(தலைப்பை கிளிக் செய்து முழுக் கட்டுரையைப் படிக்கவும்)
திருஞானசம்பந்தக் குழந்தை மூன்று வயதிலேயே ஞானப்பால் உண்டு, சிவஞானம் ததும்பும் இசைப்பாடல்களைப் பொழிவதைக் கேள்வியுற்ற, திருஞானசம்பந்தரின் அன்னையாராகிய பகவதியாரின் ஊராகிய திருவெருக்கத்தம் புலியூரினராகிய திருநீலகண்ட யாழ்ப்பாணனாரும் அவருடைய மனைவியார் மதங்கசூளாமணியாரும் சீர்காழிக்கு வந்து பிள்ளையாரின் பேரன்புக்கு உரியரானார்கள். திருஞானசம்பந்தப் பிள்ளையார் அருளும் அறிவரிய திருப்பதிகங்களின் இசையினை யாழிலிட்டுப் பிறிவின்றிச் சேவித்து உடனிருக்கும் பேற்றினையும் பெற்றனர்.
திருநீலகண்ட யாழ்ப்பாணர் வாசித்த யாழ்க்கருவி சகோடயாழ் என்னும் பெயருடையது. அவரைச் சேக்கிழார் “சகோடயாழ்த் தலைவர்” எனப் போற்றுகின்றார். சகோடயாழின் பண்டைத் தமிழ்ப் பெயர் “செம்முறைக் கேள்வி” என்பது. இதில் பதினான்கு நரம்புகள் கட்டப் பெற்று இருக்கும்.
திருஞானசம்பந்தர் பாணனாரையும் பாடினியாரையும் தோணிபுரக் கோவிலுக்கு அழைத்துச் சென்று, கும்பிடுவித்து, “ஏயும் இசையாழ் உங்கள் இறைவருக்கு இங்கு இயற்றும்” என்று கூற, பாடினியாருடன் பாடி யாழ் வாசித்தார். அதனைச் சொல்ல வந்த சேக்கிழார் , “யாழிலெழும் ஓசையுடன் இவர் மிடற்றிசை ஒன்றி” என்றார். மிடற்றிசையோடு யாழிசை ஒன்றி என்று கூறாமல், யாழினுக்கு முதன்மை கொடுத்து அதன்வழி மிடற்றிசை நின்றது என்றார். அதன் நுணுக்கம் அறிதல் வேண்டும்.
யாழின் வழி மிடற்றிசை எனும் விதியின் விளைவு எத்தகையது என்று அறிதல் வேண்டும். அடியார்க்கு நல்லார் உரையின்படி அக்காலத்தில் 103 பண்கள் வழக்கிலிருந்தன என அறிகிறோம். 103 பண்களில் ‘கானத்தின் எழுபிறப்பு’ எனச் சேக்கிழார் பெருமானால் போற்றப் பெற்ற திருஞானசம்பந்தர் 21 பண்களில் மட்டுமே திருப்பதிகங்களை அருளியுள்ளார். அதற்குக் காரணம் யாழின் அமைப்பே. திருநீலகண்ட யாழ்ப்பாணர் கையாண்ட யாழில் அரிகாம்போதியாகிய செம்பாலையே அடிப்படை மேளம். யாழ்க்கருவியை அரிகாம்போதிக்குச் சேர்த்துவிட்டு வேறு பாலை வாசிக்க வேண்டு மென்றால் நரம்புகளைப் பிரித்து மாற்றிக் கட்ட வேண்டும். எனவே திருஞானசம்பந்தர் பாடிய பண்கள் எல்லாம் அரிகாம்போதியில் பிறந்தனவாகவே இருக்கின்றன.
திருநீலகண்ட யாழ்ப்பாணரின் உறவினர்கள் யாழ்ப்பாணர் தேவாரப்பதிகங்களை யாழில் வாசித்து வருவதனைக் கேட்டு, “நீங்கள் அத்திருப்பதிகங்களை யாழிலிட்டு வாசிக்கும் சிறப்பினாலே அப்பதிகங்களின் இசை அகிலமெல்லாம் வளர்கின்றது” என்று பாராட்டி மகிழ்ந்தனர்.
யாழ்ப்பாணர் அந்த பாராட்டுரைக்கு மகிழவில்ல. அதற்கு மாறாகச் செவிபொத்தி உளம் நடுங்கினார். திருஞானசம்பந்தப் பிள்ளையாரை அடைந்து அவரது திருவடியைப் போற்றித், “திருப்பதிக இசை அளவுபடாத வகையில் இவர்கள் மட்டுமேயன்றி உலகிலுள்ளோரும் அறிந்துய்யும்வகையில் பலரும் புகழும் திருப்பதிகம் பாடியருள வேண்டும். அவ்வாறு பாடியருளப் பெற்றால் பண்பு மிக்க அந்த இசை யாழின்கண் அடங்காமை யான் காட்டப் பெறுவன்” என்று விண்ணப்பித்தார்.
பிள்ளையாரும், “மாதர் மடப் பிடி”என்ற திருப்பதிகத்தை, “பூதலத்தோர் கண்டத்தும் கலத்தினிலு நிலத்தநூல் புகன்ற பேத நாதவிசை முயற்சிகளா லடங்காத வகை `காட்ட”ப் பாடியருளினார். கண்டம் என்றால் மிடறு என்று பொருள். கலம் என்றால் கருவி, யாழ் என்று பொருள். அதுவரையிலும் மிடற்றிலோ, யாழிலோ நாதவிசை முயற்சிகளால் இசைக்கப் பெற்றிராத, இசைநூல்களில் சொல்லப் பெற்றிராத இசை வகை காட்டிப் பிள்ளையார் பாடியருளினார், எனத் தெய்வச் சேக்கிழார் இந்நிகழ்ச்சியைக் கூறினார்.
கமகவிசை இதுவரை கண்டத்திலோ யாழிலோ இசைக்கப் பெறாதது; இசைநூல்களிலும் கூறப் பெற்றிராதது. இசைக்கு அழகியலைக் கூட்டும் இந்த புதிய கமகத்தைப் பாணர் விட்டிசைக்கும் யாழில் வாங்கி வாசிக்க முடியவில்லை.
‘திருஞானசம்பந்தப் பிள்ளையாரின் இசையைச் சோதிக்கத் துணிந்தோமே, இந்த அபசாரத்தைச் செய்வதற்கு இந்த யாழிசைப் புலமையில் நமக்குள்ள செருக்கல்லவோ காரணமாயிற்று’ என மனம் கலங்கிய யாழ்ப்பாணர் யாழை முரிப்பதற்குக் கையிலெடுத்து ஓங்கினார். திருஞானசம்பந்தப் பிள்ளையார் தடுத்து, யாழைத் தம் கையில் வாங்கிக் கொண்டு பாணனாரை நோக்கி, “ ஐயரே! நீங்கள் யாழை முரிக்கப் புகுவது எதற்கு? சிவபிரானார் திருவருட் பெருமையெல்லாம் இந்தக் கருவியில் ஆக்குதல் கூடுமோ? சிந்தையிலும் அளவுபடாத பதிக இசை யாழினளவு படுமோ.? இந்தக் கருவியைக் கொண்டு வந்தவாறே இயற்றுதல் வழக்கு; ஆதலின் வந்தவாறே பாடி வாசிப்பீர்” என்று அருளிச்செய்து யாழைப் பாணனார் கையிற் கொடுத்தார். பாணனாரும் அதனைப் பெற்றுக் கொண்டு முன்போற் பதிகத் தொண்டில் ஈடுபட்டார்.
‘யாழ்முரி’ என்பது பண்ணின் பெயரன்று; அது பதிகத்தின் பெயர். “மாதர் மடப்பிடியும்” எனும் பதிகம், பழைய அடங்கன்முறையில் மேகராககுறிஞ்சி எனும் பண்ணுடையது.
டாக்டர் பிரேமலதா எனும் இசையறிஞர், “காலந்தோறும் இசை” எனும் தம்முடைய முனைவர் பட்ட ஆய்வு நூலில் திருஞான சம்பந்தர் கமக மரபு இசையைத் தோற்றுவித்த சூழலைப் பின் வருமாறு விளக்கினார்.”திருநீலகண்ட யாழ்ப்பாணரின் யாழ், அடிப்படை மேளமான செம்பாலை, அதாவது, அரிகாம்போதி இராகத்துக்குச் சுருதி கூட்டப்பட்டு இருந்தது. அது விட்டிசைக்கும் கருவியாதலால் அதில் மேகராகக் குறிஞ்சி எனும் நீலாம்புரி இராகத்தின் மென்மையான அசைவுகளாகிய கமகங்களை இசைக்க முடியாது. எனவே, கமக இசையினைக் கூட்டத் தகுதியில்லாத யாழினைக் கைவிட்டு ஒரே நரம்பில் 12 சுருதிகளைக் கூட்டத் தக்கதாகிய வீணையை மேம்படுத்திக் கைக்கொள்ள மக்கள் துணிந்தனர்.”