RSS

Pandavas Fusion Band


உலகம் மட்டுமின்றி இந்த அண்ட சராசரமே இசையுடன் தான் இயங்கிக் கொண்டிருக்கிறது. நம் கற்பனைக்கு அப்பாற்பட்டதே இசை. ஓம் என்ற பிரணவ அதிர்வினால் பிறந்ததே இசை. மேற்கத்திய இசை, நாட்டுப்புற இசை, கர்நாடக இசை என்று பல வகைகள் உள்ளன. மனித வாழ்வில் இசை இன்றியமையாத ஒன்றாகத் திகழ்கிறது. நம் தினசரி வாழ்வில் நாம் செய்யும் பல வேளைகளில் இசைக் கலந்திருக்கிறது, என்று “pandavas fusion band” இசைக்குழுவின் உறுப்பினரான சித்தார் வித்வான் திரு. கலை கூறுகின்றார்.
ஏழு வித்வான்களுடன் இயங்கி வரும் இந்த ”pandavas fusion band” குழு இந்த ஆண்டு ஜனவரி மாதமே தொடங்கப்பட்டது. இந்த குழுவில் சித்தார் வித்வானக, திரு.கலை, தபலா வித்வானாக டாக்டர். கிரிதரன், acoustic guitar வித்வானாக திரு. அரியனாயகன், box drum வித்வானாக திரு. ரிஷி குமார், புல்லாங்குழல் வித்வானாக திரு. மகேந்திரன், bass guitar வித்வானாக திரு. ஸ்ரீ ராம் மற்றும் percussions வித்வானாக திரு. பால கணபதி ஆகியோர் திகழ்கின்றனர்.
பல வகையான இசைகளை இசைக்க வள்ளவர்களாக இவர்கள் திகழ்கின்றனர். ’இசை என்பது தியானம் (music is meditation)” என்பதே இவர்களின் கொள்கை. மேலும், பல தரப்பு மக்களுடன் இசையைப் பகிர்ந்துகொள்ள விரும்புகின்றோம் என்றும் கூறுகின்றனர். இசையை விரும்பாதோர் உலகில் எவரும் இருக்க மாட்டார்கள். பிறந்த குழந்தை முதல், தள்ளாடும் முதியோர் வரை சலிக்காது விரும்பும் ஒரே விஷயம் இசை தான். அதேபோல் இவர்களின் இசையைப் பிடிக்காதவர்கள் எவரும் இல்லை என்றும் கூறலாம்.
இதுவரை கிட்டத்தட்ட 20 நேரடி இசைப் படைப்புகளைப் படைத்துள்ளனர் (live concerts) என்பது பெருமைக்குறிய விஷியமே. இசையை உலக அரங்கில் பகிர்வதைத் தங்களின் இலட்சியமாக கொண்டுள்ளனர். தற்பொழுது ஓர் வாத்திய இசை (instrumental) ஆல்பம் ஒன்றைத் தயாரிக்கும் முயற்சியில் ஈடுப்பட்டிருக்கும் இவர்களுக்கு நம் வாழ்த்துகளும் பாராட்டுகளும் சமர்பனம்.
இறைவன் அருளால் இந்த குழுவை நிறுவ நாங்கள் அதிகம் சவால்களை எதிர்நோக்கவில்லை காரணம் நாங்கள் இசை அன்னைக்குப் பிள்ளைகளாகவும் சகோதரத்தன்மையுடனும் செயல்பட்டு வருகின்றோம் என்று கூறினர். இந்த குழு உறுப்பினர்கள் அனைவரும் ஒற்றுமையுடனும், கட்டொழுங்குடனும், இசையை மட்டுமே முழுமூச்சாகவும், நோக்கமாகவும் கொண்டு தங்களின் குழு வளர்ச்சிக்கு இசையுடன் ஒன்றர கலந்து பாடுபடுகின்றனர்.
தற்பொழுது “pandavas fusion band” குழு ஒர் ஆய்வினையும் நடத்திக்கொண்டு வருகின்றனர். Music therapy எனப்படும், இராகங்களின் மூலம் நோய் தீர்க்கும் முறையை ஆய்வுச் செய்து வருகின்றனர். அடுத்த வருடம் உலக அரங்கில் இசையைப் படைக்க இசைச் சுற்றுலா (world tour concerts) செல்வதாகவும் கூறினர்.
இவர்களின் குழு பற்றி மேலும் தெரிந்து கொள்ள www.facebook.com/groups/ThePandavasFusionBand  வலம் வாருங்கள். இவர்களின் இசைக்குழுவை நாட 016 - 3497690 என்ற எண்ணிற்கு அழைக்கலாம். மேலும் வளர்ந்து வரும் இவர்கள் மென்மேலும் பல சாதனைகளைப் படைத்து உலக அரங்கில் கால் பதிக்க இறைவனை வேண்டுகின்றோம்.




  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

இசைத் தோற்றம்

(தலைப்பை கிளிக் செய்து முழுக் கட்டுரையைப் படிக்கவும்)


ஓசையுலகம் :
கண்ணை மூடித் திறந்தால் உருவுலகம் கண்ணுக்குப் புலனாகின்றது. அதுபோல் செவிக்குப் புலப்படுவது ஓசையுலகமாகும். உருவுலகத்தில் கல், மண், மலை, நீர், நெருப்பு, புழு, பறவை, விலங்கு, மனிதர் முதலிய அசையும் பொருள்களும், அசையாப் பொருள்களும் அடங்குகின்றன. ஓசையுலக்த்தில் இடிமுழக்கம், கடலோசை, கைக்கொட்டுதல், நீர்வீழ்ச்சியின் இரைச்சல், பறவை விலங்குகள் ஒலித்தல், பேச்சு, பாட்டு, அழுகை, இசைக்கருவிகளின் முழக்கங்கள் போன்றவைக் காதினால் கேட்கபெறுகின்றன. இந்த ஓசையுலகமானது, ஓசையுலகம், இயல் உலகம், இசையுலகம் என மூவகைப்படும்.  ஓசை, பேச்சு, பாட்டு ஆகிய விகற்பங்கள் அனைவரும் அறிந்த ஒன்றே.

ஓசை:
மணியின் ஓசையைக் கேட்டு அது கோயில் மணி ஓசை என்றும், பக்கத்து வீட்டுத் தெய்வ வழிப்பாட்டு மணியின் ஓசையென்றும் பேதம் தெரிந்துகொள்கிறோம். இரயில் ஊதுவதைக் கேட்டு சுமார் இன்ன தொலைவில் இருந்து வருகின்றது என்பதை ஊகிக்கிறோம். இரும்பு அடித்தல், கல் உடைத்தல், பேருந்து, ஆகிய ஓசைகளின் விகற்பங்கள் நன்றாய் உணரப் பெறுகின்றன.

பேச்சு:
இது “அ, இ, உ, எ, - க, ங, ச, ஞ” முதலிய எழுத்து ஒலிகளால் பாகுபாடு செய்யப் பெறுகின்றது. எழுத்துகளால் சொற்களும், சொற்களால் சொற்றொடர் வரிகளும் உண்டாயின. அச்சொற்றொடர் வரிகள் உலகத்திலுள்ள அகச் செய்திகளையும் புறச் செய்திகளையும் வசன நடையாலும், செய்யுள் நடையாலும் தெரிவிக்கின்றன. இது கலைகளின் இயல் உலகம் எனப்பெறும். இதில் படிப்பும் விகாரங்களும் எழுத்தும் அடங்குவனவாகும்.

பாட்டு:
இது மகிழ்ச்சியினால் வெளிவருவதாகும். இது கீதம், கானம், எனப் பெறும். தமிழ்மொழியில் பாட்டு, இசை எனவும் கூறத்தகும். இந்த கீதமானது தூய்மை செய்யப்பெற்றுக் குற்றம் இன்றி விளக்கும் போது அது இசையாகின்றது. சங்கீதமென்றால் "ஸம் கீதம்- சம்யக் கீதம்- சங்கீதம்". சிறப்பினும் சிறப்பான மாண்புபெற்ற கீதமானது சங்கீதமாகும். கீதம் என்பதற்குச் சுரமென்றும், சுரக் கூட்டமென்றும் பொருள் உள்ளது. இந்த சங்கீதமாகிய இசையானது தொண்டையின் விரிவினாலும் ஒடுக்கத்தினாலும் இனிய ஒலிஉருவத்தோடு வெளிவருவதாகும்

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

கார்டோன்களில் வாழும் யாழ்...

(தலைப்பை கிளிக் செய்து முழுக் கட்டுரையைப் படிக்கவும்)

கார்டோன்களில் வாழும் யாழ்... (முழுமையா படியுங்கள்)

பண்ணியாழ் பயில்கின்ற மங்கையர் பாடல் ஆடலொடு ஆர வழொஅதி
தெண்ணிலா மதியம் பொழில் சேருந் திருக்களருள்
உண்ணிலாவிய ஒருவனே இருவர்க்கு நின்கழல் காட்சியாரழல்
அண்ணலாஅ எம்மான் அடைந்தார்க்கருளாயே
--திருஞான சம்பந்தர்--

விளக்கம்:
குளிர்ந்த சோலைகள் சூழ்ந்த திருக்களர் எனும் திருப்பதியில் கோயில் கொண்டு எழிந்தருளியுள்ள பெருமானே!
யாழைத் திருத்திய சுரம் அமையப் பண்ணிப் பாடி ஆடும் மங்கையர் நிறைந்த திருப்பதியாகிய திருக்களருள்ளும், அன்பர்கள் உள்ளத்திளும் நீங்காது நின்றருளும் ஒப்பற்றவனே...


தமிழிசையில் மூத்த இசைக்கருவியாகத் திகழும் யாழ் இப்பதிகத்தில் திருஞானசம்பந்தரால் பாடப்பட்டுள்ளது... மேலும், திருஞானசம்பந்தர் அருளிய தேவர பாடல்களுக்கு யாழ் இசையை மீட்டியவர் நீலகண்ட யாழ்பாணர் என்பது குறிப்பிடத்தக்கது... தாழ்ந்த குலத்தில் பிறந்தும் திருஞானசம்பந்தரின் பாடல் பதிகங்களுக்கு யாழிசை மீட்டும் பாக்கியம் கிடைத்தது நீலகண்ட யாழ்பாணருக்கு... இவர் இசை மீட்டுவதால் தான் திருஞானசம்பந்தரின் பாடல் சிறக்கிறது என்று கூறிய அவரின மக்களின் சொல்லைத் தாங்க முடியாமல், தான் வாசிக்க முடியாத அளவிற்கு ஒரு பாடலை அருள வேண்டினார்.. அவரின் வேண்டுதலுக்கு இணங்க “மாதர் மடப்பிடியும்” எனும் பாடலை அருளினார் திருஞானசம்பந்தர். சரியாக யாழ் இசைக்க முடியாமல் நீலகண்ட யாழ்பாணர் தனது யாழை உடக்க முற்பட்டப்போது அதை திருஞானசம்ந்தர் தடுத்தக் கதையும் உண்டு...
யாழ் தமிழர்களின் வாழ்வில் ஒன்றி இருந்ததை இதில் காணலாம்...பழம்பெரும் தமிழிசைக்கருவி யாழ் நம் கைவிட்டு போய் விட்டது...   நான் சிறுவதாக இருக்கும் பொழுது இவ்விசைக்கருவியை "fair tale" கார்டோன்களில் கண்டதுண்டு. வழக்கத்தில் இவ்விசைக்கருவியை கண்டிராததால் அது மேற்கத்திய இசைக்கருவி என்றும் கார்டூணுக்கு உரிய இசைக்கருவி என்றும் நினைத்ததுண்டு... பின்னர் உண்மை அறிந்த பின்னே. யாழ் தமிழ கண்ட இசைக்கருவி என்றும் அதன் மகிமையும் புரிந்துகொண்டேன்... இன்னும் நம்மில் பலருக்கு இந்த உண்மை தெரியாமலே உள்ளது. யாழ் மட்டுமல்ல... இன்னும் பல தமிழன் கண்ட தமிழ் இசைக்கருவிகள் இலக்கியங்களிலும் புராணங்களிலும் மட்டுமே வாழ்ந்து வருகின்றன. மீட்க வாய்பில்லை என்றாலும் பரவாயில்லை அதைப் பற்றி அறிந்து கொள்ள் முற்படுவோமே... அடியேனின் தாழ்மையான அன்பான வேண்டுகோள்... திரிந்து புதைந்த நம் தமிழ் இசையை மீண்டும் தோண்டுவோம்... தோண்டி மீட்போம்... :)

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

வயலின் புகழ் டாக்டர். மணிபாரதி

(தலைப்பை கிளிக் செய்து முழுக் கட்டுரையைப் படிக்கவும்)

இசைப் பயணம்.

ஐயா டாக்டர் மணிபாரதியுடன் ஒரு சிறிய நேர்காணல்...

கல்விக்கு வாணி, வில்லுக்கு அர்ஜுணன், தாண்டவத்திற்கு தில்லைகூத்தன், என்பதுபோல் வயலினுக்கு டாக்டர். மணிபாரதி என்றும் கூறலாம்.
      புகழ்பெற்ற பாடல்களுக்கு (பல்லிக்கட்டு சபரிமலைக்கு,  மாணிக்க வீணை ஏந்தும், பகவான் சரணம், ஜெய ஜெய தேவி துர்கா தேவி) வரிகள் வடித்த கலைமாமணி வீரமணி சோமு அவர்களின் புதல்வன் தான் டாக்டர். மணிபாரதி. இவருடைய தந்தை ஓர் இசையமைப்பாளர் ஆவார். பிரபல பாடகர் கே. வீரமணி அவர்களின் உடன்பிறந்த சகோதரரும் ஆவார். 
இவருடைய தாத்தாக்கள், திரு குஞ்சேர பாரதிகள் (பிரபலமான மீனாட்சி & முருகன் கீர்த்தனைகளின் பதிவாளர்) மற்றும் திரு கோடீஸ்வர ஐயர் (72 மேளகர்த்தா இராகங்களைக் கொண்டு பாடல்களைப் பதிவுச் செய்தவர்). இசைக் குடும்பத்தில் பிறந்த இவரும் இசையை மூச்சாக கொண்டுள்ளார்.
      5 வயதில் ஒரு பாடகராக தனது இசைப்பயணத்தைத் தொடர்ந்தார். தனது சிற்றப்பாவுடன் பல கச்சேரிகளில் பாடியுள்ளார். 13ஆம் வயதில் வயலின் கற்கத் தொடங்கினார். வயலின் வித்வானாக தன் தொழிலை மேற்கொண்டார். 1979 ஆண்டிலிருந்து இசைத்துரையில் MSV, இளையராஜா, தேவா, ஏ.ஆர். ரகுமான், மற்றும் வட இந்தியாவிலும் 600க்கும் மேற்பட்ட இசையமைப்பாளர்கள் கீழ் வயலின் வித்வானாக தனது பணியை மேற்கொண்டுள்ளார். 1600 க்கும் மேற்பட்ட படங்களில் பிண்ணனில் வயலின் வாசித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது, தமிழ் மட்டுமின்றி கன்னடம், தெலுங்கு, ஒரியா போன்ற மொழிப் படங்களிலும் இசைச் சேவை செய்துள்ளார்.
      இசையுலகில் தனக்கென்று ஒரு முத்திரையைப் பதித்துள்ளார். இவர் தனது 30 ஆண்டு காலத்தில் 52 நாடுகளில் 8000 க்கும் மேற்பட்ட கச்சேரிகளில் வயலின் வாசித்துள்ளார். இவருக்கு உலகம் முழுவது இரசிகர்கள் இருக்கிறார்கள். திரையுலகைத் தவிர்த்து பல பக்தி பாடல்களுக்கு இசையமைத்து எஸ்.ஜானகி மற்றும் வாணி ஜெயராம் அவர்களின் குரலில் வெளியிட்டும் உள்ளார்.
      மேலும், கே,ஜே, யேசுதாஸ், சீர்காழி கோவிந்தராஜன், தி.எம் சௌந்தரராஜன், எஸ்.பி பாலசுப்பிரமணியம், போன்ற புகழ் பெற்ற பாடகர்களின் பாடல்களிகளில் வயலின் இசையைப் பதிவு செய்துள்ளார். கர்நாடக இசை மட்டுமின்றி மேற்கத்திய இசை யுத்திகளைத் தனது இசையில் பயன்படுத்தும் பழக்கம் இவருக்கு உண்டு. இந்தியன் முயூசிக் சிம்பனி (indian music symphony) என்ற concept ஐ தோற்றுவித்தார்.
      மலேசியாவைச் சேர்ந்த படாலாசிரியர் யுவாஜி வரிகளில், சாருலத்தா மணி குரலில் சித்திரமே என்ற பாடலுக்கு இசையமைத்துள்ளார். தற்பொழுது, எஸ். ஜானகி மற்றூம் வாணி ஜெயராம் அவர்களின் குரலில் “மூகாம்பிகை அருள் கீதம்” என்ற பக்தி album இசையமைத்து வெளியிட்டுள்ளார்.
இவர் இவரின் பணிக்காக பல விருதுகளையும் பெற்றூள்ளார். இவரின் இசைச்சேவையைப் பாராட்டி, மலேசிய இளஞர் கழகம் ’டாக்டர்’ Honorary Doctorate (D.Lit)  பட்டத்தை வழங்கி கௌரவித்தது. மேலும் மார்ச் 2012இல் டுபாயில் இவருக்கு ”வயலின் மாஸ்ரோ”(violin maestro) பட்டத்தை வழங்கி சிறப்புச் செய்தது. இவரின் இசை சேவை மிகவும் அளப்பெரியது.







  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

இந்துஸ்தானிய இசை மேதை தான்சேன்

இந்துஸ்தானி இசை வளர்ச்சிக்குப் பங்காற்றியவர்களுள் மிக முக்கியமானவர் தான்சேன். இவரின் இயர்பெயர் ராம்தனு பாண்டே. இவர் அக்பரின் அரசவைக் கலைஞராக விளங்கினார். இவர் சிறந்த பாடகர் மட்டுமன்றி சிறந்த ரபாப் வாத்தியக் கலைஞராக இருந்தார். இவர் சிறு வயதிலேயே இசையில் வல்லமைப் பெற்றவராக இருந்தார்  என வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன. 
அவர் சிறு பிள்ளையாக இருக்கும்போது அவர்கள் வீட்டுத் தோட்டத்தில் காய்த்த பழங்களை சாலையில் செல்பவர்கள் பறித்தது போக அவர்களுக்கு பயன் கிடைக்காத நிலை இருந்தது. தோட்டத்திற்குக் காவலாக இருக்கும்படி தான்சேனை அவன் தந்தை அனுப்பினார். சிறுவனாக இருந்தபோதும் தான்சேன் ஒரு  யுக்தி செய்தான். அவன் தோட்டத்தில் செடி மறைவில் ஒளிந்து கொண்டு ஆண் புலியைப் போல உறுமினான். அக்குரல் தத்ரூபமாக இருந்ததால் தோட்டத்தில் புலி இருக்கிறது என்று பயந்து நாளடைவில் யாருமே அந்தப்பக்கம் வருவதே இல்லை. ஒரு நாள் இரண்டு சாதுக்கள் அவ்வழியே வந்தனர். அவர்களைக் கண்ட தான்சேன் புலியைப் போல உறுமினான். ஒரு சாது ஓடிவிட்டார்.ஹரிதாஸ் எனும் சாது மட்டும் தைரியமாகத் தோட்டத்திற்குள் நுழைந்து பார்த்தார். தான்சேன் செடி மறைவில் இருப்பதைக் கண்டார். அவருக்கு தான்சேன் திறமையில் அபாரப் பற்று ஏற்பட்டது. எனவே தனக்குத் தெரிந்த இசைக்கலையை அவனுக்கு அன்று முதல் புகட்ட ஆரம்பித்தார். அவன் ஒப்பற்ற இசை மேதை ஆகி விட்டான். ஒரு கதையாய்ப் போய்விட்ட பிறகும் கூட தான்சேன் பாட ஆரம்பிக்கும்போது புலியைப்போல உறுமாமல் துவங்குவது இல்லை. அந்த உறுமலே தான்சேனின் குரு வணக்கம்.  (ந.பிச்சமூர்த்தி கதைகள் எனும் நூலிலிருந்து.)
இவரும் பல இராகங்களை கண்டு பிடித்ததுடன் பல துருபத்களையும் இயற்றியுள்ளார். கருநாடக இசைக் கலைஞர்கள் திருவையாறுக்கு சென்று தியாகராஜரின் சமாதியை வழிபடுவது போல் இந்துஸ்தானி சங்கீத வித்துவான்களும் தான்சேனின் சமாதியை வழிபடுகின்றனர்.
தான்சேன் குவாலியர் என்ற இடத்தில் ஓர் இந்துக் குடும்பத்தில் பிறந்தவர். தந்தை பெயர் முகுந்த் மிஸ்ரா. ஹரிதாஸ் சுவாமிகளிடம் இசை பயின்ற தான்சேன் மேவாவின் (Mewa) அரண்மனை வாத்தியக்கலைஞராக இருந்தார். பின்னர் அக்பரின் அரசவைக் கலைஞரானார். மியான் என்னும் பட்டத்தையும் அக்பரிடம் இருந்து பெற்றுக்கொண்டார். மியான் தான்சேன் பின்னர் இஸ்லாமியத்துக்கு மதம் மாறினார். தான்சேன் தனது பாடலினாலேயே விளக்குகளை எரிய வைக்கும் திறமைப் பெற்றவராக இருந்தார் என்றும் சொல்லப்படுகிறது.  அவரது மகள் தன்னுடைய இசையின் மூலம் மழையை  வரவைத்ததாகவும் சொல்கிறார்கள்.
பின்னாளில் இவரது இசையைப் பற்றிக் கேள்விப்பட்ட முகலாயப் பேரரசர் அக்பர் தான்சேன் அவர்களை தனது அரசவையிலேயே இருக்கச் சொல்லி அவரது இசையிலே மயங்கியதாகவும் தான்சேன் அக்பரது மகள் மெஹருன்னிசாவை மணந்ததாகவும் கூறப்படுகிறது.
சூஃபி பாடல்களை மற்றுமொரு குருவிடம் கற்றுக் கொண்டுஇருக்கிறார்.  
அந்த குருவின் பெயர் முகம்மது கவுஸ்.  தற்போதுதான்சேன் சமாதி கூட முகம்மது கவுஸ் அவர்களுடைய சமாதிஇருக்கும் இடத்தின் பின் பக்கமே இருக்கிறது. 




  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

காவடிச்சிந்து (அண்ணாமலை ரெட்டியார்)

(தலைப்பை கிளிக் செய்து முழுக் கட்டுரையைப் படிக்கவும்)


காவடிச்சிந்து (அண்ணாமலை ரெட்டியார்)
(19-ஆம் நூற்றாண்டு)

      காவடிச்சிந்தின் தந்தை என்று அழைக்கப்படுவதற்குத் தகுதியானவர் அண்ணாமலை ரெட்டியார் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சென்னிகுளம் என்ற ஊரில் 1865-ஆம் ஆண்டு பிறந்தார். இவருடைய தந்தை சென்னவ ரெட்டியார்; தாய் ஓவு அம்மாள்.
      இளமையிலேயே இவர் தமிழில் ஆர்வம் கொண்டு இராமசாமி என்ற புலவரிடமிருந்து தமிழ் இலக்கியங்களைப் பயின்று வந்தார். மீனாட்சிசுந்தர கவிராயரும் உதவிப்புரிந்தார். சிலகாலம் உ.வே சாமிநாத ஐயரிடம் நன்னூல் கற்றார். மனப்பாடம் செய்யும் ஆற்றலும் இவரிடம் சிறந்து விளங்கியது.
      ஊற்றுமலை ஜமீன்ந்தார் இருதாலய மருதப்ப தேவர் இவரை ஆதரித்தார். ஜமீந்தார், கழுகுமலைக்குக் காவடி எடுத்த போது, அவருக்காக அண்ணாமலை ரெட்டியாரால் பாடப்பட்டவைகளே காவடிச்சிந்து ஆகும்.
      விநாயகர் துதியுடன் இந்தப் பாடல்கள ஆரம்பிக்கின்றன. இதற்குப் பின் முருகன்மீது சில பாடல்கள் உள்ளன. கழுகுமலை நகர், மலை, கோயில், குளம் ஆகியவையெல்லாம் மற்றப் பாடல்களில் விவரிக்கப்பட்டுள்ளன. முருகன் மிகவும் உன்னதமான நாயகனாகயும், மனித ஆன்மா அவருடன் ஒன்றிப்பதற்கு விழைவதாகவும்  சித்தரிக்கப்பட்டுள்ளது. பாடல்கள் அழகிய மெட்டுக்களைக் கொண்டுள்ளன. செய்யுள் நயம் சிறப்பாக உள்ளது. ஹரிகாம்போஜி, கரகரப்பிரியா, நடனபைரவி, சக்கரவாகம், முகாரி, ஆனந்த பைரவி, செஞ்சுருட்டி முதலிய இராகங்கள் கையாளப்பட்டுள்ளன. “புள்ளிக் கலாபமயில்” (கீழ்லுள்ள காணொலியில் இப்பாடலைக் காணலாம்) போன்ற சிந்துக்களின் இசை மிகவும் பழகிப்போய், “காவடிச்சிந்து மெட்டு” என்றே வழங்கப்படுகின்றது., ஆதிதாளம் மட்டுமின்றி, மிச்ரசாபு, கண்டலகு, திச்ரலகு, ஏகம், ரூபகம் முதலிய தாள வகைகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன. மற்றும் “முடுகு” என்ற விரைவாக பாடப்படும் பகுதியும் காவடிச்சிந்தின் ஒரு விசேஷ அம்சமாகும். “செந்தின் மாநகர்” என்று தொடங்கும் பாடலில் அதீத எடுப்பு காணப்படுகிறது. “கண்ணாயிரம்” என்று தொடங்கும் பாடலின் காலப்பிரமாணம் (சதுஸ்ர ஏகம்) வியப்பதற்குரியது; காவடி எடுத்து ஆடுவோர் கால் பெயர்த்து வைப்பதைக் காண்பது போன்ற உணர்ச்சி கேட்போர் உள்ளத்தில் எழும்.
      அண்ணாமலை ரெட்டியாரின் காவடிச்சிந்தில் மிகவும் பற்று கொண்டிருந்த மாகவி சுப்பிரமணிய பாரதியார் தானும் சில காவடிச்சிந்துக்களை இயற்றியுள்ளார். அண்ணாமலை ரெட்டியார் “வீரை தலபுராணம்”, “வீரை நவநீத கிருஷ்ணசாமி பதிகம்”, “கோமதி அந்தாதி” போன்ற நூற்களையும் படைத்துள்ளார். தன்னை ஆதரித்த ஊற்றுமலை ஜமீந்தார் மீது 300-க்கு மேற்பட்ட பாடல் வரிகளைப்பாடியுள்ளார்.
      அண்ணாமலை ரெட்டியார் உரையாடலில் திறமை உள்ளவர். பிறரைக் கவரும் தோற்றம் பெற்றவர். ஆனால் தன் வாழ்க்கையைத் தக்க வழியில் நடத்திச் செல்லாததால், தன் 26-ஆவது வயதில் காலமானார்.
      காவடிச்சிந்துக்களைப் பாடுவதில் ஆர்வம் கொண்டிருந்தவர்கள் காரைக்குடி வீணைச்சகோதரர்கள், மழவராயநேந்தல் சுப்பராம பாகவதர், ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதர் முதலானோர். காவடிச்சிந்து முதல் தடவையாக கல்குளம் குப்புசுவாமி முதலியார் அவர்களால் 1904-ஆம் ஆண்டு வெளிப்படுத்தப்பட்டது. டாக்டர் எஸ். இராமநாதன் அவர்கள் காவடிச்சிந்துகளின் உண்மையான மெட்டுகளைக் கண்டுபிடித்து அவற்றைச் சுரத்தாளக் குறிப்புகளுடன் 1966-ஆம் ஆண்டு வெளியிட்டார்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

தொல்காப்பியரும் இசையும்......

(தலைப்பை கிளிக் செய்து முழுக் கட்டுரையைப் படிக்கவும்)

தொல்காப்பியர் காலம் கி.மு. 7-ஆம் நூற்றாண்டிற்க்உ முந்தியது என்று அறிஞர் கூறுகின்றனர். இவர் இயற்றிய நூல்- தொல்காப்பியம் நமக்கு கிடைத்துள்ள மிகத் தொன்மை வாய்ந்த  இலக்கண நூலாகும். இந்நூல் எழுத்து, சொல், பொருள் என்னும் மூன்று அதிகாரங்களை உடையதாய் 1610 அகவற்பாக்களைக் கொண்டதாகும்.
     இந்த நூலில் இசை பற்றி பல அறிய செய்திகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஐவகை நிலங்கள், ஐவகை யாழ் வகைகள், ஐவகைப் பறை வகைகள் சுட்டப்பட்டுள்ளன.

நிலம்

இன்ப இசை யாழ்
தொழில் இசை பறை
முல்லை நிலம்

குறிஞ்சி நிலம்

மருத நிலம்

நெய்தல் நிலம்

பாலை நிலம்
முல்லையாழ்

குறிஞ்சியாழ்

மருதயாழ்

நெய்தல்யாழ்

பாலையாழ்
ஏறுகோட்பறை

வெறிய்யாட்டுப்பறை

நெல்லரிகிரிணை

மீன்கோட்பறை

நிரைகோட்பறை / சூறை கோட்பறை


தொல்காப்பியத்தில் யாழ் ஒரு கருப்பொருளாகவும், “யாழின் பகுதி” ஒரு கருப்பொருளாகவும் குறிக்கப்பட்டுள்ளது. யாழ் ஏழு நரம்புகளைக் கொண்ட பெரும் பண்ணையும், யாழின் பகுதி சிறு பண்ணையும் குறித்தது. (முல்லை = காடு;  குறிஞ்சி = மலை;  மருதம்= வயல்;  நெய்தல் =கடல்;  பாலை= வறண்ட நிலம்)

யாழ் (பெரும்பண்)
பாலை
யாழின் பகுதி (சிறு பண்)
முல்லை யாழ்
குறிஞ்சி யாழ்
மருத யாழ்
நெய்தல் யாழ்
செம்பாலை
படுமலைப்பாலை
கோடிப்பாலை
விளரிப்பாலை
முல்லைத் தீம்பாணி
குறிஞ்சிப்பாணி
வைகறைப்பாணி
நுளையர் பாலை

    
மேலே கூறப்பட்டுள்ள 4 பாலைகளுக்குரிய இன்றைய இராகங்கள் முறையே அரிகாம்போதி, நடபைரவி, கரகரப்பிரியா, தோடி என்பவையாகும்.
     தொல்காப்பியம் பல்வேறுவகை இசைப்பாடலைகளை விளக்குகிறது. (கலிப்பாடல், பரிபாடல், தேவபாணி, வெண்பா, ஆசிரியம், பண்ணித்து முதலியவை). மேலும் ஒலிகள் பிறக்கத் துணைச் செய்யும் உறுப்புகளை விரிவாக வகைப்படுத்திக் கூறுகிறது. நாவின் அசைவாலும், உதடுகளைக் குவிப்பதாலும், விரிப்பதாலும் இசை ஒலிகள் தோன்றுவது விளக்கப்பட்டுள்ளது. அடிவயிற்றினின்றி இசை ஒலி எழும்ப வேண்டும் என்பதை வற்புறுத்துகிறது. துள்ளல், தூங்கல், அகவல் ஆகிய ஓசைகளை அமைக்கும் முறைகள் விளக்கப்பட்டுள்ளன. குறளடி, சிந்தடி, அளவடி, நெடிலடி, கழிநெடிலடி என பாடல் அடிகளின் வகை காலக் கணிதம் மூலம் சுட்டப்பட்டுள்ளது. குறள் – இருமையும், சிந்து – மும்மையும் (திச்ரம்), அளவு – நான்மையும் (சதுச்ரம்), நெடில் – ஐமையும் (கண்டம்), கழிநெடில் – அறுமையும் சுட்டுகின்றன.
     பாணர், கூத்தர், விறலியர், துறை அமை நல்யாழ்துணைமையர், சூத்தர் முதலுயோர் தனித்தும், கூடியு, இசைத் தொழில் நடத்தியதைத் தொல்காப்பியம் குறிப்பிடுகின்றது. முல்லை பண்ணும் குறிஞ்சி பண்ணும் மகிழ்ச்சி சுவைக்கு உரியது என்றும், நெய்தல் பண் இரங்கல் சுவைக்கு உரியது என்றும், மருத பண் வெகுளிச் சுவைக்குரியது என்றும் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. எஞ்சியுள்ள பெரும் பொழுது, சிறுபொழுதுப் பற்றி தொல்காப்பியத்திற்கு முன்னரே பத்துபட்டிலும், எட்டுத் தொகையிலும் குறிப்பிடப்பட்டுள்ள்ன. பாடல்களைக் காலப்படுத்தி பாடும் முறை தொல்காப்பியம் தொடங்கி மரபாக வருகிறது. தொல்காப்பியத்திலுள்ள இசைச் செய்திகளை எல்லாம் தொகுத்தால் ஓர் அரிய இசைநூலை உருவாக்கலாம்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS