skip to main |
skip to sidebar
(தலைப்பை கிளிக் செய்து முழுக் கட்டுரையைப் படிக்கவும்)
இக்கட்டுரையை எழுதியவர் அவுஸ்திரேலியாவில் வதியும் பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா
தமிழ் இசைக்கு இலக்கணம் வகுத்த முதல்நூல் அகத்தியம் என்று அறிஞர்கள் சொல்லுகின்றார்கள். ஏனெனில் முத்தமிழுக்கும் இலக்கணம் வகுத்த முதல்நூல் அகத்தியமே என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றார்கள். ஆனால் அந்த அரிய நூல் இப்போது இல்லை. அகத்தியம் ஏழாயிரம் வருடங்களுக்கும் முன்னர் அகத்தியரால் எழுதப்பட்டது என்பது தமிழாய்வாளர்களின் கருத்தாகும்.
இசைக்கு இலக்கணம் வகுத்த நூல் அகத்தியம் என்பதால் அகத்தியத்திற்கு முன்னரும் பல இசை நூல்கள் இருந்திருக்கவேண்டும். ஏனெனில் இலக்கியத்திற்குப் பின்னர்தான் இலக்கணம் தோன்றியிருக்கமுடியும். அகத்தியத்திற்குப் பின்னர் தோன்றிய இசை நூல்களான பெருநாரை, பெருங்குருகு, முதுநாரை, முதுகுருகு, பஞ்சபாரதீயம், பதினாறுபடலம், வாய்ப்பியம், குலோத்துங்கன் இசைநூல் போன்ற அற்புதமான நூல்களும் அழிந்துபோய்விட்டன.
தமிழிசை பற்றிக் கூறுகின்ற நூல்களில், இன்று கிடைக்கப்பெறுகின்ற மிகத் தொன்மையான நூல் தொல்காப்பியம் ஆகும். அந்நூல் ஐயாயிரம் வருடங்களுக்கு முன்னால் தொல்காப்பியரால் எழுதப்பட்டது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றார்கள்.
இசையைத் தொழிலாக கொண்ட மக்கள் உபயோகப்படுத்தும்
இசைக்கருவிக்குப் பறை என்றும், இன்பமாக பொழுது போக்கும் மக்கள் பயன்படுத்தும் இசைக்கருவி யாழ் என்றும் தொல்காப்பியத்தில் இருவகை இசைக்கருவிகளைப்பற்றிக் குறிப்பிடும் தொல்காப்பியர், முல்லை, குறிஞ்சி, மருதம்,நெய்தல்,பாலை ஆகிய ஐவகை நிலங்களுக்கும் உரிய தொழில் இசையையும,; இன்ப இசையையும் தெளிவாக வகுத்து வைத்துள்ளார்.
‘அசையும் சீரும் இசையொடு சேர்த்தி
வகுத்தனர் உணர்த்தலும் வல்லோர் ஆறே’ என்கிறது தொல்காப்பியம். (நூற்பா எண் – 1268)
‘இசைப்பு இசையாகும் என்கிறது’ 793 ஆவது நூற்பா. இசைப்பு என்பது யாழ் போன்ற இசைக்கருவிகளை இசைத்தல் ஆகும் என்பது இதன் பொருள்.
அளபு இறந்து இசைத்தலும் ஒற்று இசை நீடலும்
உள என மொழிப இசையொடு சிவணிய
நரம்பின் மறைய என்மனார் புலவர்
என்று 33 ஆவது நூற்பா சொல்கிறது.
இசையொடு பொருந்திய யாழ் நூலில் இசையிலே எழுத்து ஒலிகள் அளவுகடந்து ஒலித்தலும், ஒற்றுக்கள் நீண்டு ஒலித்தலும் உண்டு என்று அறிஞர் கூறுவர் என்பது இதன் கருத்து.
சங்க இலக்கியங்களிலே இடம்பெறுகின்ற எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான பரிபாடலே இப்போது கிடைக்கப்பெறுகின்ற இசை நூல்களிலேயே மிகத்தொன்மையானதாகக் கருதப்படுகின்றது. பரிபாடல்கள் அனைத்துமே இசைப்பாடல்களே என்று தெரிவிக்கின்றார் பரிமேலழகர்.
திருமாற்கு இருநான்கு செவ்வேள் முப்பத்தொருபாட்டு காடுகாட்கு ஒன்று – மருவினிய
வையை இருபத்தாறு மாமதுரை நான்கென்ப
செய்யபரி பாடல் திறம்
என்கின்ற வெண்பாவின் மூலம், திருமாலைப்பற்றி எட்டுப்பாடல்களும், முருகனைப்பற்றி முப்பத்தியொரு பாடல்களும், காளியைப்பற்றி ஒரு பாடலும், வைகை நதியைப்பற்றி இருபத்தியாறு பாடல்களும், மதுரையைப்பற்றி நான்கு பாடல்களுமாக மொத்தம் எழுபது பாடல்கள் பரிபாடலில் இடம்பெற்றிருந்தன என்பதை அறிய முடிகிறது. எழுபது பாடல்களின் தொகுப்பான பரிபாடலில் இப்போது கிடைக்கப்பெறுபவை இருபத்தியிரண்டு பாடல்கள் மட்டுமேயாகும். ஏனையவை அழிந்துபோய்விட்டன.
பாடல்களை ஆக்கிய புலவர்களின் பெயர்களும், எந்தப் பண்ணில் பாடவேண்டும் என்ற விபரங்களும், பண்ணமைத்த இசையறிஞர்களின் பெயர்களும் அந்தப் பாடல்களோடு கிடைக்கப்பெறுகின்றன. பெட்டகனார், கண்ணனாகனார், மருத்துவன் நல்லச்சுதனார், பித்தாமத்தர் என்போர் பரிபாடலில் காணப்படும் பாடல்களுக்கு பண்ணமைத்துள்ளனர்.
பரிபாடலில் உள்ள பாடல்கள், இசைப் பாடல்களாக அமைவதோடு மட்டுமன்றி, இசைபற்றியும், இசைக் கருவிகள் பற்றியும் தகவல்களைக் கொண்டனவாகவும் விளங்குகின்றன.
ஒத்தகுழலின் ஒலி எழ, முழவு இமிழ்
மத்தரி, தடாரி, தண்ணுமை, மகுளி
ஒத்து அளந்து, சீர்தூக்கி, ஒருவர் பிற்படார்
என்ற பாடலில் சில இசைக் கருவிகளின் பெயர்களைக் காணலாம்.
மாறுகின்ற பல்வேறு ஒலிகளை உடையது பரங்குன்றம் எனப் பகர்கின்ற பின்வரும் பாடல்களில் இசைதோன்றுவது பற்றியும், குழல் யாழ், முழவு முதலிய இசைக்கருவிகளின் பெயர்களையும், பாணர், விறலியர் ஆகிய இசைக் கலைஞர்களுக்கான பொதுப் பெயர்களையும் குறிப்பிடுகின்றன.
ஒருதிறம், பாணர் யாழின் தீங்குரல் எழ
ஒருதிறம், யாணர் வண்டின் இமிரிசை எழ
ஒருதிறம், கண்ணார குழலின் கரைபு எழ
ஒருதிறம், பண்ணார் தும்பி பரந்திசை ஊத
ஒருதிறம், மண்ணார் குழவின் இசை எழ
ஒருதிறம், அண்ணல நெடுவரை அருவிநீர் ததும்ப
ஒருதிறம், பாடல்நல் விறலியர் ஒல்குபு நுடங்க
ஒருதிறம், வாடை உளவயின் பூங்கொடி நுடங்க
ஒருதிறம், பாடினி முரலும் பாலையங் குரலின்
நீடுகிளர் கிழமை நிறைகுறை தோன்ற
ஒருதிறம், ஆடுசீர் மஞ்சை அரிக்குரல் தோன்ற
மாறுமாறு உற்றனபோல் மாறெதிர் கோடல்
மாறு அட்டான் குன்றம் உடைத்து (பாடல்: 17, வரி 9-21)
விரல் செறி தூம்பின் விடு துளைக்கு ஏற்ப
முரல் குரற் தும்பி அவிழ் மலர் ஊத
யாணர் வண்டினம் யாழ் இசை பிறக்க
பாணிமுழவு இசை அருவி நீர் ததும்ப
ஒருங்கு பரந்தவை எல்லாம் ஒலிக்கும்
இரங்கு முரசினான் குன்று (பாடல்: , வரி 33-38)
எட்டுத் தொகை நூல்களில் மற்றொன்றான புறநானூற்றில் குறிஞ்சிப்பண், மருதப்பண்,காஞ்சிப்பண், செல்வழிப்பண், படுமலைப்பண்,விளரிப்பண் என்னும் பண்களைப்பற்றிக் கூறப்பட்டுள்ளது. சீரியாழ், பேரியாழ், வேய்ங்குழல், ஆம்பற்குழல், முழவு, தண்ணுமை, பெருவங்கியம் முதலிய இசைக்கருவிகளைப்பற்றி விளக்கப்பட்டுள்ளது.
பெண்ணொருத்தி யாழிலே குறிஞ்சிப்பண்ணை இசைத்து, தினைப்புனத்தில் தீனிக்காக வந்த யானையைத் தூங்கச் செய்தாள் என்ற தகவல் அகநானூற்றில் அறியத்தரப்பட்டுள்ளது. மற்றொரு எட்டுத்தொகை நூலான பதிற்றுப்பத்தின் ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் துறை, வண்ணம், தூக்கு(இசை), பெயர் என்பன குறித்து வைக்கப்பட்டுள்ளன. பத்துப்பாட்டில் இடம்பெறும் சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை என்பவற்றில் சீறியாழ், பேரியாழ் என்னும் இசைக்கருவிகளைப்பற்றிச் சொல்லப்படுகிறது. இசைக் கலைஞர்களைப்பற்றிச் சொல்லப்படுகிறது.
இளங்கோவடிகள் இயற்றிய, சிலப்பதிகாரம் தமிழ் இசையின் வளர்ச்சிக்குச் சான்றாக அமைந்துள்ள அற்புதமான நூலாகும். நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரமும், அதன் உரையாசிரியரான அடியார்க்கு நல்லார் உரையும் தமிழிசையின் மேன்மையைக் கூறி நிற்கின்றன.
சிலப்பதிகாரத்தின் கானல்வரிப் பகுதியில், வார்த்தல், வடித்தல், உந்தல், உறத்தல், உருட்டல், தெருட்டல், அள்ளல், பட்டடை என்று யாழை மீட்டுனின்ற எட்டுவகைத் திறன்பற்றி எடுத்தியம்பப்படுகிறது. ஏழிசைபற்றியும், நான்குவகைப் பாலைகள் பற்றியும், முப்பது வகையான தோற்கருவிகளைப் பற்றியும் சிலப்பதிகாரம் கூறுகின்றது.
சிலப்பதிகாரத்திற்கு உரையெழுதிய அடியார்க்கு நல்லார் காலத்திலே கிடைக்கப்பெற்று, அதன்பின்னர் அழிவுற்ற இசை நூல்கள் பல. முறுவல், குணநூல், சயந்தம், செயிற்றியம், சிகண்டி முனிவர் எழுதிய இசை நுணுக்கம், யாமளேந்திரர் எழுதிய இந்திர காவியம், ஆதிவாயிலார் எழுதிய பரதசேனாபதீயம், மதிவாணன் எழுதிய நாடகத் தமிழ்நூல் ஆகியவை அவற்றிற் சில என அறியக்கிடக்கின்றது.
அடியார்க்கு நல்லார் காலத்தில் வாழ்ந்தவரான அறிவனார் இயற்றிய பஞ்சமரபு இப்போது கிடைக்கப்பெறும் பழந்தமிழ் இசைநூல்களில் ஓன்றாகும்.
இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்தவரான, தெய்வப்புலவர் திருவள்ளுவரின் திருக்குறளிலும் பண், குழல், யாழ் என்றெல்லாம் இசைபற்றிய செய்திகள் காணப்படுகின்றன.
தென்னாட்டு மக்கள் பாடுவதிலும், பல்வேறு இசைக் கருவிகளை வாசிப்பதிலும், கூத்துக் கலையிலும் மிகவும் திறமையுள்ளவர்கள் என்று நாட்டிய சாஸ்திரம் என்ற தனது நூலிலே பரத முனிவர் குறிப்பிட்டுள்ளார். அவர் அவ்வாறு குறிப்பிட்டுள்ளது தமிழ் இசையைப்பற்றியே என்பது ஆராய்ச்சியாளர்களின் முடிவாகும்.
மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்ந்து வளர்ந்து வந்தது தமிழ் இசை என்பதும், தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகம், கேரளம் ஆகிய தென்னிந்திய மாநிலங்களிலும், இலங்கை, சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளிலும் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் கர்நாடக இசை என்ற பெயரில் வழங்கிவருவது தமிழ் இசையே என்பதும் இசை ஆய்வாளர்களது கருத்தாகும்.
பண்டைத் தமிழ் இசை அறிஞர்கள் ஏழுவகை இசைக்குறியீடுகளைக் கொண்டு, நூற்றுக் கணக்கான பண்களைக் கண்டுபிடித்தனர். பலநூற்றாண்டுகளாக அவற்றைப் பயன்படுத்திப் பாதுகாத்துவந்தனர். பன்னாட்டு மக்களும், இசை ஆர்வலர்களும் அவற்றை அறிந்து வியந்தார்கள். கற்று மகிழ்ந்தார்கள்.
அகத்தியர் காலத்தில் 108 பண்கள் இருந்தன என்று அறிஞர்கள் கூறுகின்றார்கள். பண்டைத் தமிழகத்தில் 11,999 பண்கள் இருந்தமையை அடியார்க்கு நல்லார் உரை பதிவுசெய்திருக்கின்றது. முன்னூற்றுக்கும் குறைவான பண்களே இப்போது இசைக் கலைஞர்களின் அறிவுக்கு எட்டுவனவாக உள்ளன.
பிற்காலத்தில் தோன்றிய எண்ணற்ற இசைநூல்கள் தமிழிசையின் பெருமைக்குச் சான்றாக அமைகின்றன.
சிலப்பதிகாரத்தின் இசை நுணுக்கங்களை ஆராய்ந்த முத்தமிழ் வித்தகர் விபுலானந்த அடிகளாரின் யாழ்நூல் இருபதாம் நூற்றாண்டில் இசைத்தமிழுக்குச் சூட்டப்பட்ட இணையற்ற மகுடமெனத் திகழ்கிறது.
தௌளுதமிழ் தேன்பாகை அள்ளியிறைக்கும் பன்னிரு திருமுறைகளில் உள்ள 18,350 பாடல்களும், கல்லும் கசிந்துருகும் கனிவான பக்தி இசைப்பாடல்களாகும்.
தேவார திருவாசகங்கள் பல்வேறு பண்களுடனும், தாளங்களுடனும் அமைந்து, தமிழிசையின் மேன்மையைப் பறைசாற்றிக்கொண்டருக்கின்றன. இவை தோன்றிய பக்தி இலக்கிய காலத்தில் இந்தியத் துணைக்கண்டம் முழுவதுமே இலங்கிநின்றது தமிழ் இசை மட்டுமேயாகும்.
பன்னீராழ்வார்கள் பாடியருளிய அழகான பிரபந்தங்கள், அருணகிரியாரின் திருப்புகழ், சித்தர் பாடல்கள், கும்மி, சிந்து, குறவஞ்சி, பள்ளு, தெம்மாங்கு, நாட்டுப்பாடல்கள், கீர்த்தனைகள், நல்ல தழிழில் வல்ல புலவர்களால் கொள்ளை கொள்ளையாக எழுதிக் குவிக்கப்பட்டுள்ள தனிப்பாடல்கள், முறையான பண்ணோடு அழகாகப் புனையப்பட்டுள்ள தொகையான பண்ணிசைப் பாடல்கள், நித்தமும் தோன்றிக்கொண்டிருக்கும் புத்தம் புதிய இசைப் பாடல்கள், ஆகிய எல்லாமே இசைத்தமிழுக்கு இனிமை சேர்த்துக்கொண்டிருக்கின்றன.
இவ்வாறு பல்லாயிரம் பல்லாயிரமாக இசைப்பாடல்கள் தமிழ்மொழியில் குவிந்து கிடக்க, அவை மறந்து, நிலை குலைந்து தமிழ் இசை மேதைகளும், நாட்டியக் கலை மேதை களும் கருத்துத் தெரியாத வேற்று மொழிகளிலே பாடுகிறார்கள், பாட்டுக்கு ஆடுகிறார்கள், தமிழ் மொழியைச் சாடுகின்றார்கள், தமிழ் இசைக்குத் திரையை மூடுகின்றார்கள்.