இது மேல்நாட்டு இசைக்கருவி. இது தமிழ்நாட்டு மிடற்றிசைவாணருக்கு உதவி இசைக்கருவியாகக் கொண்டுவரப் பெற்று நீண்ட காலம் ஆகவில்லை. பாடுவதைப்போல் இசைக்கருவியில் வாசிக்கக் கூடும். எனினும் அது அத்துணை எளிதான காரியமன்று. கேள்வியின் பயனாய் மிகவும் சாமான்னியமானவர் பாடிவரும் தெருப்பாட்டுகளில் அழகு விளங்குவது போல இக்கருவியில் இசைக்க இயலாது. இது மேல்நாட்டு இசைக்கருவியாயினும் இசை இயக்கம் பெறுவதில் மிகக்கடினமாயினும் ஏனைய இசைக்கருவிகளைவிட இதில் வாய்ப்பாட்டு நன்றாய் அனுசரிக்ககூடுமென்பதை உறுதியாகக் கூறலாம். இவ்வாறு செய்வதற்கு முதலில் இக்கருவியைத் தேர்ந்தெடுத்தல் வேண்டும். பிறகு தந்திகள் அதற்குத்தக எடுத்தல் வேண்டும். அதன்பிறகு பயிற்சிமுறைகள் எல்லாம் அனுகூலமாய் இருத்தலும், இதை இசைப்போர் பல மாதிரியான மிடற்றிசையின் ஏற்றத்தாழ்வுகளையும், பற்பல இசையமைப்புகளையும் நன்றாய் அறிந்திருக்க வேண்டும். அப்பொழுதுதான் மிடற்றிசையிலிருந்து எழும் பாட்டை அனுசரித்து வாசிக்கக்கூடும். மிடற்றிசையைப் பிடில் கருவியில் அனுசரிக்கும் அறிவை அடைந்த ஒருவன், இலக்கண சேர்க்கைப் பெற்ற மிடற்றிசை இவ்வாறானது என்பதைப் பிறருக்கு விளக்கிவரவும் எடுத்துக்கூறவும் முடியும். அக்காலத்தில் பாடுவோருக்கு யாழ்க்கருவியும், சாரந்தா என்ற கருவியுமே துணைக்கருவியாக இருந்தன.
பிடில் கருவியின் சுருதியின் தந்திகளைச் சுருதி செய்வதில் இரண்டு வகைகளுள்ளன. ஒன்று இந்திய முறையார் செய்வது, மற்றொன்று ஆங்கில முறையாற் செய்வது. இந்திய முறையாற் சுருதி செய்வதில் இடமிருந்து வலமாக ‘4, 3, 2, 1’ ஆகிய தந்திகளின் முறையே மெலியுதானத்துக் குரல், அதாவது மந்தரஸ்தாயி ஸ, மெலியுத்தானத்து இளி, அதாவது மந்திரஸ்தாயி ப, சமன்தானத்துக் குரல், அதாவது மத்தியஸ்தாயி ஸ, சமந்தானத்துக் குரல், அதாவது மத்தியஸ்தாயி ப என்ற முறையில் சேர்க்கப் பெற்ற ‘ஸ-ப, ஸ-ப’ என்ற ஒலிக்கும், அதாவது மூன்றாவது தந்தியானது நாலாவது தந்தியின் ஐந்தாவது சுரத்தை ஒலிப்பதாயும், இரண்டாவது தந்தி மூன்றாவது தந்தியின் நான்காவது சுரத்தை ஒலிப்பதாயும், முதலாவது தந்தியானது இரண்டாவது தந்தியின் ஐந்தாவது சுரத்தை ஒலிப்பதாயும் இருக்கும்.
ஆங்கில முறையாற் சுருதி கூட்டுவதில் நான்காவது தந்தியின் ஐந்தாவது சுரம் மூன்றாவது தந்தியிலும், மூன்றாவது தந்தியின் ஐந்தாவது சுரம் இரண்டாவது தந்தியிலும், இரண்டாவது தந்தியின் ஐந்தாவது சுரம் முதல் தந்தியிலும் ஒலிப்பதாய் சுருதியில் சேர்த்துக் கொள்வர். நான்காவது தந்தி பெரும்பாலும் (G) ஜி சுரத்திலேயே அதாவது மெலிவுத்தானத்து ப- என்ற சுர ஒலியே வரப்படுவதாய் வைத்துக்கொள்ளப் பெறுவதால், ‘4-3-2-1’ என்ற தந்திகள் முறையே ‘ப-ரீ-த-கா’ தந்திகள் என்ற பெயர்களில் வழங்கி வருகின்றன.