சீர்காழியில் அந்தணர் குலத்தில் சிவபாத இருதயருக்கும், பகவதி அம்மையாருக்கும் மகவாகத் தோன்றினார். மூன்று வயதில் உமை அம்மையின் ஞானப் பால் கிடைக்கப்பெற்று இறைவனைப் பாடும் ஆற்றலைப் பெற்றவர். ‘தோடுடைய செவியன்’ என்பது அவர் பாடிய முதல் பதிகம். தொடக்க காலத்தில் தந்தையின் தோள்மீது அமர்ந்து ஊர் ஊராகச் சென்று இசையுடன் தமிழ் பரப்பி இறைவனை வழிபட்டார் .
‘நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞான சம்பந்தன்’ என்று சுந்தரர் தம் பாடலில் இவரைப் பாராட்டிப் பாடியுள்ளார். பிறகு இறைவன்அவருக்குப் பொற்றாளம், முத்துச் சிவிகை, முத்துப் பல்லக்கு, முத்துச் சின்னம் முதலியவற்றை அளித்தார். பின்னர் முத்துச் சிவிகையிலேறித் தமிழகத்தின் பல தலங்களுக்கும் சென்று இறைவனைப் போற்றி வழிபட்டார். திருநீலகண்ட யாழ்ப்பாணரும் அவரது மனைவியாரும் , பிற அடியார்களும் உடன் வர, திருத்தலங்களுக்குச் சென்று பதிகங்கள் பாடினார். 23 வகைப் பண்களில் தம் பாடல்களைப் பாடியுள்ளார்.
கூன் பாண்டியன் மன்னனின் மனைவி மங்கையர்க்கரசிமற்றும் அமைச்சர் குலச்சிறையாரின் வேண்டுகோளுக்கு இணங்கி மதுரை சென்றார். அப்போது ‘நாளும் கோளும் சரியில்லை’ செல்லவேண்டாம் என்று தடுத்த போது, சிவன் உள்ளத்தில் இருப்பதால் நாளும் கோளும் ஒன்று செய்யாது எனக் கூறிக் கோளறு பதிகம் பாடினார். அவை சைவ அடியார்களால் இன்றும் மந்திர மொழிகளாகப் போற்றப்படுகின்றன. சம்பந்தர் மிகுந்த தமிழ்ப் பற்றுடையவர் என்பதைத் தாம் பாடுகின்ற பாடல்களில் தமிழ்ஞானசம்பந்தன் என்றே இணைத்தும் குறித்தும் பாடுகின்றார். வடமொழி ஆதிக்கம் பெற்றிருந்த காலத்தே, வேதநெறி தழைத்தோங்க, மிகு சைவத்துறை விளங்க, தமிழால் இறைவனை ஆட்படுத்தியவர் ஞானசம்பந்தர். பல பாடல்களில் திருநெறிய தமிழ், தண்தமிழ், இன்தமிழ், ஞானத் தமிழ், ஞாலம் மல்கு தமிழ் , செந்தமிழ், முத்தமிழ் என்ற தொடர்களால் குறித்துள்ளார்.
பதிகம் என்பது பத்துப் பாடல்களைக் கொண்டது. பெரும்பாலும் ஒவ்வொரு பதிகத்திலும் எட்டாம் பாடலில் இராவணன் கயிலாய மலையைத் தூக்க முயன்று துன்பப் பட்டதையும், ஒன்பதாம் பாடலில் பிரமனும் மாலும் தேடிக் காண முடியாத சிவன் என்றும், பத்தாம் பாடலில் சமண பௌத்த மதத் துறவிகளின் போலி வாழ்க்கையைக் கடிந்தும், எள்ளி நகையாடியும், பதினோராம் பாடலில் தம் பெயரை இணைத்தும் அப்பதிகத்தைப் படிப்பதனால் உண்டாகும் பயனைக் குறிப்பிட்டும் பாடியுள்ளார்.
சொல்மாலை ஓதும் அடியார்கள் வானில்
அரசாள்வர் ஆணை நமதே.
(இரண்டாம் திருமுறை, பதிகம் 85,11)
வானிடை வாழ்வர், மண்மிசைப் பிறவார் மற்றிதற்கு
ஆணையும் நமதே
(மூன்றாம் திருமுறை, பதிகம் 118,11)
என்று ஆணையிட்டுப் பாடுவார் ஞான சம்பந்தர்.
திருஞானசம்பந்தர் செய்த அற்புதங்கள்
தேவாரங்கள் பலவும் மந்திரங்கள் என்று அறுதியிட்டுக் கூறலாம். ஞானசம்பந்தர் பல அற்புதங்கள் செய்தார். திருச்செங்குன்றூரில் மக்கள் குளிர் சுரத்தால் துன்புறுவதை அறிந்து பதிகம்பாடிக் குளிர்சுரத்தைப் போக்கினர். இவை போன்றவை பல. முக்கியமாகக் குறிப்பிடத்தக்கது : மந்திரமாவது நீறு என்னும் திருநீற்றுப் பதிகம் பாடி. கூன் பாண்டியனது வெப்பு நோய் நீக்கினார். பிறகு, சமணர்களுடன் அனல்வாதம் (சமயக் கருத்துகளை ஓலையில் எழுதித் தீயில் இடுதல்), புனல்வாதம் (ஆற்றில் இடுதல்) புரிந்து சமணர்களை வென்றார். இதனால் அரசன் சைவ சமயத்துக்குத் திரும்பினான். பாண்டிய நாடும் சைவத்தைத் தழுவியது. பக்தி இயக்கத்துக்குக் கிடைத்த வெற்றி இது.
பக்தியால் நிறைவு பெற வேண்டிய மனித உள்ளம் ஈனக் கவலையால் துன்புறுவதைக் கண்டு ஞானசம்பந்தர் ‘நினைப்பெனு நெடுங்கிணற்றை நின்று நின்றயராதே’ (முதல். 118,8) என்று தேற்றி, உய்யும்வழி கூறுகிறார். எவ்வளவுதான் முயற்சி செய்தாலும், ஊழ் வலிமிக்கதாக உள்ளதே என நலிவோருக்குப் ‘பக்தி எல்லாத் தடைகளையும் நீக்கி நன்மை பயக்கும். ஆகவே ‘பக்தி செய்ம்மின்’ என்று பாடுகிறார்.
தலங்கள் தோறும் சென்று பக்தியையும் தமிழையும் வளர்த்த காழியர்கோனின் (சம்பந்தரின்) பாடல்களில் இயற்கை வருணனை தனியிடம் பெற்றுச் சிறப்புடன் திகழ்கின்றது. இவருடைய பாடல்கள், சைவத் திருமுறைகளில் முதல் மூன்று திருமுறைகளாக இடம் பெற்றுள்ளன. புதிய யாப்பு வடிவங்களைக் கையாண்டு ஏக பாதம், திருஎழுகூற்றிருக்கை, மாலைமாற்று, நாலடி மேல் வைப்பு, ஈரடிமேல் வைப்பு, கோமூத்ரி முதலிய பாடல் வகைகளும், யமகம், மடக்கு முதலிய சொல்லணிகளும் அமையப் பாடியுள்ளார். இவருடைய காலம் 7 ஆம் நூற்றாண்டு.
0 comments:
கருத்துரையிடுக