RSS

தொலைந்த தமிழைசை

இசை என்பது மிக்க மென்மையும், நுண்மையும் வாய்ந்து செவிப்புலனைக் குளிர்வித்து உள்ளத்தைக் கனிவிக்கும் இனிய ஓசையேயாகும். இனிய ஒலிகள் செவி வழிப்புகுந்து, இதய நாடிகளைத் தடவி, உயிரினங்களை இசையவும், பொருந்தவும் வைக்கின்ற பொழுது அவை இசை என்ற பெயரைப் பெறுகின்றன என்று குறிப்பிடுகிறார் ச.வே. சுப்பிரமணியன் அவர்கள். இசைக்கலை ஆயக்கலைகள் அறுபத்து நான்கினுள் ஒன்றான சிறப்புடைய சுவையாகும்

பாரம்பரிய இசை என்றாலே நமக்கு கர்நாடக சங்கீதம் தான் ஞாபகத்தில் எழும். கர்நாடக இசை என்ன என்பதை நாம் அறிவோம். ஆனால் தமிழிசை என்றால் என்ன என்பதை நம்மில் எத்தனைப் பேர் அறிவோம்? தமிழிசை வேறு கருநாடக இசை வேறு எனச் சிலர் கருதுகின்றனர். அது தவறு. தமிழிசை என்பதுதான் கருநாடக இசை; கருநாடக இசைத்தான் தமிழிசை. இரண்டும் வேறுபட்டவை அல்ல. ஒன்றே. வடக்கில் உள்ள பல நாடுகளில் கடல் இல்லை. அதனால் கடற்கரையும் இல்லை. ஆனால் தமிழகமோ மூன்று பக்கங்களிலும் கடல்களையும் கடற்கரைகளையும் கொண்டது. சோல மண்டல கடற்கரை, பாண்டி மண்டலக் கடற்கரை, சேர மண்டலக் கடற்கரை என்ற பெயர்கள் இன்றுவரை மக்களிடையே காணப்படுகின்றதாம். இதனால் தமிழகத்தைக் கரை நாடு என்றும் தமிழிசையைக் கரை நாட்டு இசை எனவும் வடக்கேயுள்ளனர் குறிப்பிட்டு வந்தனராம். அதையே பலரும் ”கர்நாட்டிசை” என்றனர்.  ஆங்கிலேயனும் அதை “கர்நாட்டிக் இசை” என்றான். ஆகவே கரை நாட்டு இசை என்பது தமிழ் இசையைக் குறிப்பது. காலப்போக்கில் வடமொழியின் மீது பற்றும், வட நாட்டின் மீது காதலும் கொண்ட சிலர், கரை நாட்டு இசையை, வட நாட்டு இசை என்றும், தமிழிசை இதற்கு முற்றும் மாறானது என்றும் கூறத் தொடங்கினர். தமிழில் உள்ள இசைக்கலை நூல்கள் வடமொழியில் பெயர்த்து எழுதினர்

இசை என்ற சொல்லுக்கு இசையவிப்பது, வயப்படுத்துவது ஆட்கொள்வது என்று பல பொருள் உண்டு. இசை என்ற சொல் மக்கள் மனதை வயப்படுத்துவது, அசையவிப்பது எனும் பொருளைத் தருகிறது என்பர் எம்.எம்.தண்டபாணி தேசிகர். இசை என்பது மிக்க மென்மையும், நுண்மையும் வாய்ந்து செவிப்புலனைக் குளிர்வித்து உள்ளத்தைக் கனிவிக்கும் இனிய ஓசையையேயாகும். இயற்றமிழே பண்ணோடு கலந்து தாளத்தோடு நடைபெறின் அதுவே இசைத் தமிழாகின்றது

கர்நாடக இசையென்று இப்பொழுது கூறப்படுகின்ற தமிழிசைக்கு வடமொழி நூலாகிய சங்கீத இரத்தினாகரம் என்ற நூலே இலக்கண நூலாகக் கருதப்பெற்று வருகின்றது. ஆனால் உண்மையில் நம் தமிழ் இசையிலக்கணச் செம்பாகங்கள் சிலப்பதிகாரத்தில் காணப்பெறும் ஒவ்வொரு காதையினுள்ளும் இரத்தனமணிபோல நுட்பமாக பொதிந்துள்ளன --(மகா வித்வான் வா.சு கோமதி சங்கர் ஐயர்)--

இசையென்பது தமிழன் பண்பாட்டில் சிறப்பு வாய்ந்த கலையாகும். இக்கலை முழுக்க முழுக்க ஒலி உருவினாலாய கலவையே ஆகும். இத்துணைச் சிறப்பு வாய்ந்த ஒரு கலையை முதன்முதலாகக் கண்டவர்கள் நம் தமிழரே ஆவர். இசைக்கலையின் சிகரமாக விளங்குவது நிறமென்ற இராகமே ஆகும். இவ்வாறான நிறத்தை ஆளத்தி செய்வது என்பது தமிழிசையில் மட்டுமே. இவ்வழக்கு வேறு எந்த நாட்டின் இசைக்கலையிலுமே இல்லை. இத்துணை மாண்பு பெற்று அமைந்துள்ள இசைக்கலைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றியதாக உரைக்கப்படும் சிலப்பதிகாரம் என்ற நூலே இலக்கண நூலாக இப்போது மதிக்கப் பெறுகின்றது. அது காப்பிய இலக்கியமாக மட்டுமின்றி இசைக்குறிய இலக்கண நூல்தானென்று மதித்து ஏற்றுகொள்ளுதல் வேண்டும் (இசைத்தமிழ் இலக்கண விளக்கம் மதுரை காமராசர் பல்கலைக்கழகம்)

தொல்காப்பியம், எட்டுத் தொகை பத்துப்பாட்டு முதலிய சீரிய நூல்களில் தமிழ்ப் பேரறிஞர்கள் சுட்டியுள்ள ஏராளமான இசைக் குறிப்புகளை விளங்கிக் கொள்ளலாம். சிலம்பின் ஆசிரியரும் சேரநன்னாட்டின் இளவரசருமான இளங்கோவடிகளை இந்திய நாடு கண்ட இசை மாமேதை என்றும், இசை இலக்கணத்தை அறிவியல் முறையில் அமைத்துத் தந்துள்ள இசை இலக்கணத் தந்தை என்றும் கூறலாம்.

     அடுத்து எழுநூறு ஆண்டுகளுக்கு முன் எழுந்த வடமொழி நூலாகிய சங்கீத இரத்தினாகரம் இசையிலக்கணத்தைச் செம்மையாகக் கூறும் நூலாக மதிக்கப்பெறுகின்றது.  சங்கீத இரத்தினாகரத்தை உற்று நோக்கினால் சிலப்பதிகாரத்தில் கூறப்பெற்றுள்ள இசைநுட்ப பகுதிகளே அங்கு வடமொழியில் வரப்பெறுதலைக் காணலாம். எனவே இவ்விரு நூல்களிலும் கூறப்பெறும் இசைச் செய்திகள் தான் இசையின் இலக்கணத்தை ஒன்றுபடுத்திக் காட்டுகின்றன.

தமிழ் மக்கள் பண்டைக்காலம் தொட்டு இசையை எவ்வாறு போற்றி வந்தனர் என்பதைத் தமிழ் நூல்களின் துணை கொண்டு தெரிந்துகொள்ளலாம். தமிழின் தொன்மை நூலான தொல்காப்பியத்தில் இசை பற்றிய குறிப்புகளோடு இசைவாணர்கள் மற்றும் பண்கள் பற்றிய எண்ணற்ற செய்திகள் இடம் பெற்றுள்ளன. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை எனும் ஐவகை நிலங்கட்கும் வெவ்வேறான யாழ், அல்லது பண் கூறப்படுவதினின்றும், அக்காலத்தில் இசைக்கலைப்பெற்றிருந்த சிறப்பும், ஐவகை நிலமக்களும் பெற்றிருந்த இசையுணர்ச்சியும் பெறப்படுகின்றது.

தொல்காப்பிய இசைக் குறிப்புகளை விளக்குவது சிலம்பின் இசை இலக்கணமே, தமிழிசை இலக்கணம் சிலம்புதொட்டு இன்று வரை சங்கிலித் தொடர்போல் தொடர்ந்து வருகிறது என்கிறார் டாக்டர் எஸ். இராமநாதன். தமிழில் ஒப்பற்ற இசைப்பாக்களாக நமக்குக் கிடைத்திருப்பன சிலப்பதிகாரத்தில் உள்ள கானல் வரி, வேட்டுவ வரி, ஆய்ச்சியர் குரவை, ஊர்குழ் வரி, குன்றக்குரவை, வாழ்த்துக்காதை எனும் ஆறு காதைகளும் ஆகும். இந்த ஆறு காதைகளுமே இசைப்பாக்களின் தொகுதியாகும். இனி தமிழ் மக்கள் பண்டைக்காலம் தொட்டு இசையை எவ்வாறு போற்றி வந்தனர் என்பதைத் தமிழ் நூல்களின் துணை கொண்டு நோக்கலாம். தமிழின் தொன்மை நூலான தொல்காப்பியத்தில் இசை பற்றிய குறிப்புகளோடு இசைவாணர்கள் மற்றும் பண்கள் பற்றிய எண்ணற்ற செய்திகள் இடம் பெற்றுள்ளன

     இசையில் பண் என்றும் திறமென்றும் இருவகை உண்டு. பண்கள் ஏழு நரம்புகளும் கொண்டவை. ஏழு நரம்புகளும் நிறைந்த ராகம் பண் எனப்படும். நரம்பு என்பது இங்கு  ரி      நீ  என்றும் ஏழு ஸ்வரங்களைக் குறிக்கும். இந்த ஏழு ஸ்வரங்களை வடமொழியில் ஷட்ஜம், ரிஷபம், காந்தாராம், மத்தியமம், பஞ்சமம், தைவதம், நிஷாதம் என்று குறிப்பிடுவர். இதுவே தமிழில் குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் எனப்படும். இவ்விசைகளின் ஓசைக்கு வண்டு, கிளி, குதிரை, யானை, குயில், தேனி, ஆடு ஆகியவையும், இவற்றின் சுவைக்கு முறையே தேன், தயிர், நெய், ஏலம், பால், வாழைக்கனி, மாதுளங்கனி, ஆகியவையும் உவமை கூறப்பட்டுள்ளதுடன், ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள எனும் உயிர் நெட்டெழுத்துக்கள் ஏழும் இவற்றின் எழுத்தாகவும் குறிப்பிடப்பட்டுள்ளன. பண்கள் பலவகைப்படும். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை, எனப் பண்கள் ஐந்து என்பர் - ந.சி. கந்தையாபிள்ளை.  

இறைவனையே இசைமயமாகக் கண்டவர்கள் தமிழ் மக்கள். ஏழிசையாய் இசைப்பயனாய் இருப்பவனே இறைவன் என்று குறிப்பிட்டனர். இறைவனை இசைக் கொண்டு பாடியே வணங்கினர். இம்முறையில் பண்ணோடு கூடிய பக்தி பாடல்கள் பல தமிழ் மொழியில் உள்ளன. இவற்றுள் தேவாரம், திருவாசகம், நாலாயிரப்பிரபந்தம், திருப்புகழ் முதலியவை குறிப்பிடத்தக்கவை. இசையின் சிறப்புணர்ந்த நம் முன்னோர் ஆதிமூலமான ஆண்டவனும் இசையை விரும்புகின்றான், இசை பாடுகின்றான், என்பதுடன் இசையின் வடிவாகவும், இசையின் பயனாகவும் உள்ளான் என்று கண்டறிந்தனர்.

தமிழ் மொழி தோன்றிய காலமே, தமிழிசைத் தோன்றிய காலம். தமிழ் மக்களின் எண்ணம், சொல், செயல், வாழ்வு அனைத்தும் இசைக் கலந்தவையாகவே காட்சியளிக்கின்றன. அவை, தாலாட்டு இசை, சோறூட்ட இசை, திருமண இசை, ஒப்பாரி இசை மற்றும் இன்னும் பல. இசை என்பது வாய்யினால் பாடுவது மட்டுமல்ல; கருவியினால் இசைப்பதும் இசையே ஆகும். அவை தோல் கருவி, துளைக்கருவி, நரம்புக்கருவி என மூவகைப்படும். இவற்றை விழா நாட்களிலும் இசைத்து முழக்குவது மட்டுமல்ல பிற நாட்களிலும் இசைத்து முழக்குவதுண்டு. மணப்பறை, பிணப்பறை, போர்பறை, விழாப்பறை என்ற சொற்கள் இவற்றை பெய்பிக்கின்றன.

குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை, எனப் பண்கள் ஐந்து என்கிறார் ந.சி. கந்தையாபிள்ளை. இப்பண்கள் வடமொழியில் ராகம், என்று கூறப்படுகின்றன. இதனை மேளகர்த்தா, ராகம் அல்லது ஐனகராகம் என்றும் கூறுவர். ‘பண்ணிலிருந்து திறங்கள் பிறக்கும்நிரை நரம்பிற்றே திறமெனப்படுமே’ என்ற திவாகரச் சூத்திரம் பண்கள் மற்றும் திறங்களின் இலக்கணத்தை விளக்கும் திறங்களே தற்போது ஜன்யராகம் என்று வழங்கப்படுகின்றன.

தமிழிசைக் கருவிகளுக்குப் பெயரிட்ட தமிழ் மக்களும், தமிழுக்கென்று சிறப்பாக உள்ள “ழ” என்ற எழுத்தை அச்சொல் ஒவ்வொன்றிலும் வைத்து தோல் கருவிக்கு ‘முழவு’ என்றும், துளைக்கருவிக்கு ‘குழல்’ என்றும், நரம்புக் கருவிக்கு ‘யாழ்’ என்றும் பெயரிட்டிருக்கின்றனர். இவை அனைத்தும் தமிழனின் சொத்து.

தமிழ்ச் செய்யுட்டுரைக் கோவை போன்ற பல தமிழிசை நூல்கள் காலத்தால் அழிந்து விட்டன. சங்கீத மும்மூர்த்திகளான தியாகராச சுவாமிகள், சியாமா சாஸ்திரிகள், முத்துசுவாமி தீட்சிதர் பல கீர்த்தனைகளை உருவாக்கினர். அவர்கள் கீர்த்தனைகளைத் தெலுங்கு மொழியில் பாடினர். ஆனால் தமிழிசை ஆதி மும்மூர்த்திகள் என முத்துத் தாண்டவர், அருணாசலக் கவிராயர், மாரிமுத்துப் பிள்ளை என்னும் முப்பெரும் இசை அறிஞர்கள் சீர்காழியில் வாழ்ந்து கருநாடக இசையை செப்பமுற வளர்த்தனர். ஆதி மும்மூர்த்திகள் பாடிய இசைப்பாடல்கள் புகழ்பெற்ற தமிழ்ப்பாடல்கள் ஆகும்.

மேலும், மாபெரும் தமிழிசை மேதை இலங்கை அரசன் இராவணனே. இராவணன் சிறந்த யாழ்பாணன் (யாழ் மீட்டுபவர்). அவன் இயற்றிய இசை நூலின் பெயர் இராவணியம் என்று சிங்காரவேலு முதலியாரின் அபிதான சிந்தாமணியில் (ecyclopedia of tamil literature) குறிப்படப்பட்டுள்ளது. இராவணன் தமிழன் என்று அனைவரும் அறிந்த ஒன்றே. தமிழிசை அங்கும் குடிக்கொண்டிருந்தது என்று சொல்வதில் சிறிதும் ஐயமுல்லை

காலத்தால் தமிழிசை மட்டுமல்லாமல் தமிழிசைக் கருவிகளும் பல நம் கைவிட்டு நழுவி தற்போது திரிந்து வேறு பெயர்களில் உலா வருகின்றன. தமிழ் மக்களுக்கே தன் சொத்து எது என்று அடையாளம் தெரியாத அளவிற்கு மாற்றம் கண்டு விட்டது தமிழிசை என்றும் கூறலாம். பலர் தமிழிசை அழிந்துவிட்டது என்று கூறுகின்றனர். ஆனால் தமிழிசை திரிந்து களவுப்போய் விட்டது என்பதே உண்மை

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS