RSS

தமிழிசைக் கருவி - பறை (தப்பு)

தமிழகத்தில் பன்னெடுங்காலமாக இருந்து வரும் முக்கிய இசைக்கருவி பறை. அதன் மற்றொரு பெயர் தப்பு. இது தோல் இசைக்கருவி. எந்தக் காலத்தைச் சேர்ந்தது என்று உறுதியாகத் தெரியவில்லை. ஆனால் தற்போதும் நாட்டுப்புற இசையில் இந்தக் கருவி பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இக்கருவியில் மூன்று அடிப்படை பாகங்கள் உள்ளன. வட்டச் சட்டம், மாட்டுத் தோல், சட்டத்தின் உட்புறத்தில் பொருத்தப்படும் உலோகத் தட்டு. 35 செ.மீ. விட்டம் கொண்ட வட்டச்சட்டத்தில் தோல் இழுத்துக் கட்டப்பட்டு ஒட்டப்பட்டிருக்கும். சட்டம் பொதுவாக வேப்பமரத்தில் செய்யப்பட்டிருக்கும். பறையை இசைக்க நீண்ட தட்டையான ஒரு மூங்கில் குச்சி, குட்டையான, பருத்த மற்றொரு குச்சி பயன்படுத்தப்படும். கட்டைவிரல், மற்ற விரல்களுக்கு இடையில் குட்டை குச்சியை பிடித்துக் கொண்டு கீழ்புறத்தில் இருந்து அடிக்க வேண்டும். இடது கையின் கட்டைவிரல், ஆட்காட்டி விரல்களில் நீண்ட குச்சியைப் பிடித்துக் கொண்டு மேல் பகுதியில் இருந்து அடிக்க வேண்டும்.

குச்சிகளால் அடித்து ஒலியெழுப்பி இசைக்கப்படும் கருவி இது. வலது கையில் வைத்திருக்கும் குட்டைக் குச்சியால் பறையின் மத்தியில் அடிப்பது ஒரு வகை அடி. பறையைப் பிடித்துள்ள இடது கையில் வைத்துள்ள நீண்ட குச்சியால் அடிப்பது இரண்டாவது வகை அடி. இரண்டு குச்சிகளாலும் அடுத்தடுத்து அடிப்பது மூன்றாவது வகை அடி. இவைதான் அடிப்படை அடிகள். இவற்றை மாற்றி மாற்றி அடித்து புதிய மெட்டுகள், சொற்கட்டுகள் உருவாக்கப்படுகின்றன.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS