சுந்தரர், திருமுனைப்பாடி நாட்டில் திருநாவலூரில் சடையனார்க்கும், இசைஞானியார்க்கும் மகனாகத் தோன்றினார். நரசிங்க முனையரையர் என்ற மன்னரால் வளர்க்கப்பட்டார். திருவெண்ணெய் நல்லூரில் திருமணத்தின்போது இறைவனால் தடுத்து ஆட்கொள்ளப்பட்டு, “வன்தொண்டர்” ஆனார். பின்னர்த் திருவாரூரில் பரவையாரையும், திருவொற்றியூரில் சங்கிலியாரையும் மணந்து வாழ்ந்தார். தம்பிரான் தோழர், நாவலூரர், வன்தொண்டர் என்ற பெயர்கள் உடையவர்.
சிவபெருமான் இவருக்காகப் பரவையாரிடம் தூது சென்றதாகப் பெரியபுராணம் கூறுகிறது. இவர் காலம் கி.பி. 8 ஆம் நூற்றாண்டு என்பர். இவருடைய பாடல்கள் ஏழாந்திருமுறையாகும். 1026 பாடல்களே உள்ளன. மனிதரைப் பாடாது இறைவனைப் பாடவேண்டும் என்பது இவருடைய கொள்கை. இவருடைய பாடல்களில் இயற்கை வருணனையும்
வரலாற்றுக் குறிப்புகளும், நாடு, நகர் பற்றிய செய்திகளும் காணப்படும். மற்றொரு நாயனராகிய சேரமான் பெருமாள் இவருடைய தோழராவார். இவர் வெள்ளையானை மீதேறிக் கயிலை சென்றடைந்தார் என்பதைப் பெரிய புராணம் விரிவாகக் கூறுகிறது.
தமக்கு முன் சைவத் தொண்டு செய்த சிவனடியார்களை- நாயன்மார்களை இவர் போற்றிப் பாடியுள்ளார். சுந்தரர் தேவாரத்தில் உள்ள திருத்தொண்டத் தொகை நாயன்மார்களின் பெயர்களையும் சிறப்புகளையும் கூறுகிறது.
பெரியபுராணம் என்னும் நூல் அமைந்திடக் காரணமான திருத்தொண்டத்தொகை பக்தி இலக்கிய வரலாற்றில், குறிப்பாகத் தமிழ் இலக்கிய வரலாற்றில் சிறப்பான ஓர் இடத்தைப் பெற்றுள்ளது. சுந்தரத் தமிழில் தலங்கள் தோறும் சென்று சுந்தரர் பாடியுள்ளார்.
இறைவனே எல்லாம் அருளுபவன். ஆகையால் செத்துப் பிறக்கின்ற மானிடரைப் புகழ்ந்து இச்சகம் பேசுதல் தவறாகும் என்று குறிப்பிட்டுள்ளார். ஞானசம்பந்தர் பதிகங்களைப் போல்‘கடைக்காப்பு’ அமைந்து 11 பாடல்களாக, திருப்பாட்டுப் பதிகங்கள் என்று இவருடைய பதிகங்கள் காணப்படுகின்றன. இசையோடு கூடியதாய், அழகிய தமிழில் அமைந்துள்ள இவர் பாடல்கள் சுந்தரர் தேவாரம் எனப் போற்றப்படுகின்றன.

Time in Kuala Lumpur 





0 comments:
கருத்துரையிடுக