உலகின் தொன்மை வாய்ந்த மொழிகளில் செவ்வியல் மொழி என்னும் பெருமையுடன் வாழும் மொழி தமிழ்மொழி ஆகும். தமிழ் மொழியில் தொல்காப்பியம் தொடங்கி புதுக்கவிதை வரையிலும் ஏராளமான இலக்கியங்கள் வாழ்ந்து வருகின்றன. இயல், இசை, நாடகம் என முத்தமிழாகப் போற்றப்படுவது தமிழ்மொழி ஆகும். இசைத்தமிழாகிய தமிழ் இசை தொல்காப்பியர் காலம் முதற்கொண்டு சிறப்புடன் திகழ்வதைக் காண முடிகிறது. தமிழ் இசையானது தனக்கே உரிய தனித்தன்மையுடன் விளங்குகின்ற அதே வேளையில் தமிழ் இலக்கியங்களில் இரண்டறக் கலந்திருப்பதை இவண் காணலாம்.
கலைஞர்களிடம் உள்ள அழகுணர்ச்சியின் வெளிப்பாடாகப் பிறப்பதே கலை ஆகும். கலைகளைப் படைக்கும் கலைஞன் அவற்றால் தான் மகிழ்வதோடு அக்கலையைச் சுவைப்பவர்களையும் மகிழ்ச்சி அடையச் செய்கிறான். நுண்கலைகளில் ஒன்றாகச் சிறப்பிற்குரியதாகப் போற்றப்படுவது இசைக்கலை ஆகும். ஓசையை அடித்தளமாகக் கொண்டு, செவி நுகர் கனியாக அமைவது இசைக்கலை ஆகும். ஒலியைக் குறிப்பிடத்தக்கவை என்றும் (குயிலின் கூவல்) குறிப்பிட்டுக் காட்ட இயலாத குழப்ப ஒலிகள் (சந்தை இரைச்சல்) என இரண்டாகப் பிரிக்கலாம். இசைக் கலையில் நுட்பமான முறையில் ஒலியைப் பிரித்து உணர வேண்டியுள்ளது. ஒலியின் நுட்பத்தைப் பகுத்தறியும் ஆற்றல் உடையோர்க்கே வாய்ப்பதான இசைக்கலை ஓர் அரிய கலை எனலாம்.
இசைக்கலையின் அமைப்பு:
எழுத்துக்களை உருவாக்கிச் சொற்களைப் பொருள் தருமாறு அமைப்பது போல் ஒலியின் பகுதிகளைச் சுவை தருமாறு இணைத்து இசை உருவங்களான பணிகளை உருவாக்கி இசைக் கலையைப் படைக்கிறான் மனிதன். ஏழு இசைகள் என்பது இந்தியா எங்கும் பரவலாகக் காணப்படும் ஒன்றாக விளங்குகிறது. சங்கப் பாடல்களில் ஏழிசைப் பற்றிய குறிப்புகள் உண்டு. மேற்கத்திய இசையைக் காட்டிலும் கிழக்கத்திய இசை மிகச் சிறப்பானதாகவும் முழுமை பெற்றதாகவும் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
தமிழிசையும் கருநாடக இசையும்:
இசையானது எல்லா உயிர்களையும் ஈர்க்கும் தன்மை படைத்ததாக விளங்குவதோடு மனித சமுதாயத்தின் உயர்ந்த பண்பாட்டு விழுமியத்திற்குச் சான்றாக விளங்குகிறது. ”இசை என்பது மொழி, இனம், நாடு கடந்த பொதுமை உடையது. எந்நாடும் உரிமை கொள்ளத்தக்கதாகும். பொதுமை நிலை கொண்ட இசையை ஒரு மொழிக்கு மட்டும் உரியது என்றோ ஒரு மொழியே இசை என்றோ கட்டுப்படுத்துதல் அத்துணைச் சிறப்பும் முறைமையும் உடையதன்று. ஆனால் இனம் காரணமாக அதாவது மொழிவழி அமைந்த இனத்தவர் காரணமாக இசையை உரிமைப்படுத்தலாம். ஆகவே இசைக்கு மொழி இல்லை என்றாலும் மொழிக்கு இசை உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழிசையின் சிறப்பும் தொன்மையும்
தமிழ் மக்கள் பழங்காலத்தில் இருந்தே தங்கள் அறிவுத்திறனால் இசையமைப்பு முறையை அமைத்திருந்தனர். இதனைத் தொல்காப்பியக் குறிப்புகளிலிருந்தும் சங்க இலக்கியப் பாடல்களில் இருந்தும் அறியமுடிகிறது. தமிழில் இருந்து அழிந்துபோன இசை நூல்களாகச் சிற்றிசை, பேரிசை, இசைநீல், இசை நுணுக்கம், இசை விளக்கம், பஞ்சமா பிரதீயம், பண் அமைதி, பண் வரி விளக்கம் பாட்டும் பண்ணும், இசைக் கூறு முதலானவை இருந்ததை அறிய முடிகிறது. பழந்தமிழ் மக்கள் சுரங்களையும், சுருதிகளையும் ராகம் உண்டாக்கும் விதிகளையும் நன்கு உணர்ந்து பன்னிரண்டாயிரம் ராகங்களைப் பாடி வந்தார்கள் என்று பழந்தமிழ் இசை நூல்கள் கூறுகின்றன. இசை அமைப்பு, பண் அமைப்பு, தாள அமைப்பு, வண்ணங்களை இனிமையாகப் பாடுதல் ஆகியவற்றில் பண்டைத் தமிழர் தனித்திறமை பெற்றவராகத் திகழ்ந்தனர்.
கருநாடக இசை – விளக்கம்:
பக்தி மணம் கமழும் நாயன்மார்கள், ஆழ்வார்களின் இசைப்பாடல்கள் வட நாட்டினரையும் வெகுவாகக் கவர்ந்தன. வடமொழித் திறமை உடைய சாரங்கதேவர் கி.பி.1210 – 1241 வரையுள்ள காலத்தில் தமிழகம் வந்து தேவாரப் பண்களை அறிந்து தமது வடமொழி சங்கீத ரத்னாகர் என்னும் நூலில் தேவாரப் பண்கள் சிலவற்றைப் போற்றி வைத்துள்ளார். சாரங்க தேவர் எழுதிய சங்கீத ரத்னாகரத்தில் கர்னாடக இசையின் மூலக்கரு அமைந்திருப்பதாகக் கருதலாம். வடமொழியில் வல்ல சாரங்க தேவர் சங்கீத ரத்னாகரத்தை வடமொழியில் எழுதினார். அந்நூலிலுள்ள இசையமைப்பு முறை தேவாரம், திவ்விய பிரபந்தத்தில் உள்ள தமிழிசைப் பண்ணமைப்பு முறையை ஆதாரமாகக் கொண்டது. சங்கீத ரத்னாகரத்தின் வாயிலாகத் தமிழிசை வடநாடுகளுக்கு அறிமுகமானதாகக் கூறலாம்.
மேலும் கருநாடக இசை பற்றிக் குறிப்பிடும்போது, ”தமிழரிசையே இன்று உழையிசையடிப்படையில் தாய்ப்பண்களையும் கிளைப்பண்களையும் வகுத்தும் பழந்தமிழ்க் குறியீடுகளையும் பண்ணுப் பெயர்களையும் வடசொல்லாக மாற்றியும் ”கருநாடக சங்கீதம் எனப் பெயரிட்டு வழங்கி வருகின்றனர்” என்று வெற்றிச்செல்வன் தம்முடைய இசையியல் என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார்.
தொல்காப்பியமும் தமிழிசையும்:
கி.மு. 5-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தொல்காப்பியர், இன்றைய மொழியியலின் அடிப்படை அலகான ஒலியின் நுட்பத்தை அறிவியல் பூர்வமாக உணர்ந்து இலக்கணம் வகுத்தவர். உயிர், உயிர்மெய், மெய் ஆகிய எழுத்துக்கள் அளபெடுப்பதை இசை நீட்டம் எனக் குறிப்பிடும் தொல்காப்பியர் அதனைக் குறிப்பிடும்போது.
……இசையோடு சிவனிய
நரம்பின் மறைய என்மனார் புலவர் (தொல்.1:33 2-3)
என்று கூறுகிறார். இதிலுள்ள ”நரம்பின் மறைய” எனத் தொல்காப்பியர் குறிப்பிடுவது இசையைப் பற்றியும் ”யாழ்” போன்ற இசைக் கருவியையும் உள்ளடக்கி அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இசை என்ற சொல் தொல்காப்பியத்தில் 24 இடங்களில் வந்துள்ளது. இவை அனைத்தும் இசைக்கலையுடன் ஒரு வகையில் தொடர்பு உள்ளதாகவே அமைந்துள்ளது.
தொல்காப்பியர் குறிப்பிடும் பாட்டு, வண்ணம் ஆகிய சொற்கள் இசையோடு தொடர்புடைய ஆழ்ந்த பொருள் பொதிந்த சொற்களாகவே அமைந்துள்ளன. தொல்காப்பியர் வண்ணத்தை 20 வகையாகப் பிரித்துப் பெயர்களைச் சுட்டி நூற்பா இயற்றியுள்ளார். இவ்வண்ணங்களை வல்லிசை வண்ணம், மெல்லிசை வண்ணம், இயைபு வண்ணம் என இசைத்தன்மையை உயர்த்தும் வகையில் அமைத்துள்ளார். தொல்காப்பியர் பாடல்களை அவற்றின் அமைப்பு, கருத்து மற்றும் இசைத்தன்மையைக் கொண்டு பாகுபாடு செய்துள்ளார். கலிப்பாவும், பரிபாடலும் இவ்வகையில் குறிப்பிடத்தகுந்தன, பரிபாட்டு என்பது ”இசைப்பா” என்கிறார் பேராசிரியர்.
பிசியைப் போன்ற இயல்புடையதாகப் பண்ணத்தி என்னும் இசைப்பாடல் இருப்பதைத் தொல்காப்பியத்தின் வழி அறியலாம். ஊடல்தீர்க்கும் வாயில்களாகத் தொல்காப்பியர் குறிப்பிடும் பாணன், கூத்தன், பாடினி, விறலி ஆகியோர் இசையிலும் கூத்திலும் திறமை உடையவர்கள் என்பதைச் சங்க இலக்கியத்தின் வாயிலாக அறிய முடிகிறது. ஐவகைப் பண்களையும் இசைக்கருவிகளையும் தொல்காப்பியர் விரிவாகக் கூறுவது சிறப்புக்குரிய ஒன்றாகும்.
சங்க இலக்கியங்களும் தமிழிசையும்:
இசை உணர்வின் எழுச்சியால் இசைப்பாடல்கள் தோன்றுகின்றன. சங்க இலக்கியங்களான பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும் பண்டைத் தமிழரின் இசைப்புலமையை வெளிப்படுத்துவனவாக அமைந்துள்ளன. பரிபாடலுக்கு இசைவகுத்தோர் பதின்மர் ஆவர். மறையோர் பாடல், உழிஞை பாடல், தமிஞ்சிப் பாடல், விறற்களப் பாடல், வெறியாட்டப் பாடல், துணங்கைப் பாடல், வேதப் பாடல், வள்ளைப் பாடல் ஆகியன இசைப்பாடல்கள் என்பன குறிப்பிடத்தக்கது.
சங்ககாலப் பண்ணும் இசைக் கருவியும்:
சங்க காலத்தில் ஆண்கள், பெண்கள், மட்டுமல்லாது பாணர், பாடினியர், ஆடல் மகளிர் போன்றறோர் பண்ணும் தாளமும் கூடிய இசைப்பாடல்களைப் பண்ணிசைக் கருவிகள், தாளவிசைக் கருவிகள் துணையோடு சிறப்பாகப் பாடி உள்ளனர். ஆம்பல் பண், காஞ்சிப் பண் காமரம், குறிஞ்சிப் பண், செவ்வாழி பண், நைவனம், பஞ்சுரம், படுமலைப்பண், பாலைப்பண், மருதப்பண், விளரிப்பண் ஆகிய பண்கள் முழுமையாகவும் அவற்றின் பிரிவுகளாகவும் இசைக்கப்பட்டுள்ளன.
சங்க காலத் தமிழர் பண்களைப் பல்வேறு இசைக் கருவிகள் துணையோடு இசைத்துப் பாடியுள்ளனர். யாழ், கின்னரம், குழல், சங்கு, தூம்பு, வயிர், தண்ணுமை, முழவு, முரசு, பறை, கிணை, துடி, தடாரி, பாண்டில் மற்றும் இன்னியம் முதலான இசைக்கருவிகள் இருந்துள்ளன.
சங்கம் மருவிய நூல்களும் தமிழிசையும்:
நீதி நூல்கள் பதினெட்டும் தமிழிசையின் நுட்பத்தைச் சிறப்பாக எடுத்துரைப்பனவாக அமைந்துள்ளன. சிறந்த பண்ணிசைக் கருவியான யாழைப் பற்றிக் குறிப்பிடும்போது, ”குழலினிது யாழினிது என்ப” (குறள்:66) பண்ணமையா யாழின் கீழ்ப்பாடல் பெரிதின்னா” (இன்னா. 31.1) என நீதி நூல்கள் குறிப்பிடுகின்றன. ”குழலினினியமரத் தோவை நற்கின்னா” (இன்னா.35.2) ”சொற்குறி கொண்டு துடிபண் உறுத்துவ போல்” (பழமொழி: 28:1-2) போன்ற பாடல் வரிகள் சங்கம் மருவிய காலத் தமிழிசைச் சிறப்பை உணர்த்துவன ஆகும்.
”செவ்வழி யாழ் பாண் மகனே” (திணை மாலை 124-1) ”பாலையாழ் பாண் மகனே” (திணை மாலை 133:1); ”தூதாய்த் திரியும் பாண்மகனே” (ஐந்திணை 22:1-2) போன்ற பாடல் வரிகள் இசைக் கலைஞர்களைப் பற்றிக் கூறுவதைக் காண முடிகிறது. ஆரவாரம் நிறைந்த சங்க கால இசை மரபானது. சமண பௌத்த தாக்கம் நிறைந்த சங்கம் மருவிய காலத்தில் அடக்கத்தோடு ஆடம்பரமின்றி அமைதியாக இலங்கியது.
காப்பியங்களும் தமிழிசையும்:
கி.பி. 2-ஆம் நூற்றாண்டிலிருந்து 12- ஆம் நூற்றாண்டு வரையிலான காலக் கட்டத்தில் சிலப்பதிகாரம் முதல் கம்பராமாயணம் வரையில் காப்பியங்கள் பல தோன்றியுள்ளன. இசையானது மனித வாழ்க்கையின் ஒரு கூறு ஆகும். காப்பியங்கள் பலவும் பழந்தமிழ் இசைச் சுரங்கங்களாகவே அமைந்துள்ளன. அவற்றுள்ளும சிலப்பதிகாரம் இசைச் செய்திகளை மிகவும் அதிகமாகத் தருகிறது. அடுத்த நிலையில் பெருங்கதை இசை மலிந்த காப்பியமாகக் காட்சி அளிக்கிறது.
சிலப்பதிகாரமும் தமிழிசையும்:
சிலப்பதிகாரம் தமிழிசைக் காப்பியமாகும். இசை ஆசிரியரின், தன்னுமை ஆசிரியரின் அமைதி பற்றி இளங்கோ அடிகள் கூறுகிறார். தன்னுமைக் கருவியின் பயன்பாட்டுச் சிறப்பை ஆக்கல், அடக்கல், மீத்திறம் படாமை என இளங்கோ அடிகள் கூறுகிறார். யாழின் அமைப்பு, யாழிசை அமைப்பு, யாழாசிரியரின் திறமை முதலியன கூறப்படுகின்றன. வரிப்பாடல், தெய்வம் சுட்டிய வரிப்பாடல், குடைப்பாடல் முதலியன இசையின் நுட்பத்தைப் புலப்படுத்துவன. புகாரில் இசை வல்லுநர்கள் இருந்ததை, ”அரும்பெறன் மரபில் பெரும்பாண் இருக்கையும் (சிலப்:535-37) என்ற அடியாலும் வீணை இசைக் கருவி இருந்ததை, ”மங்களம் இழப்ப வீணை மண்மிசைத்” (சிலப்.6:18-23) என்ற அடியாலும் உணர முடிகிறது.
உலகின் தொன்மை வாய்ந்த மனித இனங்களுள் தமிழினத்தின் தனிச்சிறப்பாகத் தமிழ் இலக்கியங்களும் தமிழிசையும் அமைந்துள்ளன. தமிழ் இலக்கியங்கள் காலந்தோறும் வளர்ச்சி அடைந்து வருவதைப் போலவே தமிழிசையும் இரண்டாயிரமாண்டு பழமையுடன் சிறந்து விளங்கி வருகிறது. தமிழிலக்கியத்தின் அமைப்புகளில் வடமொழி ஆதிக்கம் செலுத்தும்போது எல்லாம் அதனை மீறி இலக்கியம் வளர்ந்தது போல் தமிழிசையில் வடமொழி, தெலுங்கு போன்ற மொழிகள் ஆதிக்கம் செலுத்த முனைந்தபோது அவற்றை எதிர்த்து வளர்ந்து வந்துள்ளது.
தமிழிலக்கியங்களும் தமிழ் இசையும் தமிழரின் பண்பாட்டு அடையாளம், வரலாற்றுக் கருவூலம், எதிர்காலத் தமிழ்ச் சமுதாயத்தின் அழியாச் செல்வம் என்றால் அது மிகையாகாது