முகர்சிங் (யூத யாழ்) இவ்வுலகின் தொன்மையான இசைக்கருவிகளுள் ஒன்றாக கருதப்படுகிறது. ஒரு இசைக்கலைஞன் இக்கருவியை வாசிப்பதை கி.மு 3ம் நூற்றாண்டு சீன ஓவியத்தில் காணலாம். இக்கருவியின் மற்ற பெயர்களில் யூத மதப்பெயர் இருந்தாலும், இக்கருவிக்கும் யூத மதத்திற்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை.
தமிழ்நாட்டில் கர்னாடக இசையில் மோர்சிங் முக்கிய பங்கு வகிக்கின்றது. தமிழ்நாட்டில் நடைபெறும் சங்கீதக் கச்சேரிகளில் ஓர் உன்னத இடத்தைப் பிடித்திருந்தது "முகர்சிங்" வாத்தியம். அந்தக் காலத்தில் சில வித்துவான்கள் தங்கள் கச்சேரிகளில் மிருதங்கத்தைப் பக்கவாத்தியமாக வைத்துக் கொள்வது போன்றே, முகர்சிங், கடம், கஞ்சிரா , கொன்னக்கோல், கெத்து போன்ற மற்ற உப பக்கவாத்தியங்களையும் வைத்துக் கொண்டு கச்சேரி செய்வது வழக்கமாகும்.
இதுபோன்று பக்கவாத்தியம், உப பக்கவாத்தியம் என்று எல்லா வித்துவான்களையும் இணைத்துக்கொண்டு கச்சேரி செய்வதைப் புல்பெஞ்ச் கச்சேரி" என்று பெயர். சமீபகாலம் வரை சீர்காழி கோவிந்தராஜன் அவரது பாட்டுக் கச்சேரியிலும், குன்னக்குடி வைத்தியநாதன் அவரது வயலின் கச்சேரியிலும் முகர்சிங்கை ஒரு பக்கவாத்தியமாக வைத்துக் கொண்டு கச்சேரி செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். ஆனால் இன்று பாட்டுக் கச்சேரியிலும், வாத்தியக் கச்சேரியிலும் ஏன் தாளவாத்தியக் கச்சேரிகளிலும் கூட இந்த முகர்சிங் இசைக்கருவி அவ்வளவாக இடம்பெறுவதில்லை என்பதே உண்மை நிலையாகும்.
ஒரு சிறிய கம்பியினாலான மோர்சிங் என்ற இசைக்கருவி ஓர் அருமையான கனவாத்தியமாகும். இதனை "மூர்ச்சங்க்" என்றும் கிராமங்களில் அழைப்பதுண்டு. இந்த இசைக்கருவியை வாயினால் பற்றிக்கொண்டு வாசிக்கப்படுவதால் இதனை ஹிந்தி மொழி இலக்கியங்களில் (சதுர்புஜதாஸ், சிர்தாஸ் ஆகியோரின் கவிதைகளில்) "முகர்சங்க்" என்று குறிப்பிட்டுள்ளனர். அகோபிலர் எழுதிய "சங்கீத பாரிஜாதம்" என்ற வடமொழி நூலிலும் இது "முகசங்க்" என்றே பெயரிடப்பட்டுள்ளது.
இதனை முகத்தின் அருகில், வாயில் வைத்து வாசிப்பதாலும், இது சங்கு போன்ற அமைப்பில், சங்கு வடிவத்தில் உள்ளதாலும் இதனை "முகச்சங்கு" என்றும், முகச்சங்கம், நுகர்சங்கு ,முகர்சிங், மோர்சிங் என்றும் அழைக்கின்றனர். இதனை ஆதிகாலத்தில் மூங்கிலால் செய்துள்ளனர். மலைவாழ் மக்கள் மற்றும் கிராமியச் சிறுவர்கள் இதனை மூங்கிலால் செய்த விளையாட்டாக வாயில் வைத்து இசைத்து மகிழ்ந்துள்ளனர். சுமார் ஏழு அல்லது எட்டு சென்டிமீட்டர் நீளம் கொண்டது இச்சிறு இசைக்கருவி.
இது இரும்பு எஃகினால் செய்யப்படுகின்றது. மேலும் சிவபெருமானின் திரிசூலம் போன்ற அமைப்பில் உள்ளது. இதன் உடல் குதிரைலாடம் போன்ற வடிவம் உடையது. இதன் நடுவில் இரு புறங்களையும் விட சற்று நீளமான ஒரு நாக்கு பொருத்தப்பட்டுள்ளது. இதனை வாசிப்பவர் மோர்சிங்கை இடது கையின் உள்ளங்கையினால் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு, கிடுக்கிப் போன்ற பாகத்தைப் பற்களில் கடித்துக் கொள்கின்றனர். அப்பொழுது கம்பியினாலான நாக்குப் பகுதியை வலது கையின் ஆள்காட்டி விரலினால் தட்டி மீட்டப்படும். வாசிப்பவரின் வாய் ஒலியை உண்டாக்குகின்றது. அதை வெவ்வேறு விதமாக வாயில் வைத்துக் கொள்வதாலும், வாய் மூலம் விடும் மூச்சுக் காற்றைக் கட்டுப்படுத்துவதாலும், நுண்மையான அழகிய ஒலிகள் இதில் உண்டாக்கப்படுகின்றன.
முகர்சிங் என்ற இந்த இசைகருவி இடைக்காலத்தில் தோன்றி வளர்ந்து வருகின்றது. மேலும் வட இந்தியாவிலும், தென்னிந்தியாவிலும், சில வெளிநாடுகளிலும் கூட இது வாசிக்கப்பட்டு வருகின்றது. இதில் அழகிய பல தாளச் சொற்கட்டுக்களை வாசிக்கின்றனர். தாளக் கருவிகளில் வாசிக்கப்படும் அனைத்துச் சொற்களையும் இதில் இலாகவமாக வாசிக்க முடியும். மேலும் சொற்களை வாசிக்கும் அதே நேரத்தில் இது கச்சேரிகளில் சுருதியை நிலைப்படுத்தும் செயலையும்கூட செய்கின்றது. பல்வேறு வகையான சுருதிகளுக்கு ஏற்ப 5 முதல் 10 வகையான சுருதிகளில் கூட பல முகர்சிங் இசைக்கருவிகளை வாசிப்பவர் வைத்திருப்பார். சில நேரங்களில் சுருதி அளவுகளில் சிறிது மாற்றம் செய்வதற்காக அதில் மெழுகினை வைத்து சுருதியை கூட்டவோ அல்லது குறைக்கவோ செய்வர். நாக்கினால் தட்டியும், உதட்டின் மூலம் காற்றினை ஊதியும் வாசிக்கும்பொழுது சில நுண்மையான இசை ஒலிகளை உண்டாக்கி முகர்சிங் கலைஞர்கள் கைதட்டினையும், பாராட்டுதலையும் பெறுவதுண்டு. இதில் வெளிப்படும் இரும்பு எஃகின் வெங்கல நாதமும், சுருதி நாதமும் கேட்பதற்கு மிகவும் இரம்யமாக இருக்கும்.
கச்சேரியில் சுருதியின் நாதத்தையும், மிருதங்கத்தின் சுருதி நாதத்தையும் இது பாடகருக்குக் கூடுதலாகக் கொடுக்கும். மிருதங்கத்தில் வாசிக்க பெறும் ஜதிகளை இதில் வாசிக்கும் போதும், மிருதங்கத்தோடு இணைந்து இதில் சொற்கட்டுகளை வாசிக்கும்போதும் கச்சேரி வெகு ஜோராகக் களைகட்டும்
4 comments:
வழக்கம்போல மிகத் தெளிவான
நாங்கள் இதுவரை அறியாத
விவரங்கள் அடங்கிய நல்ல பதிவு
நான் கூட மோர்சிங் என்கிற
சொற்பதம் குறித்து மிகவும்
குழம்பிப்போயிருக்கிறேன்
அதை நன்றாக விளக்கியிருக்கிறீர்கள்
உங்களுக்கு இசையில் இவ்வளவு
ஈடுபாடு உள்ளதால் இசைக் கலைஞர்கள் குறித்தும்
அவர்கள் பாணி அவர்கள் சிறப்பு குறித்தும் கூட
உங்களுக்கு நிறையத் தெரிந்திருக்கக் கூடும்
அதையும் கூட பகிர்ந்து கொள்ளலாமே
நல்ல பதிவு.தொடர வாழ்த்துக்கள்
நிச்சயமாக கூடிய சீக்கிரம் இசைக்கலஞர்களைப் பற்றியப் தகவல்களைப் பதிவு செய்கிறேன்
முகர்சிங் என்ற இசைக்கருவியின் முழு விபரங்களை
எளிதாக புரியும் வண்ணம் எழுதிய உங்களுக்கு என்
உளமார்ந்த வாழ்த்துக்கள் பல !
மிக்க நன்றி நண்பா
கருத்துரையிடுக