RSS

கீத, வாத்திய, நிருத்தியம்

கீத, வாத்திய, நிருத்தியமாகிய இம்மூன்றும் சேர்ந்தது சங்கீதம் என்பது எவ்வாறோவெனின்:- கீதமென்பது பாட்டு. இந்த பாட்டை வசனநடை போல கூறலாம். அவ்வாறு கூறும்போது அது கீதம் என்ற எழுத்தின் நிலையைப்பெறும் இந்தப் பாட்டாகிய எழுத்துக்கள் வாத்தியமாகிய சுர அமைதியில் மேலும் கீழும் நல் ஒலியோடு பயின்று வரும்போது, அது கீதமும் வாத்தியமும் ஆகி அந்த கீதம் சுரஒலியாகிய வாத்தியத்தில் அமைதி பெருகின்றது. கருவியில் எழுத்தொலி பேசாதென்றும் அவற்றினிடமாகச் சுர ஒலி மட்டுமே வரப்பெறும். கீத வாத்தியமாகிய இவ்விரண்டையும் இசைக்கும் போது பாட்டின் எழுத்து, பாட்டின் கருத்து, அவைகள் அமைதிபெற்று வரும்- சுரங்கள், அவற்றின் நிறமாகிய இராகம், நிறத்திற்குரிய அச்சுரங்கள் நீண்டும், குறுகியும், வளைந்தும், சுழன்றும், குழைந்தும் பேசும் தன்மைகள், அதன் தாள அளவுகள், அத்தாள எடுப்புகள் யாவும் மனத்தில் ஒருவாறு பதிந்த பின்னரே இயக்கத்தக்கனவாகின்றன. எனவே மனதின் எண்ணங்களின் தொகுதியே இங்கு நிருத்தியாமாகின்றது. ஓர் இசைக்காரன் பாடும் போது இம்மூன்றும் சேர்ந்துவந்துதான் இசையானது.


சிலப்பதிகாரம் முத்தமிழ் பெருங்காப்பியம். அது இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழையும், முத்தமிழ் இலக்கணத்தையும் செவ்வனே கூறுகிறது. இவற்றில் பல நுட்பங்கள் அடங்கியுள்ளன. கீதம் என்ற பகுதியை இயலென்றும், வாத்தியம் என்ற பகுதியை இசையென்றும் நிருத்தியம் என்ற பகுதியை கூத்தென்றும் எடுத்து, அதன் இலக்கண அமைதிகளைச் செவ்வனே உணர்த்தியுள்ளனர். எனவே, இம்மூன்றின் சேர்க்கையே முத்தமிழ் காப்பியம் ஆயி்ற்று. இதுபோல, இயலிசை நாடகமாகிய இம்மூன்றும் சேர்க்கையின்றி இசை (கீத, வாத்திய, நிருத்தியம்) சிறப்படையாது.

மேற்பரப்பாகப் பார்த்தாலும் இயலிற்குரிய இலக்கணமும், இசைக்குரிய இலக்கணமும், கூத்திற்குரிய இலக்கணமும் இம்மூன்றுவகை இலக்கணமின்றி இசை இலக்கணம் அறிதற்கியலாது. கீதம் என்பதற்குச் சுரக்கூட்டம் என்றொரு பொருள் உண்டு. ஆதலால் ஏழிசையாகிய அந்த சுர எழுத்துக்கூட்டம் (கீதம்) வாத்தியமாகிய ஏழிசை ஒலிச் சூழலிலும் (வாத்தியம்), அவ் ஒலி இயக்கம் பாவமென்ற அசைவு, ஆட்டம், நீளல், குறுக்கல், சுழல்தல் (நிருத்தியம்) ஆகிய ஒலி வகைகளாலும் வரப்பெற்று மூன்றும் ஒருசேர மிளிர்கின்றதென்பதையும் நன்கு அறியலாம்

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS