கோயில்களான பொன்செய் நல்துணையீஸ்வரம், திருமங்கலம் கோயில்களிலும், பல்லவர் கால காஞ்சி கைலாசநாதர் கோயிலிலும், யாழ் குறித்தான பல சிற்பங்களைப் பார்க்கலாம். (இந்த சிற்பங்களின் புகைப்படங்கள் இணையத்தில் காணலாம்)
கொங்குவேளிர் என்ற சமண முனிவரால் இயற்றப்பட்டது பெருங்கதை என்ற காப்பியம். இதில் யாழ், வீணை, குழல், வளை, வயிர் ஆகிய ஐந்து பண்ணிசைக் கருவிகளாகும். பறை, முழவு, முரசு, தண்ணுமை, தடாரி, குடமுழா, பாண்டில் ஆகிய ஏழு தாளக் கருவிகளும் மனிதக் குரலும் இசையெழு தளங்களாகக் குறிக்கப்பட்டுள்ளன. (தமிழர் இசை பக்கம். 263). யாழ்நூல், நாரதகீதக்கேள்வி ஆகிய இசை நூல்கள் இருந்தன என்று கூறப்படுகிறது. ‘கேள்வி’ என்ற சொல் யாழ் கருவியையும், இசை நூலையும் குறிக்கும். இசைப்பயிற்சி பெறுவோர் இத்தகைய நூற்களைக் கற்றுத்தேற வேண்டும் என்கிறது. யாழும் பாடலும் வேறுபாடின்றி ஒத்து இயங்குதல் வேண்டும். பண்ணிசை விதிகளை நன்கு அறிந்த குற்றமற்ற கேள்வியறிவு உடையவர்களே சிறந்த இசை வல்லுநர் ஆவார் என்கிறது பெருங்கதை.
யாழினை இசைப்பதற்கென்றே 'பாணர்' என்ற குழு இருந்ததை இலக்கியங்கள் வாயிலாக அறியலாம். யாழ் மீட்டுவதையே தொழிலாக உடையவர்கள் என்றாலும் அவர்கள் யாழ்ப்பாணர், இசைப்பாணர், மண்டைப்பாணர் என்று மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டனர். அதில் யாழ்ப்பாணர், இசைக்கும் யாழின் அடிப்படையில் பெரும்பாணர், சிறுபாணர் என்று பகுக்கப்பட்டுள்ளார்.தமிழர்கள் யாழினின்று எழும் இசைக்கே முதன்மை அளித்தனர் என்பது தெள்ளத்தெளிவாகத் தெரிகின்றது
ஈழத்தவரான சுவாமி விபுலாநந்தர் 1947 இல் ”யாழ் நூல்” என்னும் தமது இசைத் தமிழ் நூலில் யாழைப் பற்றி பல விரிவான ஆய்வுகளைத் தொகுத்துள்ளார்.
யாழ் தமிழர்களின் வாழ்வில் ஒன்றி இருந்ததை இதில் காணலாம். யாழ் மட்டுமல்ல இன்னும் பல தமிழன் கண்ட தமிழ் இசைக்கருவிகள் இலக்கியங்களிலும் புராணங்களிலும் மட்டுமே வாழ்ந்து வருகின்றன. மீட்க வாய்பில்லை என்றாலும் பரவாயில்லை அதைப் பற்றி அறிந்து கொள்ள் முற்படுவோமே. அடியேனின் தாழ்மையான அன்பான வேண்டுகோள். திரிந்து புதைந்த நம் தமிழ் இசையை மீண்டும் தோண்டுவோம். தோண்டி மீட்போம்.

மேற்கோள்
·         http://ta.wikipedia.org/wiki/
·         http://www.varalaaru.com/
·         www.tamilvu.org
·         இசையின் ஈர இயக்கங்கள் /facebook
·         இசைத்தமிழ் இலக்கண விளக்கம், வா. சு. கோமதி சங்கர் ஐயர்
·         தென்னக இசையில், பி.டி செல்லத்துரை
·         சிலப்பதிகாரம் ஓர் எளிய அறிமுகம், சுஜாதா
·         தினம் ஒரு திருமுறை தேன் பதிகம், பால. இரத்தினவேலன்
·         இசையியல், ச. மெய்யப்பன் எம், ஏ, அண்ணாமலைப் பல்கலைக்கழகம்
·         Music in Cilappatikaram, Dr. S. Ramanathan, Madurai Kamaraj University

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

தமிழ் இலக்கியங்ளில் தோற் கருவிகள்


பண்டைத் தமிழ் இலக்கியங்ளில் தோற் கருவிகள் பல கூறப்படுகின்றன. அவை: பேரிகை, படகம், இடக்கை, உடுக்கை, மத்தளம், சல்லிகை, கரடிகை, திமிலை, குடமுழா, தக்கை, கணப்பறை, தமருகம், தண்ணுமை, தடாரி, அந்தரி, முழவு, சந்திரவளையம், மொந்தை, முரசு, கண் விடுதூம்பு, நிசாளம், துடுமை, சிறுபறை, அடக்கம், தகுணிச்சம், விரலேறு, பாகம், உபாங்கம், நாழிகைப்பறை, துடி, பெரும்பறை முதலியன. இவற்றின் பெயர்கள் யாவும் உருவத்தாலும், ஒலியாலும் அமைந்தவையாகும்.

இவற்றுள் மத்தளம், சல்லிகை, இடக்கை, கரடிகை, படகம், குடமுழா என்பவை இசைப்பாடலுக்குக் பக்க வாத்தியங்களாக உள்ளவை. இவை அகமுழவு எனப்படும்.

தண்ணுமை, தக்கை, தகுணிச்சம் என்பவை மத்திமமான கருவிகளாகும். இவை அகப்புற முழவு எனப்படும்.

சல்லிகை, கரடிகை என்பவை ஓசையினால் பெயர் பெற்றவை. மத்து என்னும் ஓசையினால் மத்தளம் என்ற பெயர் உண்டாயிற்று. சல் என்னும் ஓசையையுடையதால் சல்லிகை என்று பெயர். கரடி கத்தினாற்போல் ஓசையுடமையால் கரடிகை என்ற பெயர்.

இடக்கை, ஆவஞ்சி என்றும், குடுக்கை என்றும் வேறு பெயர்கள் உள்ளன. இடக்கையால் வாசிக்கபடுவதால் இடக்கை என்றபெயர் பெற்றது. ஆவின் தோலால் போர்த்தப்பட்டதால் ஆவஞ்சி என்ற பெயரையும், குடுக்கையாக அடைத்தலால் குடுக்கை என்றும் பெயர் உண்டாயின.


உறுமல் ஒலியை எழுப்புவது உறுமி. பம்பம் என்று ஒலிப்பது பம்பை. முர் முர் என்று ஒலிப்பது முருடு. மொகு மொகு என்று ஒலிப்பது தமருகம்.

தோற்கருவிகளுள் மிகவும் பெருமை வாய்ந்தது முரசு ஆகும். இது வீரமுரசு, கொடை முரசு, மண முரசு, என்று மூவகைப்படும். போரில் தோல்வியுற்ற பகை மன்னரின் காவல் மரத்தை வெட்டி, முரசாகச் செய்து வெற்றி முழக்கம் செய்வது வீர முரசாகும். புலியோடு போராடி, அதனை தன் கூர்ங்கோட்டால் குத்திக் கொன்று, கொம்பில் மண்ணுடன் பாய்ந்து சென்று உயிர் விட்ட இடபதத்தின் மயிர் சீவாத தோலைப் போர்த்திச் செய்யப்படுவது மயிர்கண் முரசம் என்று நூல்கள் கூறுகின்றன. பண்டைத் தமிழரசர் இம்முரசினைத் தெய்வத் தன்மையுடையதாகப் போற்றி வந்தனர். இதனை நாளும் இசை முழக்கத்துடன் நீர்த்துறைக்கு எடுத்துச் சென்று நீராட்டி, மாலை சூட்டி அலங்கரித்து வழிபாடு செய்வர்.

போர்களத்தில் வீரவெறியூட்டும் தோற்கருவிகள் பல இருந்தன. அவற்றுள் சில பறையும், பம்பையும், தடாரியும், முழவும், முருடும், கரடிகையும், திண்டியுமாம். இவ்விசைக்கருவிகள் யாவும் சேர்ந்து முழங்கும்போது வீரரது தலை சுழலும், நரம்புகள் முறுக்கேறும். போர் வெறிக்கொண்டு செருக்களம் நோக்குவர்.
சிலப்பதிகாரத்தில் 30 வகையான தோற்கருவிகள் கூறப்பெற்றுள்ளன. அவற்றுள் வல்லோசையுள்ள வன்மைக் கருவிகள் 14; வன்மையுமின்றி மென்மையுமின்றிச் சமமான ஓசையுள்ளவை நான்கு, மெல்லோசையுள்ளவை 12 என வகுத்து, அவற்றையே உத்தம கருவிகள், அதமக் கருவிகள் என்று வகுத்துக் கூறப் பெற்றுள்ளன.

இவ்வாறு வகுக்கப் பெற்றுள்ள பிரிவுகளில் மிக்க வன்மையும், மிக்க மென்மையுமின்றி, சமமான ஓசையுடைய நான்கில் ஒன்றாகவும்,உத்தமமான கருவியாகவும் கொள்ளப் பெற்றுள்ளது 'மத்தளம்' என்ற தோற்கருவியாகும்.

மத்தளம் என்னும் தோற்கருவியைச் செய்வதற்கு வேங்கை, கருங்காலி, பலா, சிலை, மலையாத்தி, வேம்பு, செம்மரம் என்ற 7 வகை மரங்களும் ஏற்றவை. இவற்றுள் ஒரே வகை மரத்தில் 48 விரல் நீளம், இடப்புறத்தில் 14 விரல் அகலம், வலப்புறத்தில் 13 விரல் அகலம், வட்டம் 1/2 விரல் கனமும் உடையதாக அமைத்து மத்தளம் செய்யப் பெற வேண்டும் என்றும், மரத்தினால் செய்யப்பெற்ற அதன் இருப்புறங்களும் தோலால் மூடப் பெறுதல் வேண்டும் இழுத்துக் கட்டுதல் வேண்டும் என்றும் கூறப்படும் செய்திகளைப் பின்வரும் பாடல்கள் விளக்கும்

"வேங்கை கருங்கா வீறாம் பலாவுசிலை
தாங்கும் மலையாத்தி தானாகும்- பாங்கு நிம்பம்
செம்மரமும் ஆமே சிறப்புடைய மத்தளத்துக்கு
இம்மரம் என்று இயல்பு"

"உண்மை திகழும் விதிவத்துற்ற மரத்தால் நாற்பத்
தெண்விரலின் நீளம் இடப்புறத்தில்- நண்ணும்
பதினால் விரல் வலம்பாற் பண்பு பதின்மூன்றாய்
மதியாரை விரற் பிண்டமாம்"

இம்மத்தளமும் இக்காலத்துள்ள மிருதங்கமும் பெரும்பாலும் ஒன்றே என்று கூறலாம். இரண்டும் உருவ அமைப்பில், கையாளும் முறையில் ஒத்துள்ளன. ஆனால் ஒலிப்பதில் மட்டும் வேறுபாடுண்டு. மத்தளம் மிருதங்கத்தை விட ஓசை மிக்கது. மத்தளம் வெளியிடங்களில் வாசிக்க ஏற்றது. நுட்பமான சுருதி பேதங்களுக்கு அதில் இடமில்லை. மிருதங்கத்தின் ஓசை மென்பையானது. அடக்கமான இடங்களில் வாசிப்பதற்கு ஏற்றது. நுட்பமான சுருதி பேதங்களுக்கு இடமுண்டு. எனினும், வடிவத்திலும், உருவாக்கும் வகையிலும், கையாளும் முறையிலும் இரண்டும் ஒத்துள்ளன



  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

தொலைந்த தமிழைசை

இசை என்பது மிக்க மென்மையும், நுண்மையும் வாய்ந்து செவிப்புலனைக் குளிர்வித்து உள்ளத்தைக் கனிவிக்கும் இனிய ஓசையேயாகும். இனிய ஒலிகள் செவி வழிப்புகுந்து, இதய நாடிகளைத் தடவி, உயிரினங்களை இசையவும், பொருந்தவும் வைக்கின்ற பொழுது அவை இசை என்ற பெயரைப் பெறுகின்றன என்று குறிப்பிடுகிறார் ச.வே. சுப்பிரமணியன் அவர்கள். இசைக்கலை ஆயக்கலைகள் அறுபத்து நான்கினுள் ஒன்றான சிறப்புடைய சுவையாகும்

பாரம்பரிய இசை என்றாலே நமக்கு கர்நாடக சங்கீதம் தான் ஞாபகத்தில் எழும். கர்நாடக இசை என்ன என்பதை நாம் அறிவோம். ஆனால் தமிழிசை என்றால் என்ன என்பதை நம்மில் எத்தனைப் பேர் அறிவோம்? தமிழிசை வேறு கருநாடக இசை வேறு எனச் சிலர் கருதுகின்றனர். அது தவறு. தமிழிசை என்பதுதான் கருநாடக இசை; கருநாடக இசைத்தான் தமிழிசை. இரண்டும் வேறுபட்டவை அல்ல. ஒன்றே. வடக்கில் உள்ள பல நாடுகளில் கடல் இல்லை. அதனால் கடற்கரையும் இல்லை. ஆனால் தமிழகமோ மூன்று பக்கங்களிலும் கடல்களையும் கடற்கரைகளையும் கொண்டது. சோல மண்டல கடற்கரை, பாண்டி மண்டலக் கடற்கரை, சேர மண்டலக் கடற்கரை என்ற பெயர்கள் இன்றுவரை மக்களிடையே காணப்படுகின்றதாம். இதனால் தமிழகத்தைக் கரை நாடு என்றும் தமிழிசையைக் கரை நாட்டு இசை எனவும் வடக்கேயுள்ளனர் குறிப்பிட்டு வந்தனராம். அதையே பலரும் ”கர்நாட்டிசை” என்றனர்.  ஆங்கிலேயனும் அதை “கர்நாட்டிக் இசை” என்றான். ஆகவே கரை நாட்டு இசை என்பது தமிழ் இசையைக் குறிப்பது. காலப்போக்கில் வடமொழியின் மீது பற்றும், வட நாட்டின் மீது காதலும் கொண்ட சிலர், கரை நாட்டு இசையை, வட நாட்டு இசை என்றும், தமிழிசை இதற்கு முற்றும் மாறானது என்றும் கூறத் தொடங்கினர். தமிழில் உள்ள இசைக்கலை நூல்கள் வடமொழியில் பெயர்த்து எழுதினர்

இசை என்ற சொல்லுக்கு இசையவிப்பது, வயப்படுத்துவது ஆட்கொள்வது என்று பல பொருள் உண்டு. இசை என்ற சொல் மக்கள் மனதை வயப்படுத்துவது, அசையவிப்பது எனும் பொருளைத் தருகிறது என்பர் எம்.எம்.தண்டபாணி தேசிகர். இசை என்பது மிக்க மென்மையும், நுண்மையும் வாய்ந்து செவிப்புலனைக் குளிர்வித்து உள்ளத்தைக் கனிவிக்கும் இனிய ஓசையையேயாகும். இயற்றமிழே பண்ணோடு கலந்து தாளத்தோடு நடைபெறின் அதுவே இசைத் தமிழாகின்றது

கர்நாடக இசையென்று இப்பொழுது கூறப்படுகின்ற தமிழிசைக்கு வடமொழி நூலாகிய சங்கீத இரத்தினாகரம் என்ற நூலே இலக்கண நூலாகக் கருதப்பெற்று வருகின்றது. ஆனால் உண்மையில் நம் தமிழ் இசையிலக்கணச் செம்பாகங்கள் சிலப்பதிகாரத்தில் காணப்பெறும் ஒவ்வொரு காதையினுள்ளும் இரத்தனமணிபோல நுட்பமாக பொதிந்துள்ளன --(மகா வித்வான் வா.சு கோமதி சங்கர் ஐயர்)--

இசையென்பது தமிழன் பண்பாட்டில் சிறப்பு வாய்ந்த கலையாகும். இக்கலை முழுக்க முழுக்க ஒலி உருவினாலாய கலவையே ஆகும். இத்துணைச் சிறப்பு வாய்ந்த ஒரு கலையை முதன்முதலாகக் கண்டவர்கள் நம் தமிழரே ஆவர். இசைக்கலையின் சிகரமாக விளங்குவது நிறமென்ற இராகமே ஆகும். இவ்வாறான நிறத்தை ஆளத்தி செய்வது என்பது தமிழிசையில் மட்டுமே. இவ்வழக்கு வேறு எந்த நாட்டின் இசைக்கலையிலுமே இல்லை. இத்துணை மாண்பு பெற்று அமைந்துள்ள இசைக்கலைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றியதாக உரைக்கப்படும் சிலப்பதிகாரம் என்ற நூலே இலக்கண நூலாக இப்போது மதிக்கப் பெறுகின்றது. அது காப்பிய இலக்கியமாக மட்டுமின்றி இசைக்குறிய இலக்கண நூல்தானென்று மதித்து ஏற்றுகொள்ளுதல் வேண்டும் (இசைத்தமிழ் இலக்கண விளக்கம் மதுரை காமராசர் பல்கலைக்கழகம்)

தொல்காப்பியம், எட்டுத் தொகை பத்துப்பாட்டு முதலிய சீரிய நூல்களில் தமிழ்ப் பேரறிஞர்கள் சுட்டியுள்ள ஏராளமான இசைக் குறிப்புகளை விளங்கிக் கொள்ளலாம். சிலம்பின் ஆசிரியரும் சேரநன்னாட்டின் இளவரசருமான இளங்கோவடிகளை இந்திய நாடு கண்ட இசை மாமேதை என்றும், இசை இலக்கணத்தை அறிவியல் முறையில் அமைத்துத் தந்துள்ள இசை இலக்கணத் தந்தை என்றும் கூறலாம்.

     அடுத்து எழுநூறு ஆண்டுகளுக்கு முன் எழுந்த வடமொழி நூலாகிய சங்கீத இரத்தினாகரம் இசையிலக்கணத்தைச் செம்மையாகக் கூறும் நூலாக மதிக்கப்பெறுகின்றது.  சங்கீத இரத்தினாகரத்தை உற்று நோக்கினால் சிலப்பதிகாரத்தில் கூறப்பெற்றுள்ள இசைநுட்ப பகுதிகளே அங்கு வடமொழியில் வரப்பெறுதலைக் காணலாம். எனவே இவ்விரு நூல்களிலும் கூறப்பெறும் இசைச் செய்திகள் தான் இசையின் இலக்கணத்தை ஒன்றுபடுத்திக் காட்டுகின்றன.

தமிழ் மக்கள் பண்டைக்காலம் தொட்டு இசையை எவ்வாறு போற்றி வந்தனர் என்பதைத் தமிழ் நூல்களின் துணை கொண்டு தெரிந்துகொள்ளலாம். தமிழின் தொன்மை நூலான தொல்காப்பியத்தில் இசை பற்றிய குறிப்புகளோடு இசைவாணர்கள் மற்றும் பண்கள் பற்றிய எண்ணற்ற செய்திகள் இடம் பெற்றுள்ளன. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை எனும் ஐவகை நிலங்கட்கும் வெவ்வேறான யாழ், அல்லது பண் கூறப்படுவதினின்றும், அக்காலத்தில் இசைக்கலைப்பெற்றிருந்த சிறப்பும், ஐவகை நிலமக்களும் பெற்றிருந்த இசையுணர்ச்சியும் பெறப்படுகின்றது.

தொல்காப்பிய இசைக் குறிப்புகளை விளக்குவது சிலம்பின் இசை இலக்கணமே, தமிழிசை இலக்கணம் சிலம்புதொட்டு இன்று வரை சங்கிலித் தொடர்போல் தொடர்ந்து வருகிறது என்கிறார் டாக்டர் எஸ். இராமநாதன். தமிழில் ஒப்பற்ற இசைப்பாக்களாக நமக்குக் கிடைத்திருப்பன சிலப்பதிகாரத்தில் உள்ள கானல் வரி, வேட்டுவ வரி, ஆய்ச்சியர் குரவை, ஊர்குழ் வரி, குன்றக்குரவை, வாழ்த்துக்காதை எனும் ஆறு காதைகளும் ஆகும். இந்த ஆறு காதைகளுமே இசைப்பாக்களின் தொகுதியாகும். இனி தமிழ் மக்கள் பண்டைக்காலம் தொட்டு இசையை எவ்வாறு போற்றி வந்தனர் என்பதைத் தமிழ் நூல்களின் துணை கொண்டு நோக்கலாம். தமிழின் தொன்மை நூலான தொல்காப்பியத்தில் இசை பற்றிய குறிப்புகளோடு இசைவாணர்கள் மற்றும் பண்கள் பற்றிய எண்ணற்ற செய்திகள் இடம் பெற்றுள்ளன

     இசையில் பண் என்றும் திறமென்றும் இருவகை உண்டு. பண்கள் ஏழு நரம்புகளும் கொண்டவை. ஏழு நரம்புகளும் நிறைந்த ராகம் பண் எனப்படும். நரம்பு என்பது இங்கு  ரி      நீ  என்றும் ஏழு ஸ்வரங்களைக் குறிக்கும். இந்த ஏழு ஸ்வரங்களை வடமொழியில் ஷட்ஜம், ரிஷபம், காந்தாராம், மத்தியமம், பஞ்சமம், தைவதம், நிஷாதம் என்று குறிப்பிடுவர். இதுவே தமிழில் குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் எனப்படும். இவ்விசைகளின் ஓசைக்கு வண்டு, கிளி, குதிரை, யானை, குயில், தேனி, ஆடு ஆகியவையும், இவற்றின் சுவைக்கு முறையே தேன், தயிர், நெய், ஏலம், பால், வாழைக்கனி, மாதுளங்கனி, ஆகியவையும் உவமை கூறப்பட்டுள்ளதுடன், ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள எனும் உயிர் நெட்டெழுத்துக்கள் ஏழும் இவற்றின் எழுத்தாகவும் குறிப்பிடப்பட்டுள்ளன. பண்கள் பலவகைப்படும். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை, எனப் பண்கள் ஐந்து என்பர் - ந.சி. கந்தையாபிள்ளை.  

இறைவனையே இசைமயமாகக் கண்டவர்கள் தமிழ் மக்கள். ஏழிசையாய் இசைப்பயனாய் இருப்பவனே இறைவன் என்று குறிப்பிட்டனர். இறைவனை இசைக் கொண்டு பாடியே வணங்கினர். இம்முறையில் பண்ணோடு கூடிய பக்தி பாடல்கள் பல தமிழ் மொழியில் உள்ளன. இவற்றுள் தேவாரம், திருவாசகம், நாலாயிரப்பிரபந்தம், திருப்புகழ் முதலியவை குறிப்பிடத்தக்கவை. இசையின் சிறப்புணர்ந்த நம் முன்னோர் ஆதிமூலமான ஆண்டவனும் இசையை விரும்புகின்றான், இசை பாடுகின்றான், என்பதுடன் இசையின் வடிவாகவும், இசையின் பயனாகவும் உள்ளான் என்று கண்டறிந்தனர்.

தமிழ் மொழி தோன்றிய காலமே, தமிழிசைத் தோன்றிய காலம். தமிழ் மக்களின் எண்ணம், சொல், செயல், வாழ்வு அனைத்தும் இசைக் கலந்தவையாகவே காட்சியளிக்கின்றன. அவை, தாலாட்டு இசை, சோறூட்ட இசை, திருமண இசை, ஒப்பாரி இசை மற்றும் இன்னும் பல. இசை என்பது வாய்யினால் பாடுவது மட்டுமல்ல; கருவியினால் இசைப்பதும் இசையே ஆகும். அவை தோல் கருவி, துளைக்கருவி, நரம்புக்கருவி என மூவகைப்படும். இவற்றை விழா நாட்களிலும் இசைத்து முழக்குவது மட்டுமல்ல பிற நாட்களிலும் இசைத்து முழக்குவதுண்டு. மணப்பறை, பிணப்பறை, போர்பறை, விழாப்பறை என்ற சொற்கள் இவற்றை பெய்பிக்கின்றன.

குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை, எனப் பண்கள் ஐந்து என்கிறார் ந.சி. கந்தையாபிள்ளை. இப்பண்கள் வடமொழியில் ராகம், என்று கூறப்படுகின்றன. இதனை மேளகர்த்தா, ராகம் அல்லது ஐனகராகம் என்றும் கூறுவர். ‘பண்ணிலிருந்து திறங்கள் பிறக்கும்நிரை நரம்பிற்றே திறமெனப்படுமே’ என்ற திவாகரச் சூத்திரம் பண்கள் மற்றும் திறங்களின் இலக்கணத்தை விளக்கும் திறங்களே தற்போது ஜன்யராகம் என்று வழங்கப்படுகின்றன.

தமிழிசைக் கருவிகளுக்குப் பெயரிட்ட தமிழ் மக்களும், தமிழுக்கென்று சிறப்பாக உள்ள “ழ” என்ற எழுத்தை அச்சொல் ஒவ்வொன்றிலும் வைத்து தோல் கருவிக்கு ‘முழவு’ என்றும், துளைக்கருவிக்கு ‘குழல்’ என்றும், நரம்புக் கருவிக்கு ‘யாழ்’ என்றும் பெயரிட்டிருக்கின்றனர். இவை அனைத்தும் தமிழனின் சொத்து.

தமிழ்ச் செய்யுட்டுரைக் கோவை போன்ற பல தமிழிசை நூல்கள் காலத்தால் அழிந்து விட்டன. சங்கீத மும்மூர்த்திகளான தியாகராச சுவாமிகள், சியாமா சாஸ்திரிகள், முத்துசுவாமி தீட்சிதர் பல கீர்த்தனைகளை உருவாக்கினர். அவர்கள் கீர்த்தனைகளைத் தெலுங்கு மொழியில் பாடினர். ஆனால் தமிழிசை ஆதி மும்மூர்த்திகள் என முத்துத் தாண்டவர், அருணாசலக் கவிராயர், மாரிமுத்துப் பிள்ளை என்னும் முப்பெரும் இசை அறிஞர்கள் சீர்காழியில் வாழ்ந்து கருநாடக இசையை செப்பமுற வளர்த்தனர். ஆதி மும்மூர்த்திகள் பாடிய இசைப்பாடல்கள் புகழ்பெற்ற தமிழ்ப்பாடல்கள் ஆகும்.

மேலும், மாபெரும் தமிழிசை மேதை இலங்கை அரசன் இராவணனே. இராவணன் சிறந்த யாழ்பாணன் (யாழ் மீட்டுபவர்). அவன் இயற்றிய இசை நூலின் பெயர் இராவணியம் என்று சிங்காரவேலு முதலியாரின் அபிதான சிந்தாமணியில் (ecyclopedia of tamil literature) குறிப்படப்பட்டுள்ளது. இராவணன் தமிழன் என்று அனைவரும் அறிந்த ஒன்றே. தமிழிசை அங்கும் குடிக்கொண்டிருந்தது என்று சொல்வதில் சிறிதும் ஐயமுல்லை

காலத்தால் தமிழிசை மட்டுமல்லாமல் தமிழிசைக் கருவிகளும் பல நம் கைவிட்டு நழுவி தற்போது திரிந்து வேறு பெயர்களில் உலா வருகின்றன. தமிழ் மக்களுக்கே தன் சொத்து எது என்று அடையாளம் தெரியாத அளவிற்கு மாற்றம் கண்டு விட்டது தமிழிசை என்றும் கூறலாம். பலர் தமிழிசை அழிந்துவிட்டது என்று கூறுகின்றனர். ஆனால் தமிழிசை திரிந்து களவுப்போய் விட்டது என்பதே உண்மை

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS