திருமுனைப்பாடி நாட்டில் திருவாமூரில் புகழனார்க்கும், மாதினியார்க்கும் மகனாய்த் தோன்றினார். இவர் இயற்பெயர் மருள் நீக்கியார் . இளம் வயதில் பெற்றோரை இழந்தார். சூழ்நிலையால் சமண சமயம் சேர்ந்து ‘தரும சேனர்’ ஆனார். சூலைநோய் ஏற்பட, தமக்கை திலகவதியாரின் வேண்டுகோளுக்கிணங்க மீண்டும் சைவரானார். ‘கூற்றாயினவாறு’என்று முதல் பதிகம் பாடினார். இவர் முதலாம் மகேந்திரவர்மன் என்னும் பல்லவன் காலத்தவர், மன்னன் சமண சமயத்தினன். எனவே இவர் சைவத்திற்கு மாறியதும் சமணர்கள் மன்னன் மூலமாகப் பலவாறு இடையூறுகள் செய்தனர்.
“நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்” (ஆறாம். 98,1) என்று கூறித் திருத்தாண்டகம் பாடி இறைவன் அருள்நோக்கி வாழ்ந்தார். வாகீசர், அப்பர், தாண்டகவேந்தர் என்ற சிறப்புப் பெயர்கள் இவருக்கு உண்டு. தலங்கள் தோறும் சென்று உழவாரப்பணி செய்து சைவத்தைப் பரப்பினார். மேலும் மன்னனையும் சைவனாக மாற்றினார் என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாம். வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய, வாழ்க்கைக்குத் தேவையான உண்மை நெறிகள் பலவற்றைத் தம் பாடல்களில் நாவுக்கரசர் உணர்த்தியுள்ளார்.
“மெய்ம்மையாம் உழவைச் செய்து” என்று தொடங்கும் (நான்காம், 96,2) பக்திப்பதிகப் பாடல், சிவகதியாம் நற்கதி அடையும் வழியைக் கூறுவதாகும். வாழ்க்கையாகிய பிறவிப் பெருங்கடைலைக் கடக்க நமக்குச் சிறப்பாக உதவுவது, நல்ல மனமும், நல்ல தெளிவான அறிவும் ஆகும். இதனை ‘மனம் எனும் தோணி பற்றி’ (நான்காம். 46, 2) எனும் பாடல் வழியாக நமக்கு உணர்த்துகின்றார்.
“தமிழோடு இசை பாடல் மறந்தறியேன் “ (நான்காம். 1,6)
என்று தமிழ் மரபைப் பின்பற்றிப் பாடியுள்ளார். அகப்பொருள் சுவை பொருந்திய பாடல்களும் பாடியுள்ளார்.
‘முன்னம் அவனுடைய நாமங் கேட்டாள்’ (ஆறாம். 25,7) என்னும் பாடல் மிகச் சிறந்த அகப்பொருள் பொதிந்த பாடலாகும். இவருடைய பாடல்கள் 4 , 5, 6 ஆகிய திருமுறைகளாக விளங்குகின்றன. இவை திருநேரிசை, திருக்குறுந்தொகை, திருத்தாண்டகம் எனப் பல வகைகளாக அமைந்துள்ளன.
என் கடன் பணி செய்து கிடப்பதே - (ஐந்தாம். 19, 9) என்ற கோட்பாட்டுடன் வாழ்ந்தவர்.
அவர் காலத்தே வாழ்ந்த அப்பூதியடிகள் எனும் அந்தணர் திருநாவுக்கரசு என்னும் பெயரை மந்திரம்போல் போற்றி, அவரையே தெய்வமாக மதித்து வழிபட்டு வந்தார். அப்பர் பாடியனவாக இப்போது 3066 பாடல்களே நமக்குக் கிடைத்துள்ளன.
0 comments:
கருத்துரையிடுக