RSS

இசை அறிவியல்




மனித உடலில் இருக்கும் ஓர் சுவாரசியமான குணம் என்னவென்று தெரியுமா? உயிர் வாழ்வதற்கு அத்தியாவசியமான சம்பவங்கள் எமது உடலுக்குள் நடைபெறும்போது எமது மூளை மகிழ்ச்சி மற்றும் திருப்தி போன்ற உணர்ச்சிகளை தூண்டிவிடுகிறது. உதாரணத்திற்கு பசிக்கும் போது நாம் தேவைக்கு ஏற்ற மாதிரி உணவு அருந்திவிட்டதும் எமது பசி தீர்ந்துவிட்டு, உடனடியாக சந்தோஷமும் திருப்தியும் அடைந்து விடுகின்றோம். ஆனால், உண்மையில் அந்நேரம் என்ன நடைபெறுகிறது என்றால் டோபமைன் (dopamine) எனப்படும் வேதியியல் பொருள் எமது மூளைக்குள் வெளியிடப்படுகிறது. இது நரம்புக்கடத்தியாக (neurotransmitter) பணிபுரிந்து இந்த சந்தோஷமும் திருப்தியும் கலந்த உடல்நிலைக்குக் காரணமாக இருக்கிறது.

இதேபோன்று தான் போதைப்பொருட்கள் பாவிக்கும் வேளையில் டோபாமைன் வெளியிடப்பட்டு நாம் வானத்தில் மிதப்பது போல் இருக்கிறது. நமது உடலில் அந்த போதைப்பொருள் குறையும்போது டோபாமைன் வெளியிடுவதும் நிறுத்தப்படுகிறது. எனவே, தொடர்ந்து மகிழ்ச்சி நிலையை அடைவதற்காக மேலும் அந்த போதைப்பொருளை உள்வாங்க வேண்டியதாகிவிடும். அத்துடன் எமது உடலும் அந்த போதைப்பொருளுக்கு அடிமை ஆகி விடுகிறது. இதில் சுவாரசியமான விடயம் என்ன தெரியுமா…? நாம் இசையை ரசிக்கும் போது நமது உடலில் பல செயல்கள் நடைபெறுகின்றன. இரத்த அழுத்தம் அதிகரித்து நமது மூளையில் உள்ள பல்வேறு பகுதிகள் இயங்கத் தொடங்கிவிடுகின்றன. இசை, நாம் உயிர் வாழ்வதற்கு அத்தியாவசியமானது இல்லை என்றாலும், அதை ரசிக்கும் போது நமது மூளையில் டோபாமைன் வெளியிடப்படுகிறது. அதன் விளைவு என்னவென்று உங்களுக்கு இப்போ தெரியும். நாம் மகிழ்ச்சி கலந்த திருப்தி நிலையை அடைந்து விடுகின்றோம். இன்று வரை அதன் காரணத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துவிடவில்லை.

போதைப்பொருட்கள் நம்மை அடிமை ஆக்குவது போல் இசையும் ஒரு விதமாக நம்மை அடிமை ஆக்கிவிடுகிறது. ஒவ்வொரு மனிதனின் இசை சுவை வித்தியாசமாக இருந்தாலும் அதன் விளைவு எப்போதும் ஒன்றாகத்தான் இருக்கிறது. டோபாமைன் வெளியிடுவது மட்டும் அல்லாமல் இசை கேட்கும் போது எமது உடலில் மேலும் மாற்றங்கள் ஏற்படுகின்றன. பொதுவாக எமது உடலில் எல்லாமே ஒரு தாளத்திற்கு அடங்கியதாகத் தான் இருக்கிறது. நமது இருதயம் துடிப்பது ஓர் தாளத்தில். நாம் சுவாசிக்கும் போது பிராணவாயு உள்வாங்கி கரியமிலவாயு வெளியேற்றுவது இன்னும் ஓர் தாளம். கடினமான வேலை செய்யும் போது இருதய துடிப்பு மற்றும் சுவாசத்தின் தாளம் அதிகரித்துவிடுகிறது.

அதே போன்று தான் நாம் இசை கேட்கும் போதும் இந்த தாளங்கள் மாறிவிடுகின்றன. அதன் விளைவாக இரத்த அழுத்தம் மற்றும் மூளையின் செயல்பாடும் மாறிவிடுகின்றது. பொதுவாக நமது இருதயம் ஒரு நிமிடத்தில் 72 தடவைகள் துடிக்கின்றது. இந்த துடிப்பை 72 Beats per Minute (BPM) என்று சொல்வர். அதே போன்று தான் இசையின் தாளத்தையும் BPM ஊடாக அளப்பர். ஆராய்ச்சியாளர்கள் அறிந்தது என்னவென்றால் இசையின் தாளம் பொறுத்து நமது உடல் வெவ்வேறு உணர்ச்சிகளை உணர்கின்றது என்பது தான். 72 BPMகு அதிகமாக இருக்கும் இசை கேட்கும் போது நாம் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கிறோம், அதுவே 72 BPMகு குறைவாக இருக்கும் இசை கேட்கும் போது நாம் அமைதி ஆகி விடுகிறோம். உதாரணத்திற்கு அம்மாவின் „பச்சைக் கிளி முத்துச்சரம் முல்லைக்கொடி யாரோ“ ஏறத்தாழ 200 BPM, அப்பாவின் „வா வெண்ணிலா உன்னைத் தானே வானம் தேடுதே“ 80 BPM, மற்றும் இளைஞனின் „விழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய் முன்னே முன்னே“ ஏறத்தாழ 91 BPM கொண்ட பாடல்களாக அமைந்து உள்ளன.

நன்றி [Arivu Dose.com - அறிவு டோஸ்]

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

1 comments:

vv9994013539@gmail.com சொன்னது…

payanuala thagaval sole irukega. oavaru paatin alavai BPM epadi arithukolvathu?