RSS

பிற திருமுறைகள்

நால்வர் அருளிய தேவார, திருவாசகம் நீங்கலாகப் பிற திருமுறைகள், பல சைவத் திருத்தொண்டர்களால் பாடல் பெற்ற பாடல்களை உடையன.
ஒன்பதாம் திருமுறை
திருமாளிகைத்தேவர்,     சேந்தனார்,     சேதிராயர், கண்டராதித்தர், பூந்துருத்தி நம்பி காடநம்பி, திருவாலியமுதனார், புருடோத்தம நம்பி, கருவூர்த்தேவர், வேணாட்டடிகள் ஆகிய ஒன்பதின்மர்     பாடிய  பாடல்கள் திருவிசைப்பா, திருப்பல்லாண்டு ஆகும். ஓசை நயம் உடைய 301 பாடல்களைக் கொண்டு இத்திருமுறை ஒன்பதாம் திருமுறையாக அமைந்துள்ளது. இது இசைப் பாடல்களாக உள்ளது. சேந்தனார் பாடியது திருப்பல்லாண்டு.

பத்தாந் திருமுறை
 திருமூலர் இயற்றிய திருமந்திரம் பத்தாம் திருமுறையாகும். காலத்தால் மூவர் முதலிகளுக்கு முந்தியவர். 5 அல்லது 6ஆம் நூற்றாண்டினர் எனலாம். தமிழகத்தில் தோன்றியமுதல் சித்தர்திருமூலர் என்பர். கூடு விட்டுக் கூடு பாயும் ஆற்றல் உடையவர். ஆண்டுக்கொரு பாடல் வீதம் 3000 ஆண்டுகள் வாழ்ந்து 3000 பாடல்கள் பாடினார் என்பது தமிழ் மரபும், சித்தர் மரபும் கூறும் செய்தியாகும். மந்திரங்கள் போன்று செறிவாகவும், ஆழ்ந்த பொருள் உடையனவாகவும், மறைபொருள்கள் அமைந்தனவாகவும் பாடல்கள் உள்ளன. யோகநெறி, தத்துவக் கருத்துகள், சித்த வைத்தியக்     கருத்துகள்     பொதிந்துள்ளன. அன்புதான் அனைத்திற்கும் அடிப்படை ஆதாரம் ; ‘அன்பே சிவம்என்று விளக்கமுறச் செய்தவர் திருமூலர். உள்ளம் பெருங்கோயில் என அக வழிபாட்டு முறையை மேற்கொண்டு ஒழுகியவர்; கடவுளிடத்துச் செலுத்தும் அன்பை மட்டுமல்லாமல் மக்களுக்குச் செய்யும் தொண்டையும் அன்பையும் அவர் வற்புறுத்தியுள்ளார்.
                                            
பதினோராம் திருமுறை
 பதினோராம் திருமுறை, திரு ஆலவாய் உடையார், காரைக்கால் அம்மையார், ஐயடிகள் காடவர் கோன், சேரமான் பெருமாள், நக்கீரதேவர், கல்லாட தேவர், கபில தேவர், பரணதேவர், இளம்பெருமான் அடிகள், பட்டினத்துப் பிள்ளையார், நம்பியாண்டார் நம்பி ஆகிய பன்னிருவரின் 40 நூல்கள் இத்திருமுறையில் அடங்கும். மொத்தப் பாடல்கள் 1401.

காரைக்காலம்மையார்
 காரைக்காலம்மையார் காலத்தால் முந்தியவர் கி.பி. 5 அல்லது 6 ஆம் நூற்றாண்டினர் எனலாம். இவ்வம்மையார் பாடியவை அற்புதத்திருவந்தாதி, திருவிரட்டை மணிமாலை, திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம் என்பவை. எளிய சொற்களில், ஆழமான கருத்துகளைத் தெளிவாகக் கூறுவார். இறைவனால்     அம்மையே’!     என்று அழைக்கப்பட்ட பெருமைக்குரியவர். தம்முடைய சிவபக்தியைக் கண்டு ஒதுங்கிய கணவனுக்குப் பயன்படாத உடலை நீக்குமாறும், தனக்குப் பேய் வடிவம் தருமாறும் சிவனிடம் வேண்டிப் பெற்றவர். அந்தாதி, பதிக அமைப்பின் முன்னோடியாகவும் இசைப்பாடல்களுக்கு முன்னோடியாகவும் விளங்குபவர். சைவப் பெண்மணிகளுள் பாடல் பாடும் புலமை பெற்றவர் இவர் ஒருவரே என்னும் தகைமைக்குரியர். இவர் நூல்கள் சைவ சமயத்துப் பக்திப் பாடல்களுள் மிகப் பழமையானவை ; அவை பக்தியும் ஞானமும் நிரம்பிய பழம் பாடல்களாக இன்றும் போற்றப்படுகின்றன

பட்டினத்தார்
 திருவெண்காட்டு     அடிகள்     என்று கூறப்படுகின்ற பட்டினத்துப் பிள்ளையார் கோயில் நான்மணிமாலை, திருக்கழுமல மும்மணிக்கோவை, திரு ஏகம்பமுடையார் திருவந்தாதி, திருவொற்றியூர் ஒருபாஒருபஃது ஆகிய நான்கு        நூல்களை எழுதியுள்ளார்.

நக்கீரர்
 நக்கீரர்     இயற்றிய     திருமுருகாற்றுப்படையும் இப்பதினோராம் திருமுறையில் ஒன்றாக விளங்குகின்றது. அவர்  இயற்றிய திருஎழுகூற்றிருக்கை முதலிய நூல்களும் இதில் அடங்கும். நம்பியாண்டார் நம்பி ஞானசம்பந்தரைப் பற்றி 5 நூல்களும் திருநாவுக்கரசரைப் பற்றி ஒரு நூலும் பாடியுள்ளார். மேலும் திருத்தொண்டர்களைச் சிறப்பிக்கும் திருத்தொண்டர் திருவந்தாதியும் பாடியுள்ளார்.

பன்னிரண்டாம் திருமுறை
திருத்தொண்டத்தொகை,     திருத்தொண்டர் திருவந்தாதி ஆகியவற்றின் கருத்துகளை விரிவுபடுத்தி, சேக்கிழார் திருத்தொண்டர் புராணம் பாடியுள்ளார். இதுவே பன்னிரண்டாம் திருமுறையாகும். இதுவே பெரிய புராணம் என வழங்கப்படுகிறது. இது ஒரு தேசிய இலக்கியம் என்று அழைக்கப்படுகின்றது. 63 நாயன்மார்களின் வரலாற்றையும் அழகாகக் கூறுகின்றது.

 பக்தியின்     மேன்மை, மக்கள் வாழ்க்கை முறை, திருத்தொண்டர்களின்     தொண்டின் சிறப்பு, தமிழ்நாட்டின் திருத்தலங்கள் பற்றிய செய்திகள் ஆகியவற்றை விளக்கமாகத் தெரிவிக்கின்றது இந்நூல்.
 பக்திச் சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய கவி வலவஎன்று மீனாட்சி சுந்தரம் பிள்ளை, சேக்கிழார் பிள்ளைத் தமிழில் சேக்கிழாரைப் போற்றியுள்ளார்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

1 comments:

பெயரில்லா சொன்னது…

மாற்ற மனங்கழிய நின்ற மறையோனை
நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனை காண
இந்த பக்கத்தில் இருக்கும் வீடியோவை பாருங்கள்.
ஐயா இரகசியங்களை தெளிவாக விளக்கி உள்ளார்.

இங்கே சொடுக்கவும்


ஆசைஉண்டேல் வம்மின் இங்கே அருட்சோதிப் பெருமான்
அம்மையுமாய் அப்பனுமாய் அருளும்அரு ளாளன்

அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி
தனிப் பெரும் கருணை அருட்பெரும் ஜோதி