(தலைப்பை கிளிக் செய்து முழுக் கட்டுரையைப் படிக்கவும்)
தமிழர் கண்டு வாசித்த முதல் இசைச்கருவி யாழ் ஆகும். நரம்புக்கருவிகளின் வளர்ச்சிக்கு யாழ் ஒர் அடிப்படைக் காரணமாகும். தமிழுக்கென்று சிறப்பான எழுத்து “ழ்”. “யாழ்” என்ற சொல்லில் ”ழ்” தாங்கி வருவதிலேயே தெரிகின்றது யாழ் தமிழுக்குரிய இசைக்கருவி என்று.
தமிழர் கண்டு வாசித்த முதல் இசைச்கருவி யாழ் ஆகும். நரம்புக்கருவிகளின் வளர்ச்சிக்கு யாழ் ஒர் அடிப்படைக் காரணமாகும். தமிழுக்கென்று சிறப்பான எழுத்து “ழ்”. “யாழ்” என்ற சொல்லில் ”ழ்” தாங்கி வருவதிலேயே தெரிகின்றது யாழ் தமிழுக்குரிய இசைக்கருவி என்று.
யாழின்
வகைகள் பல. அவை யாழ் வகைகள் பேரியாழ் (21 நரம்புகளை உடையது) மகரயாழ் (17 நரம்புகளை உடையது) சகோடயாழ் (16 நரம்புகளை உடையது) செங்கோட்டியாழ்
(7 நரம்புகளை உடையது) இவற்றைவிட நாரதயாழ், தும்புருயாழ், கீசகயாழ், சீரியாழ், மருத்துவயாழ்,
ஆதியாழ் எனப்பல வகைகள் இருந்ததாக பண்டைய நூல்கள் கூறுகின்றன. மேலும், யாழ் நூலில் கூறப்படும்
யாழ்கள், வில் யாழ் , சீறி யாழ், செங்கோட்டியாழ், பேரி யாழ், சகோட யாழ், மகர வேல்கொடி
யாழ் , மகர யாழ் / காமன் கொடி யாழ் மற்றும், மகர யாழ் / வர்ணர் ஊர்தி யாழ்
வேட்டைச்
சமூகத்தில் பயன்பாட்டில் இருந்த கருவிகளின் ஒன்று வில். அந்த வில்லில்
முறுக்கேற்றிக் கட்டப்பெற்ற நாணிலிருந்து அம்பு செல்லும்பொழுது தோன்றிய இசையோ
யாழின் உருவாக்கத்திற்கு மூல காரணம்.
நான்
சிறுவதாக இருக்கும் பொழுது இவ்விசைக்கருவியை "fair tale" கார்டோன்களில் கண்டதுண்டு.
வழக்கத்தில் இவ்விசைக்கருவியைக் கண்டிராததால் அது மேற்கத்திய இசைக்கருவி என்றும் கார்டூணுக்கு
உரிய இசைக்கருவி என்றும் நினைத்ததுண்டு. பின்னர் உண்மை அறிந்த பின்னே. யாழ் தமிழன்
கண்ட இசைக்கருவி என்றும் அதன் மகிமையும் புரிந்துகொண்டேன். இன்னும் நம்மில் பலருக்கு
இந்த உண்மை தெரியாமலே உள்ளது.
பண்டைய நாகரிகங்கள் எல்லாவற்றிலும் யாழ்
என்ற இசைக்கருவி பயன்பாட்டில் இருந்துள்ளது. கிரேக்க பாரம்பரியத்தில் இதைக் காணலாம்.
ஆங்கிலத்தில் யாழ் இசைக்கருவியை ஹார்ப் (harp) என்று அழைப்பர்.
இன்னும் அவர்களிடையே நவீன யாழாக வாழ்ந்து கொண்டிருக்கின்றது. ஆனால் தமிழர்கள் மறந்துவிட்ட
இசைக்கருவியாக யாழ் திகழ்கின்றது. இன்று இக்கருவி
முற்றிலுமாக மறைந்து அதன் பரிணாமமான வீணை இன்று முதன்மையிடம் வகிக்கிறது.
இராமயணத்தில்
இலங்கை அரசனாக இராவணனை சித்தரிக்கப்பட்டுள்ளது அனைவரும் அறிந்த ஒன்று. இராவணன் சிறந்த
யாழ் வித்வான் என்றும் கூறப்பட்டுள்ளது. இராவணன் இயற்றிய இசைநூலின் பெயர் இராவணியம்
ஆகும், யாழ் மீட்டுபவர்களை யாழ்பாணர் என்றழைப்பர். இலங்கைக்கு யாழ்பாணம் என்று பெயர்
வந்திருக்க இதுவும் ஒரு காரணம் என்றும் கூறலாம்.
பல்லாயிரம்
ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தொல்காப்பியர் யாழ் சிந்து சமவெளி நாகரீகத்தில் பயன்படுத்தப்பட்டதாக
கூறியுள்ளார். தொல்காப்பியம் கூறும் ‘யாழ்’ என்னும் சொல் பழந்தமிழர் வகுத்த பண்ணிசையைக்
குறிக்கும். இது மிடற்றிசை அதாவது குரலிசை, நரம்புக் கருவியிசை (யாழ் என்னும் தந்திக்
கருவி இசை) காற்றுக் கருவியிசை (குழல் கருவியிசை) ஆகியவற்றின் முறைகளும் மரபுகளும்
பற்றியதாகும். இந்த பண்வகைகளை ‘யாழின் பகுதி’ எனவும் இசைநூலை ‘நரம்பின் மறை’ எனவும்
தொல்காப்பியர் குறித்துள்ளார். பண்டைக்காலத்தில், தந்தி கருவியான யாழினை அடிப்படையாகக்
கொண்டே பண்களும் அவற்றின் திறங்களும் ஆராய்ந்து வகைப்படுத்தப்பட்டன என அறியலாம்.
மேலும்,
அகநானூறு, புறநானூறு, நற்றிணை, பெரும்பாணாற்றுப்படை, பொருநராற்றுப்படை. சிறுபாணாற்றுப்படை,
பரிபாடல், மலைபடுகடாம் முதலிய இலக்கியங்களில் யாழ் வாசிப்பு, பல்வகை யாழ்கள் மற்றும்
யாழின் அமைப்புகள் தொடர்பான குறிப்புகள் பல இருக்கின்றன.
சிலப்பதிகரம்
தமிழிசையைப் பற்றி தெளிவாக விளக்கும் தமிழிசை நூலாகத் திகழ்கிறது. சிலப்பதிகாரத்தில்
அரங்கேற்று காதையில் யாழாசிரியனின் அமைதியும், கானல் வரி மற்றும் வேனிற் காதையில்,
யாழ் வகைகளும், யாழின் உறுப்புகள் பற்றியும், யாழ் நரம்புகளை பரிசோதித்து சுருதி கூட்டிப்
பின்னர் யாழை எங்கனம் இசைப்பது என்பதற்கான இலக்கணங்களும் தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளது.
சீவக
சிந்தாமணி எனும் ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான இலக்கிய நூலிலும் யாழ் பற்றி பேசப்பட்டிருக்கிறது.
காந்தர்வதத்தை என்னும் இசையில் தேர்ந்த பெண்ணுக்கும் சீவகனுக்கும் இடையில் நடக்கும்
யாழிசைப் போட்டி பற்றிய பாடல்களில், யாழுக்கு நேரக்கூடிய குற்றங்கள், யாழுடன் சேர்ந்து
பாடுவதற்கான இலக்கணம் ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளன. பருந்து பறக்கும் பொழுது நிழல்
அதனைத் தொடர்வது போன்று மிடற்றிசையும் , யாழிசையும் இணைந்து இருத்தல் வேண்டும் என்றும்
இந்நூலில் கூறப்பட்டுள்ளது.
திருமுறையாசிரியர்களின்
பதிகங்களில் யாழ் இறையாடலுக்குப் பயன்பட்ட இசைக்கருவியெனப் பல இடங்களில் குறிப்பிட்டுள்ளனர்.
திருஞான சம்பந்தர் இயற்றிய தேவாரப்பதிகங்களைத் திருநீலகண்ட யாழ்ப்பாணர் அழகாக யாழில்
வாசித்திருக்கின்றார். இவர் இசை மீட்டுவதால் தான் திருஞானசம்பந்தரின் பாடல் சிறக்கிறது
என்று கூறிய அவருடைய சுற்றத்தாரின் சொல்லைத் தாங்க முடியாமல், தான் வாசிக்க முடியாத
அளவிற்கு ஒரு பாடலை அருள சம்பந்தரிடம் வேண்டினார் திருநீலகண்ட யாழ்பாணர். அவரின் வேண்டுதலுக்கு
இணங்க “மாதர் மடப்பிடியும்” எனும் பாடலை அருளினார். கமகங்களைச் சரியாக யாழில் இசைக்க
முடியாமல் நீலகண்ட யாழ்பாணர் தனது யாழை உடக்க முற்பட்டப்போது அதை திருஞானசம்ந்தர் தடுத்தக்
கதையும் உண்டு. இதுப் போன்று பக்தி இலக்கியங்களிலும் யாழின் பயன்பாடு அதிகமாகவே காணப்படுகின்றன.
பொருநராற்றுப்
படையில் யாழ் பற்றிய வர்ணனை ஒன்று காணப்படுகிறது. அதி அற்புதமான வர்ணனையாகவும் கருதப்படுகின்றது.
ஒப்பனை ச் செய்யப்பட்ட மணமகளின் அழகிய தோற்றம் போலக் காட்சியளிக்கிறது யாழ் என்கிறார்
பொருநராற்றுப் படை இயற்றிய புலவர். இத்தகைய யாழை மீட்டி பாணர்கள் இசையைப் பொழியும்
போது, அதன் இசையில் மயங்காதவர்கள் எவரும் இல்லை என்கிறார். வழிப்பறிக் கொள்ளையர்கள்
கூட இந்த இசையைக் கேட்டதும், தங்களது கொலை, கொள்ளை செய்யும் எண்ணத்தைக் கைவிட்டுவிடுவார்களாம்.
தங்களது கையில் மறைத்து வைத்துள்ள கொடிய கொலைக் கருவிகளைக்கூட இசையில் மயங்கிக் கீழே
போட்டு விடுவார்கள் என்கிறார் புலவர்
கல்லாடம்
என்னும் சைவ நூல் கல்லாடர் என்பவரால் இயற்றப்பட்டது. ஒன்பதாம் திருமுறைகளில் ஒன்றான
இந்த நூல் கி.பி. 11-ஆம் நூற்றாண்டளவில் தோன்றிய கல்லாடம் அகப்பொருள் நூலாகும். கல்லாடத்தில்
நாரதப்பேரியாழ், தும்புருயாழ், கீசகயாழ், தேவயாழ் என்று நான்கு வகை யாழ்கள் பற்றிய
செய்திகள் உள. நாரதப் பேரியாழ் 1000 நரம்புகளைக் கொண்டது. தும்புருயாழ் 9 நரம்புகளையும்,
கீசக யாழ் 100 நரம்புகளையும் கொண்டுள்ளது என்கிறது.
மேலும்,
சோழர் காலக் கோயில்களான பொன்செய் நல்துணையீஸ்வரம், திருமங்கலம் கோயில்களிலும், பல்லவர்
கால காஞ்சி கைலாசநாதர் கோயிலிலும், யாழ் குறித்தான பல சிற்பங்களைப் பார்க்கலாம். (இந்த
சிற்பங்களின் புகைப்படங்கள் இணையத்தில் காணலாம்)
கொங்குவேளிர்
என்ற சமண முனிவரால் இயற்றப்பட்டது பெருங்கதை என்ற காப்பியம். இதில் யாழ், வீணை, குழல்,
வளை, வயிர் ஆகிய ஐந்து பண்ணிசைக் கருவிகளாகும். பறை, முழவு, முரசு, தண்ணுமை, தடாரி,
குடமுழா, பாண்டில் ஆகிய ஏழு தாளக் கருவிகளும் மனிதக் குரலும் இசையெழு தளங்களாகக் குறிக்கப்பட்டுள்ளன.
(தமிழர் இசை ப. 263). யாழ்நூல், நாரதகீதக்கேள்வி ஆகிய இசை நூல்கள் இருந்தன என்று கூறப்படுகிறது.
‘கேள்வி’ என்ற சொல் யாழ்க் கருவியையும், இசை நூலையும் குறிக்கும். இசைப்பயிற்சி பெறுவோர்
இத்தகைய நூற்களைக் கற்றுத்தேற வேண்டும் என்கிறது. யாழும் பாடலும் வேறுபாடின்றி ஒத்து
இயங்குதல் வேண்டும். பண்ணிசை விதிகளை நன்கு அறிந்த குற்றமற்ற கேள்வியறிவு உடையவர்களே
சிறந்த இசை வல்லுநர் ஆவார் என்கிறது பெருங்கதை.
யாழினை
இசைப்பதற்கென்றே 'பாணர்' என்ற குழு இருந்ததை இலக்கியங்கள் வாயிலாக அறியலாம். யாழ் மீட்டுவதையே
தொழிலாக உடையவர்கள் என்றாலும் அவர்கள் யாழ்ப்பாணர், இசைப்பாணர், மண்டைப்பாணர் என்று
மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டனர். அதில் யாழ்ப்பாணர், இசைக்கும் யாழின் அடிப்படையில்
பெரும்பாணர், சிறுபாணர் என்று பகுக்கப்பட்டுள்ளார்.தமிழர்கள் யாழினின்று எழும் இசைக்கே
முதன்மை அளித்தனர் என்பது தெள்ளத்தெளிவாகத் தெரிகின்றது
ஈழத்தவரான
சுவாமி விபுலாநந்தர் 1947 இல் ”யாழ் நூல்” என்னும் தமது இசைத் தமிழ் நூலில் யாழைப்
பற்றி பல விரிவான ஆய்வுகளைத் தொகுத்துள்ளார்.
யாழ்
தமிழர்களின் வாழ்வில் ஒன்றி இருந்ததை இதில் காணலாம். யாழ் மட்டுமல்ல இன்னும் பல தமிழன்
கண்ட தமிழ் இசைக்கருவிகள் இலக்கியங்களிலும் புராணங்களிலும் மட்டுமே வாழ்ந்து வருகின்றன.
மீட்க வாய்பில்லை என்றாலும் பரவாயில்லை அதைப் பற்றி அறிந்து கொள்ள் முற்படுவோமே. அடியேனின்
தாழ்மையான அன்பான வேண்டுகோள். திரிந்து புதைந்த நம் தமிழ் இசையை மீண்டும் தோண்டுவோம்.
தோண்டி மீட்போம்.
மேற்கோள்
இசையின் ஈர இயக்கங்கள் /facebook
இசைத்தமிழ் இலக்கண விளக்கம், வா. சு.
கோமதி சங்கர் ஐயர்
தென்னக இசையில், பி.டி செல்லத்துரை
சிலப்பதிகாரம் ஓர் எளிய அரிமுகம், சுஜாதா
தினம் ஒரு திருமுறை தேன் பதிகம், பால.
இரத்தினவேலன்
0 comments:
கருத்துரையிடுக