RSS

பெரியபுராணத்தில் தமிழிசை...


(தலைப்பை கிளிக் செய்து முழுக் கட்டுரையைப் படிக்கவும்)

சேக்கிழார் பெரிய புராணத்தில் ஆனாய நாயனார் புராணத்தைப் பாடும் போது 41 பாடல்களால் அவர் பாடும் இசை முறையைக் கூறுகிறார். அங்கு இசை இலக்கணச் செய்திகளைக் கூறியுள்ளார்.

1) ஆரோகணம் (ச ரி க ம ப த நி ச) என்பதனை ஆரோசை என்றும், அவரோகணம் (ச நி த ப ம க ரி ச) என்பதனை அமரோசை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

2) குழல் துளைகள் மேல் விரல்களை மென்மையாக அசைத்தும், வழுக்கியும், தழுவியும், வண்டு மலர்மேல் அசைதல் போல் அசைத்தும் பல்வேறு உள்ளோசைகளை எழுப்ப வேண்டும்.

3) ஆனாயர் முல்லைப் பண்ணை முறைமை வழுவாது இசைத்தார். இசை பண்ணாகும் நிலையை இதன் மூலம் விளக்குகிறார் ஆனாயர். எல்லாச் சுரத்தானங்களையும் நன்கறிந்து அவை முறையாக ஒலி காட்டுகின்றனவா என்பதனை அறிந்து இசைக்க வேண்டும்.

4) பண்ணமைப்பு முறையில் மந்தரம், மத்திமம், தாரம் ஆகியவையும் வலிவு, சமம், மெலிவு ஆகிய பண்ணமை இடங்களும் பெருவண்ணம், இடை வண்ணம், வனப்பு ஆகிய பாடல்வகைகளும், பாணி, தூக்கு, நடை ஆகிய தானத் தொடர்பான விளக்கங்களும் உள்ளன.

5) குழலைப்பற்றி மிகவிரிவாகக் கூறுகிறது இப்பகுதி. துளை இடும் முறை, நுட்பமான இசை எழுப்பும் முறை, திருவைந்தெழுத்தை இசைத்து, இசை நிகழ்வைத் தொடரும் முறை போன்றன கூறப்பட்டுள்ளன.


நன்றி...    www.tamilvu.org





  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

இசை மருத்துவம்


”மனசு சரியில்லை அதான் மனதுக்கு ஆறுதலா மெல்லிய இசைப் பாடல்களைக் கேட்கிறேன்… மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன் அதான் விறு விறுப்பான பாடலைக் கேட்கிறேன்” என்று பலர் கூறுவதையும் செய்வதையும் நம் அனுபவம் பூர்வமாக தினசரி வாழ்வில் கேட்கிறோம் பார்க்கிறோம். பிறந்ததிலிருந்து இறக்கும் வரை இசையுடன் வாழ்கிறான் மனிதன். பிறந்தவுடன் தாலாட்டில் ஆரம்பித்து, இறந்தவுடன் ஒப்பாரியில் முடிகிறது மனிதனின் வாழ்க்கை. இடையில் பலத்தரப்பட்ட இசையுடன் வாழ்வை நகர்த்துகிறான் மனிதன்.

இசை மிகவும் சக்தி வாய்ந்தது. உலகையே ஆட்டிப்படைக்கும் சக்தி இசைக்கு உண்டு. இசையால் இறைவனையே அடையலாம் என்றும் பலர் கூறுவதைப் பார்த்திருக்கிறோம். எல்லா மதத்திலும், வழிப்பாட்டிலும் இசைக்கு ஓர் அங்கம் உண்டு.  இசை இறைவனையே கட்டி வைத்துவிடுமாம்.

மேலும், பல நோய்களைக் குணமாக்கும் சக்தி இசைக்கு இருப்பது ஆராய்ச்சிகளின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

”கர்நாடக இசையில் குறிப்பிட்ட சில ராகங்களையும் அது தொடர்பான இசைக்கோர்வைகளைக் கேட்பதன் மூலம் நோய்களைக் குணமாக்க முடியும் என்று தமிழகத்தில் நடைபெற்ற ஆய்வுகள் தெரிவித்தன. இத்தாலி நாட்டு விஞ்ஞானிகளும் இதை தங்களது ஆய்வுகள் மூலம் உறுதி செய்துள்ளனர். இத்தாலியின் பாவியா நகரில் உள்ள பல்கலைக்கழகத்தில் மருந்துகள் பிரிவு பேராசிரியர் லுசியானோ பெர்னார்டி தலைமையில் இது தொடர்பான ஆய்வுகள் நடைபெற்றது. (http://tamil.webdunia.com)”

இசை கேட்கும் போது இருதய நோய் படிப்படியாக குணம் ஆகிறது. குறிப்பாக மாரடைப்புக்குப் பிறகு நோயாளி குணமாக மெல்லிசைப் பெரிதும் உதவுகிறது. மன அழுத்தமும், விரக்தியில் இருப்பவர்களும் சில ராகங்களைக் கேட்பதன் மூலம் நாளடைவில் அவர்களது மனம் அமைதி பெற வழி ஏற்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

நல்ல இசை மனதையும், எண்ணங்களையும் அமைதிப்படுத்துகிறது. எனவே, இரத்த அழுத்தம், மன அழுத்தம், மன இறுக்கம், தூக்கமின்மை, சீரற்ற இதயத்துடிப்பு போன்ற நோய்கள் இசைமருத்துவத்தினால் கட்டுப்படுத்தப்படுகின்றன. மத்தளம், டிரம்ஸ் போன்ற தோல் கருவிகள் மனக்கிளர்ச்சியை அதிகப்படுத்தி தசைநார்களைத் தளரச் செய்கிறது. போர்க்களங்களிலும், தீமிதி சடங்குகளிலும், அலகு குத்திக் கொள்ளும் போதும் கொட்டுவாத்தியங்கள், தாரை, தம்பட்டை போன்ற தோல் கருவிகளைப் பயன்படுத்துவதால் மனக்கிளர்ச்சி ஏற்பட்டு உடலுக்கும் உள்ளத்திற்கும் ஒரு புதிய வேகம் உண்டாகிறது

நோயாளிக்கு நோயின் கடுமையைத் தணிக்க மருந்து, சுகாதாரமான சூழல், இனிய இசை, அன்பான பணிவிடை ஆகியன தேவைப்படும். இது வளர்ந்த நாகரிகங் கொண்ட மக்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற பழக்க வழக்க நடைமுறைகள். இவ்வாறான நடைமுறைகள் ஈராயிரம் ஆண்டின் முன்பே பழந்தமிழர் இல்லற ஒழுக்கங்களில் இரண்டறக் கலந்த ஒன்றாகக் காணப்படுகின்றன.

“ தீங்கனி இரவமொடு வேம்புமனைச் செரீஇ” என்னும் புறநானூற்றுச் செய்யுள், விழுப்புண் கொண்ட போர்வீரன் கிடத்தப் பட்டிருக்கும் மனையின் இறைப்பில் இரவம்' வேம்பு ஆகிய இலைகளைச் செருகி, மனையெங்கும் வெண்ணிறங் கொண்ட சிறுகடுகைத் தூவி' நறுமணம் கமழும் நறும்புகை புகைத்து' யாழினால் பல்லிசை இசைத்தும் ஆம்பல் என்னும் குழலை ஊதியும் காஞ்சிப் பண்ணைப் பாடியும் மருத்துவம் செய்தனர்.

வரிப்புலி மார்பைக் கிழித்தது போல், போர்க்களத்தில் ஏற்பட்ட விழுப்புண்ணை ஆற்றுதற்குக் கொடிச்சியர் இசைப்பாடலை இசைத்தனர் என்று மலைபடுகடாம் உரைக்கின்றது.
இதனால் மனையிலுள்ள நோயாளரைப் பேணும் மருத்துவர்களாகப் பெண்டிரும் இருந்துள்ளனர் என்பதும், நோயின் கடுமையைப் போக்க நோய்த் தடுப்பும் சுகாதாரமும் தேவை என்பதும், அறியப் பட்டிருந்தது. இசையால் நோயைத் தணிக்கும் இசைமருத்துவம் (Musico therapy) என்னும் முறையும் நடைமுறையில் இருந்திருப்பதும் தெரியவருகிறது. (http://www.thamizhkkuil.net)

இசையில் நல்ல ஆழ்ந்த அறிவுள்ள அலோபதி டாக்டர்கள், இசை மருத்துவத்தில் கவனம் செலுத்தி வருகின்றனர். அமிர்தவர்ஷினி ராகம் மழையை வரவழைக்கும் தன்மை கொண்டது என நம்பப் படுகிறது. இந்த ராகம் உடலைக் குளிர்விக்கும் தன்மை கொண்டது என ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது. தண்ணீரோடு தொடர்புடைய ராகமாக இருப்பதால், சிறுநீரகப் பிரச்னைகளுக்கும் சிறந்த தீர்வாக இந்த ராகம் உள்ளது. தவிர மனம் சார்ந்த பிரச்னைகளுக்குத் தீர்வு காண ஹம்சத்வனி, பீம்பிளாஸ், இருதய நோய்களைக் குணப்படுத்த சந்திர கவுன்ஸ், மன அழுத்தத்தினால் ஏற்படும் நீரழிவைக் கட்டுப்படுத்த பகாடி, ஜகன் மோகினி என மியூசிக் தெரபியில் ராகங்கள் பட்டியலிடப்படுகின்றன.

      மேலும் கர்நாடக சங்கீதத்தில் சொல்லப்படும் இராகங்களின் மூலம் பலதரப்பட்ட நோய்களைக் குணப்படுத்தமுடியும். மேலும், இராகங்கள் பல உணர்ச்சிகளையும் தோன்ற வல்லது.

சிந்து பைரவி, ரீதிகௌளை
கருணை
முகாரி, ரேவதி, சிவரஞ்சனி
சோகம்
ஹம்சத்வனி
வீரம்
மத்தியமாவதி, சஹானா
மன அமைதி
கானடா, பாகேஸ்ஸ்ரீ
பக்தி
நீலாம்பரி
தாலாட்டு (தூக்கம் வர)
கரகரப்பிரியா
மன உறுதி, மன அமைதி
சிவரஞ்சனி
Intellectual excellent
புன்னாகவராளி, சஹானா
அதீத ஆத்திரத்தைப் போக்கும்,

இங்கு சில இராகங்களும் குணப்படுத்தக்கூடிய நோய்களும் கீழ்கண்டவாறு ::

இராகம்
நோய்கள்
பைரவி்
ஆஸ்துமா, சுவாசம் சம்பந்தமான நோய்கள், T.B, புற்றுநோய்,
ஹிந்தோளம்
வாதம், low blood pressure
சாரங்கா
பித்தம்
பிலஹரி, தர்பாரி
மன அழுத்தம்
ஆகிர்பைரவி, தோடி
High blood pressure
பாகேஸ்ஸ்ரீ, தர்பாரி
Insomnia, தூக்கம் வராமை
தோடி
தலைவலி, anxiety
ஆகிர்பயிரவி
அஜீரணம்







  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

இலக்கியத்தில் வாழும் யாழ்

(தலைப்பை கிளிக் செய்து முழுக் கட்டுரையைப் படிக்கவும்)

தமிழர் கண்டு வாசித்த முதல் இசைச்கருவி யாழ் ஆகும். நரம்புக்கருவிகளின் வளர்ச்சிக்கு யாழ் ஒர் அடிப்படைக் காரணமாகும். தமிழுக்கென்று சிறப்பான எழுத்து “ழ்”. “யாழ்” என்ற சொல்லில் ”ழ்” தாங்கி வருவதிலேயே தெரிகின்றது யாழ் தமிழுக்குரிய இசைக்கருவி என்று.  
யாழின் வகைகள் பல. அவை யாழ் வகைகள் பேரியாழ் (21 நரம்புகளை உடையது)  மகரயாழ் (17 நரம்புகளை உடையது)  சகோடயாழ் (16 நரம்புகளை உடையது) செங்கோட்டியாழ் (7 நரம்புகளை உடையது) இவற்றைவிட நாரதயாழ், தும்புருயாழ், கீசகயாழ், சீரியாழ், மருத்துவயாழ், ஆதியாழ் எனப்பல வகைகள் இருந்ததாக பண்டைய நூல்கள் கூறுகின்றன. மேலும், யாழ் நூலில் கூறப்படும் யாழ்கள், வில் யாழ் , சீறி யாழ், செங்கோட்டியாழ், பேரி யாழ், சகோட யாழ், மகர வேல்கொடி யாழ் , மகர யாழ் / காமன் கொடி யாழ் மற்றும், மகர யாழ் / வர்ணர் ஊர்தி யாழ்
வேட்டைச் சமூகத்தில் பயன்பாட்டில் இருந்த கருவிகளின் ஒன்று வில். அந்த வில்லில் முறுக்கேற்றிக் கட்டப்பெற்ற நாணிலிருந்து அம்பு செல்லும்பொழுது தோன்றிய இசையோ யாழின் உருவாக்கத்திற்கு மூல காரணம்.
நான் சிறுவதாக இருக்கும் பொழுது இவ்விசைக்கருவியை "fair tale" கார்டோன்களில் கண்டதுண்டு. வழக்கத்தில் இவ்விசைக்கருவியைக் கண்டிராததால் அது மேற்கத்திய இசைக்கருவி என்றும் கார்டூணுக்கு உரிய இசைக்கருவி என்றும் நினைத்ததுண்டு. பின்னர் உண்மை அறிந்த பின்னே. யாழ் தமிழன் கண்ட இசைக்கருவி என்றும் அதன் மகிமையும் புரிந்துகொண்டேன். இன்னும் நம்மில் பலருக்கு இந்த உண்மை தெரியாமலே உள்ளது.
பண்டைய நாகரிகங்கள் எல்லாவற்றிலும் யாழ் என்ற இசைக்கருவி பயன்பாட்டில் இருந்துள்ளது. கிரேக்க பாரம்பரியத்தில் இதைக் காணலாம். ஆங்கிலத்தில் யாழ் இசைக்கருவியை ஹார்ப் (harp) என்று அழைப்பர். இன்னும் அவர்களிடையே நவீன யாழாக வாழ்ந்து கொண்டிருக்கின்றது. ஆனால் தமிழர்கள் மறந்துவிட்ட இசைக்கருவியாக யாழ் திகழ்கின்றது.  இன்று இக்கருவி முற்றிலுமாக மறைந்து அதன் பரிணாமமான வீணை இன்று முதன்மையிடம் வகிக்கிறது.
இராமயணத்தில் இலங்கை அரசனாக இராவணனை சித்தரிக்கப்பட்டுள்ளது அனைவரும் அறிந்த ஒன்று. இராவணன் சிறந்த யாழ் வித்வான் என்றும் கூறப்பட்டுள்ளது. இராவணன் இயற்றிய இசைநூலின் பெயர் இராவணியம் ஆகும், யாழ் மீட்டுபவர்களை யாழ்பாணர் என்றழைப்பர். இலங்கைக்கு யாழ்பாணம் என்று பெயர் வந்திருக்க இதுவும் ஒரு காரணம் என்றும் கூறலாம்.
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தொல்காப்பியர் யாழ் சிந்து சமவெளி நாகரீகத்தில் பயன்படுத்தப்பட்டதாக கூறியுள்ளார். தொல்காப்பியம் கூறும் ‘யாழ்’ என்னும் சொல் பழந்தமிழர் வகுத்த பண்ணிசையைக் குறிக்கும். இது மிடற்றிசை அதாவது குரலிசை, நரம்புக் கருவியிசை (யாழ் என்னும் தந்திக் கருவி இசை) காற்றுக் கருவியிசை (குழல் கருவியிசை) ஆகியவற்றின் முறைகளும் மரபுகளும் பற்றியதாகும். இந்த பண்வகைகளை ‘யாழின் பகுதி’ எனவும் இசைநூலை ‘நரம்பின் மறை’ எனவும் தொல்காப்பியர் குறித்துள்ளார். பண்டைக்காலத்தில், தந்தி கருவியான யாழினை அடிப்படையாகக் கொண்டே பண்களும் அவற்றின் திறங்களும் ஆராய்ந்து வகைப்படுத்தப்பட்டன என அறியலாம்.
மேலும், அகநானூறு, புறநானூறு, நற்றிணை, பெரும்பாணாற்றுப்படை, பொருநராற்றுப்படை. சிறுபாணாற்றுப்படை, பரிபாடல், மலைபடுகடாம் முதலிய இலக்கியங்களில் யாழ் வாசிப்பு, பல்வகை யாழ்கள் மற்றும் யாழின் அமைப்புகள் தொடர்பான குறிப்புகள் பல இருக்கின்றன.
சிலப்பதிகரம் தமிழிசையைப் பற்றி தெளிவாக விளக்கும் தமிழிசை நூலாகத் திகழ்கிறது. சிலப்பதிகாரத்தில் அரங்கேற்று காதையில் யாழாசிரியனின் அமைதியும், கானல் வரி மற்றும் வேனிற் காதையில், யாழ் வகைகளும், யாழின் உறுப்புகள் பற்றியும், யாழ் நரம்புகளை பரிசோதித்து சுருதி கூட்டிப் பின்னர் யாழை எங்கனம் இசைப்பது என்பதற்கான இலக்கணங்களும் தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளது.
சீவக சிந்தாமணி எனும் ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான இலக்கிய நூலிலும் யாழ் பற்றி பேசப்பட்டிருக்கிறது. காந்தர்வதத்தை என்னும் இசையில் தேர்ந்த பெண்ணுக்கும் சீவகனுக்கும் இடையில் நடக்கும் யாழிசைப் போட்டி பற்றிய பாடல்களில், யாழுக்கு நேரக்கூடிய குற்றங்கள், யாழுடன் சேர்ந்து பாடுவதற்கான இலக்கணம் ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளன. பருந்து பறக்கும் பொழுது நிழல் அதனைத் தொடர்வது போன்று மிடற்றிசையும் , யாழிசையும் இணைந்து இருத்தல் வேண்டும் என்றும் இந்நூலில் கூறப்பட்டுள்ளது.
திருமுறையாசிரியர்களின் பதிகங்களில் யாழ் இறையாடலுக்குப் பயன்பட்ட இசைக்கருவியெனப் பல இடங்களில் குறிப்பிட்டுள்ளனர். திருஞான சம்பந்தர் இயற்றிய தேவாரப்பதிகங்களைத் திருநீலகண்ட யாழ்ப்பாணர் அழகாக யாழில் வாசித்திருக்கின்றார். இவர் இசை மீட்டுவதால் தான் திருஞானசம்பந்தரின் பாடல் சிறக்கிறது என்று கூறிய அவருடைய சுற்றத்தாரின் சொல்லைத் தாங்க முடியாமல், தான் வாசிக்க முடியாத அளவிற்கு ஒரு பாடலை அருள சம்பந்தரிடம் வேண்டினார் திருநீலகண்ட யாழ்பாணர். அவரின் வேண்டுதலுக்கு இணங்க “மாதர் மடப்பிடியும்” எனும் பாடலை அருளினார். கமகங்களைச் சரியாக யாழில் இசைக்க முடியாமல் நீலகண்ட யாழ்பாணர் தனது யாழை உடக்க முற்பட்டப்போது அதை திருஞானசம்ந்தர் தடுத்தக் கதையும் உண்டு. இதுப் போன்று பக்தி இலக்கியங்களிலும் யாழின் பயன்பாடு அதிகமாகவே காணப்படுகின்றன.
பொருநராற்றுப் படையில் யாழ் பற்றிய வர்ணனை ஒன்று காணப்படுகிறது. அதி அற்புதமான வர்ணனையாகவும் கருதப்படுகின்றது. ஒப்பனை ச் செய்யப்பட்ட மணமகளின் அழகிய தோற்றம் போலக் காட்சியளிக்கிறது யாழ் என்கிறார் பொருநராற்றுப் படை இயற்றிய புலவர். இத்தகைய யாழை மீட்டி பாணர்கள் இசையைப் பொழியும் போது, அதன் இசையில் மயங்காதவர்கள் எவரும் இல்லை என்கிறார். வழிப்பறிக் கொள்ளையர்கள் கூட இந்த இசையைக் கேட்டதும், தங்களது கொலை, கொள்ளை செய்யும் எண்ணத்தைக் கைவிட்டுவிடுவார்களாம். தங்களது கையில் மறைத்து வைத்துள்ள கொடிய கொலைக் கருவிகளைக்கூட இசையில் மயங்கிக் கீழே போட்டு விடுவார்கள் என்கிறார் புலவர்
கல்லாடம் என்னும் சைவ நூல் கல்லாடர் என்பவரால் இயற்றப்பட்டது. ஒன்பதாம் திருமுறைகளில் ஒன்றான இந்த நூல் கி.பி. 11-ஆம் நூற்றாண்டளவில் தோன்றிய கல்லாடம் அகப்பொருள் நூலாகும். கல்லாடத்தில் நாரதப்பேரியாழ், தும்புருயாழ், கீசகயாழ், தேவயாழ் என்று நான்கு வகை யாழ்கள் பற்றிய செய்திகள் உள. நாரதப் பேரியாழ் 1000 நரம்புகளைக் கொண்டது. தும்புருயாழ் 9 நரம்புகளையும், கீசக யாழ் 100 நரம்புகளையும் கொண்டுள்ளது என்கிறது.
மேலும், சோழர் காலக் கோயில்களான பொன்செய் நல்துணையீஸ்வரம், திருமங்கலம் கோயில்களிலும், பல்லவர் கால காஞ்சி கைலாசநாதர் கோயிலிலும், யாழ் குறித்தான பல சிற்பங்களைப் பார்க்கலாம். (இந்த சிற்பங்களின் புகைப்படங்கள் இணையத்தில் காணலாம்)
கொங்குவேளிர் என்ற சமண முனிவரால் இயற்றப்பட்டது பெருங்கதை என்ற காப்பியம். இதில் யாழ், வீணை, குழல், வளை, வயிர் ஆகிய ஐந்து பண்ணிசைக் கருவிகளாகும். பறை, முழவு, முரசு, தண்ணுமை, தடாரி, குடமுழா, பாண்டில் ஆகிய ஏழு தாளக் கருவிகளும் மனிதக் குரலும் இசையெழு தளங்களாகக் குறிக்கப்பட்டுள்ளன. (தமிழர் இசை ப. 263). யாழ்நூல், நாரதகீதக்கேள்வி ஆகிய இசை நூல்கள் இருந்தன என்று கூறப்படுகிறது. ‘கேள்வி’ என்ற சொல் யாழ்க் கருவியையும், இசை நூலையும் குறிக்கும். இசைப்பயிற்சி பெறுவோர் இத்தகைய நூற்களைக் கற்றுத்தேற வேண்டும் என்கிறது. யாழும் பாடலும் வேறுபாடின்றி ஒத்து இயங்குதல் வேண்டும். பண்ணிசை விதிகளை நன்கு அறிந்த குற்றமற்ற கேள்வியறிவு உடையவர்களே சிறந்த இசை வல்லுநர் ஆவார் என்கிறது பெருங்கதை.
யாழினை இசைப்பதற்கென்றே 'பாணர்' என்ற குழு இருந்ததை இலக்கியங்கள் வாயிலாக அறியலாம். யாழ் மீட்டுவதையே தொழிலாக உடையவர்கள் என்றாலும் அவர்கள் யாழ்ப்பாணர், இசைப்பாணர், மண்டைப்பாணர் என்று மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டனர். அதில் யாழ்ப்பாணர், இசைக்கும் யாழின் அடிப்படையில் பெரும்பாணர், சிறுபாணர் என்று பகுக்கப்பட்டுள்ளார்.தமிழர்கள் யாழினின்று எழும் இசைக்கே முதன்மை அளித்தனர் என்பது தெள்ளத்தெளிவாகத் தெரிகின்றது
ஈழத்தவரான சுவாமி விபுலாநந்தர் 1947 இல் ”யாழ் நூல்” என்னும் தமது இசைத் தமிழ் நூலில் யாழைப் பற்றி பல விரிவான ஆய்வுகளைத் தொகுத்துள்ளார்.
யாழ் தமிழர்களின் வாழ்வில் ஒன்றி இருந்ததை இதில் காணலாம். யாழ் மட்டுமல்ல இன்னும் பல தமிழன் கண்ட தமிழ் இசைக்கருவிகள் இலக்கியங்களிலும் புராணங்களிலும் மட்டுமே வாழ்ந்து வருகின்றன. மீட்க வாய்பில்லை என்றாலும் பரவாயில்லை அதைப் பற்றி அறிந்து கொள்ள் முற்படுவோமே. அடியேனின் தாழ்மையான அன்பான வேண்டுகோள். திரிந்து புதைந்த நம் தமிழ் இசையை மீண்டும் தோண்டுவோம். தோண்டி மீட்போம்.

மேற்கோள்
இசையின் ஈர இயக்கங்கள் /facebook
இசைத்தமிழ் இலக்கண விளக்கம், வா. சு. கோமதி சங்கர் ஐயர்
தென்னக இசையில், பி.டி செல்லத்துரை
சிலப்பதிகாரம் ஓர் எளிய அரிமுகம், சுஜாதா
தினம் ஒரு திருமுறை தேன் பதிகம், பால. இரத்தினவேலன்

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

Pandavas Fusion Band


உலகம் மட்டுமின்றி இந்த அண்ட சராசரமே இசையுடன் தான் இயங்கிக் கொண்டிருக்கிறது. நம் கற்பனைக்கு அப்பாற்பட்டதே இசை. ஓம் என்ற பிரணவ அதிர்வினால் பிறந்ததே இசை. மேற்கத்திய இசை, நாட்டுப்புற இசை, கர்நாடக இசை என்று பல வகைகள் உள்ளன. மனித வாழ்வில் இசை இன்றியமையாத ஒன்றாகத் திகழ்கிறது. நம் தினசரி வாழ்வில் நாம் செய்யும் பல வேளைகளில் இசைக் கலந்திருக்கிறது, என்று “pandavas fusion band” இசைக்குழுவின் உறுப்பினரான சித்தார் வித்வான் திரு. கலை கூறுகின்றார்.
ஏழு வித்வான்களுடன் இயங்கி வரும் இந்த ”pandavas fusion band” குழு இந்த ஆண்டு ஜனவரி மாதமே தொடங்கப்பட்டது. இந்த குழுவில் சித்தார் வித்வானக, திரு.கலை, தபலா வித்வானாக டாக்டர். கிரிதரன், acoustic guitar வித்வானாக திரு. அரியனாயகன், box drum வித்வானாக திரு. ரிஷி குமார், புல்லாங்குழல் வித்வானாக திரு. மகேந்திரன், bass guitar வித்வானாக திரு. ஸ்ரீ ராம் மற்றும் percussions வித்வானாக திரு. பால கணபதி ஆகியோர் திகழ்கின்றனர்.
பல வகையான இசைகளை இசைக்க வள்ளவர்களாக இவர்கள் திகழ்கின்றனர். ’இசை என்பது தியானம் (music is meditation)” என்பதே இவர்களின் கொள்கை. மேலும், பல தரப்பு மக்களுடன் இசையைப் பகிர்ந்துகொள்ள விரும்புகின்றோம் என்றும் கூறுகின்றனர். இசையை விரும்பாதோர் உலகில் எவரும் இருக்க மாட்டார்கள். பிறந்த குழந்தை முதல், தள்ளாடும் முதியோர் வரை சலிக்காது விரும்பும் ஒரே விஷயம் இசை தான். அதேபோல் இவர்களின் இசையைப் பிடிக்காதவர்கள் எவரும் இல்லை என்றும் கூறலாம்.
இதுவரை கிட்டத்தட்ட 20 நேரடி இசைப் படைப்புகளைப் படைத்துள்ளனர் (live concerts) என்பது பெருமைக்குறிய விஷியமே. இசையை உலக அரங்கில் பகிர்வதைத் தங்களின் இலட்சியமாக கொண்டுள்ளனர். தற்பொழுது ஓர் வாத்திய இசை (instrumental) ஆல்பம் ஒன்றைத் தயாரிக்கும் முயற்சியில் ஈடுப்பட்டிருக்கும் இவர்களுக்கு நம் வாழ்த்துகளும் பாராட்டுகளும் சமர்பனம்.
இறைவன் அருளால் இந்த குழுவை நிறுவ நாங்கள் அதிகம் சவால்களை எதிர்நோக்கவில்லை காரணம் நாங்கள் இசை அன்னைக்குப் பிள்ளைகளாகவும் சகோதரத்தன்மையுடனும் செயல்பட்டு வருகின்றோம் என்று கூறினர். இந்த குழு உறுப்பினர்கள் அனைவரும் ஒற்றுமையுடனும், கட்டொழுங்குடனும், இசையை மட்டுமே முழுமூச்சாகவும், நோக்கமாகவும் கொண்டு தங்களின் குழு வளர்ச்சிக்கு இசையுடன் ஒன்றர கலந்து பாடுபடுகின்றனர்.
தற்பொழுது “pandavas fusion band” குழு ஒர் ஆய்வினையும் நடத்திக்கொண்டு வருகின்றனர். Music therapy எனப்படும், இராகங்களின் மூலம் நோய் தீர்க்கும் முறையை ஆய்வுச் செய்து வருகின்றனர். அடுத்த வருடம் உலக அரங்கில் இசையைப் படைக்க இசைச் சுற்றுலா (world tour concerts) செல்வதாகவும் கூறினர்.
இவர்களின் குழு பற்றி மேலும் தெரிந்து கொள்ள www.facebook.com/groups/ThePandavasFusionBand  வலம் வாருங்கள். இவர்களின் இசைக்குழுவை நாட 016 - 3497690 என்ற எண்ணிற்கு அழைக்கலாம். மேலும் வளர்ந்து வரும் இவர்கள் மென்மேலும் பல சாதனைகளைப் படைத்து உலக அரங்கில் கால் பதிக்க இறைவனை வேண்டுகின்றோம்.




  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

இசைத் தோற்றம்

(தலைப்பை கிளிக் செய்து முழுக் கட்டுரையைப் படிக்கவும்)


ஓசையுலகம் :
கண்ணை மூடித் திறந்தால் உருவுலகம் கண்ணுக்குப் புலனாகின்றது. அதுபோல் செவிக்குப் புலப்படுவது ஓசையுலகமாகும். உருவுலகத்தில் கல், மண், மலை, நீர், நெருப்பு, புழு, பறவை, விலங்கு, மனிதர் முதலிய அசையும் பொருள்களும், அசையாப் பொருள்களும் அடங்குகின்றன. ஓசையுலக்த்தில் இடிமுழக்கம், கடலோசை, கைக்கொட்டுதல், நீர்வீழ்ச்சியின் இரைச்சல், பறவை விலங்குகள் ஒலித்தல், பேச்சு, பாட்டு, அழுகை, இசைக்கருவிகளின் முழக்கங்கள் போன்றவைக் காதினால் கேட்கபெறுகின்றன. இந்த ஓசையுலகமானது, ஓசையுலகம், இயல் உலகம், இசையுலகம் என மூவகைப்படும்.  ஓசை, பேச்சு, பாட்டு ஆகிய விகற்பங்கள் அனைவரும் அறிந்த ஒன்றே.

ஓசை:
மணியின் ஓசையைக் கேட்டு அது கோயில் மணி ஓசை என்றும், பக்கத்து வீட்டுத் தெய்வ வழிப்பாட்டு மணியின் ஓசையென்றும் பேதம் தெரிந்துகொள்கிறோம். இரயில் ஊதுவதைக் கேட்டு சுமார் இன்ன தொலைவில் இருந்து வருகின்றது என்பதை ஊகிக்கிறோம். இரும்பு அடித்தல், கல் உடைத்தல், பேருந்து, ஆகிய ஓசைகளின் விகற்பங்கள் நன்றாய் உணரப் பெறுகின்றன.

பேச்சு:
இது “அ, இ, உ, எ, - க, ங, ச, ஞ” முதலிய எழுத்து ஒலிகளால் பாகுபாடு செய்யப் பெறுகின்றது. எழுத்துகளால் சொற்களும், சொற்களால் சொற்றொடர் வரிகளும் உண்டாயின. அச்சொற்றொடர் வரிகள் உலகத்திலுள்ள அகச் செய்திகளையும் புறச் செய்திகளையும் வசன நடையாலும், செய்யுள் நடையாலும் தெரிவிக்கின்றன. இது கலைகளின் இயல் உலகம் எனப்பெறும். இதில் படிப்பும் விகாரங்களும் எழுத்தும் அடங்குவனவாகும்.

பாட்டு:
இது மகிழ்ச்சியினால் வெளிவருவதாகும். இது கீதம், கானம், எனப் பெறும். தமிழ்மொழியில் பாட்டு, இசை எனவும் கூறத்தகும். இந்த கீதமானது தூய்மை செய்யப்பெற்றுக் குற்றம் இன்றி விளக்கும் போது அது இசையாகின்றது. சங்கீதமென்றால் "ஸம் கீதம்- சம்யக் கீதம்- சங்கீதம்". சிறப்பினும் சிறப்பான மாண்புபெற்ற கீதமானது சங்கீதமாகும். கீதம் என்பதற்குச் சுரமென்றும், சுரக் கூட்டமென்றும் பொருள் உள்ளது. இந்த சங்கீதமாகிய இசையானது தொண்டையின் விரிவினாலும் ஒடுக்கத்தினாலும் இனிய ஒலிஉருவத்தோடு வெளிவருவதாகும்

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

கார்டோன்களில் வாழும் யாழ்...

(தலைப்பை கிளிக் செய்து முழுக் கட்டுரையைப் படிக்கவும்)

கார்டோன்களில் வாழும் யாழ்... (முழுமையா படியுங்கள்)

பண்ணியாழ் பயில்கின்ற மங்கையர் பாடல் ஆடலொடு ஆர வழொஅதி
தெண்ணிலா மதியம் பொழில் சேருந் திருக்களருள்
உண்ணிலாவிய ஒருவனே இருவர்க்கு நின்கழல் காட்சியாரழல்
அண்ணலாஅ எம்மான் அடைந்தார்க்கருளாயே
--திருஞான சம்பந்தர்--

விளக்கம்:
குளிர்ந்த சோலைகள் சூழ்ந்த திருக்களர் எனும் திருப்பதியில் கோயில் கொண்டு எழிந்தருளியுள்ள பெருமானே!
யாழைத் திருத்திய சுரம் அமையப் பண்ணிப் பாடி ஆடும் மங்கையர் நிறைந்த திருப்பதியாகிய திருக்களருள்ளும், அன்பர்கள் உள்ளத்திளும் நீங்காது நின்றருளும் ஒப்பற்றவனே...


தமிழிசையில் மூத்த இசைக்கருவியாகத் திகழும் யாழ் இப்பதிகத்தில் திருஞானசம்பந்தரால் பாடப்பட்டுள்ளது... மேலும், திருஞானசம்பந்தர் அருளிய தேவர பாடல்களுக்கு யாழ் இசையை மீட்டியவர் நீலகண்ட யாழ்பாணர் என்பது குறிப்பிடத்தக்கது... தாழ்ந்த குலத்தில் பிறந்தும் திருஞானசம்பந்தரின் பாடல் பதிகங்களுக்கு யாழிசை மீட்டும் பாக்கியம் கிடைத்தது நீலகண்ட யாழ்பாணருக்கு... இவர் இசை மீட்டுவதால் தான் திருஞானசம்பந்தரின் பாடல் சிறக்கிறது என்று கூறிய அவரின மக்களின் சொல்லைத் தாங்க முடியாமல், தான் வாசிக்க முடியாத அளவிற்கு ஒரு பாடலை அருள வேண்டினார்.. அவரின் வேண்டுதலுக்கு இணங்க “மாதர் மடப்பிடியும்” எனும் பாடலை அருளினார் திருஞானசம்பந்தர். சரியாக யாழ் இசைக்க முடியாமல் நீலகண்ட யாழ்பாணர் தனது யாழை உடக்க முற்பட்டப்போது அதை திருஞானசம்ந்தர் தடுத்தக் கதையும் உண்டு...
யாழ் தமிழர்களின் வாழ்வில் ஒன்றி இருந்ததை இதில் காணலாம்...பழம்பெரும் தமிழிசைக்கருவி யாழ் நம் கைவிட்டு போய் விட்டது...   நான் சிறுவதாக இருக்கும் பொழுது இவ்விசைக்கருவியை "fair tale" கார்டோன்களில் கண்டதுண்டு. வழக்கத்தில் இவ்விசைக்கருவியை கண்டிராததால் அது மேற்கத்திய இசைக்கருவி என்றும் கார்டூணுக்கு உரிய இசைக்கருவி என்றும் நினைத்ததுண்டு... பின்னர் உண்மை அறிந்த பின்னே. யாழ் தமிழ கண்ட இசைக்கருவி என்றும் அதன் மகிமையும் புரிந்துகொண்டேன்... இன்னும் நம்மில் பலருக்கு இந்த உண்மை தெரியாமலே உள்ளது. யாழ் மட்டுமல்ல... இன்னும் பல தமிழன் கண்ட தமிழ் இசைக்கருவிகள் இலக்கியங்களிலும் புராணங்களிலும் மட்டுமே வாழ்ந்து வருகின்றன. மீட்க வாய்பில்லை என்றாலும் பரவாயில்லை அதைப் பற்றி அறிந்து கொள்ள் முற்படுவோமே... அடியேனின் தாழ்மையான அன்பான வேண்டுகோள்... திரிந்து புதைந்த நம் தமிழ் இசையை மீண்டும் தோண்டுவோம்... தோண்டி மீட்போம்... :)

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS